Apr 29, 2012

ஞாபக சக்தியை அதிகப்படுத்த…

சும்மா ஒரு ஸ்டைலுக்காக, வேலைப்பளு, மன உளைச்சல் மற்றும் காதல் தோல்வியை மறக்க போன்ற பல்வேறு காரணங்களினால் விளையாட்டாக புகைப்பழக்கம் தொடங்குகிறது. விளையாட்டு வினை ஆனது என்பது போல விளையாட்டாக தொடங்கும் இந்த புகைப்பழக்கம் ஒருவரது புத்திக்கூர்மையை குறைத்துவிடுகிறது, ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் கண்புரை நோயை ஏற்படுத்துகிறது என்று குண்டைத் தூக்கிப்போடுகின்றன புகைப் பழக்கம் குறித்த ஆய்வுகள்.
புகைப்பழக்கத்தின் பாதிப்புகள் குறித்து இங்கிலாந்தின் நார்த்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் ஞாபக சக்தி குறித்த ஒரு செயல்முறை
தேர்வு நடத்தப்பட்டது. இதில், சராசரியாக 2 1/2 வருடங்களுக்கு முன்பு புகைப்பழக்கத்தை கைவிட்டவர்கள், புகைப்பவர்களைவிட 25 சதவிகிதம் நன்றாகவும், புகைப்பழக்கமே இல்லாதவர்கள் 37 சதவிகிதம் நன்றாகவும் செயல்பட்டது தெரியவந்தது.
புகைப்பழக்கத்தை கைவிடுவது உடல் நலனுக்கு பல நன்மைகளை உண்டாக்கும் என்பது நாமனைவரும் அறிந்த செய்தி. ஆனால், புகைப்பழக்கத்தை கைவிடுவதால் அறிவு சார்ந்த செயல்திறனும் அதிகரிக்கிறது என்பது இந்த புதிய ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்கிறார் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர், முனைவர் டாம் ஹெபர்னான்!
இதற்கு முந்தைய ஆய்வுகளில் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் `பின்னோக்கிய ஞாபக சக்தி' (அதாவது, ஒரு விஷயத்தை படித்து பின்னர் தேவைப்படும்போது அதை நினைவுகூரும் திறன்) மேம்படுகிறது என்பது தெரியவந்தது. ஆனால், இந்த புதிய ஆய்வின் நோக்கம் ஆய்வில் கலந்துகொண்டவர்களின் `தொலைநோக்கு ஞாபக சக்தி'யை (அதாவது, ஒரு குறிப்பிட்ட செயலை ஞாபகம் வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதை செயல்படுத்தும் திறன்) கணக்கிடுவதே! உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மாத்திரையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக்கொள்ள தொலைநோக்கு ஞாபக சக்தி அவசியம்.
அதெல்லாம் சரிதான், புகைப்பழக்கம் எப்படி ஞாபக சக்தியை பாதிக்கிறது என்பது குறித்து எதுவும் தெரியவந்துள்ளதா?
புகைப்பழக்கம் எப்படி ஞாபக சக்தியை பாதிக்கிறது என்பது குறித்து திட்டவட்டமாக எதுவும் தற்போது தெரியவில்லையென்றாலும், நீண்டகால புகைப்பழக்கத்துக்கும் மூளையின் சில திசுக்கள் சிதைந்துபோவது அல்லது மூளையின் சில பாகங்களில் திசுத்திறன் இழப்பு ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டது. மேலும், ஆய்வாளர் களின் யூகப்படி, புகைப்பழக்கமானது மூளையின் ப்ரீப்ரான்டல் கார்டெக்ஸ், ஹிப்போகேம்ப்பஸ் அல்லது தலாமஸ் ஆகிய பல பகுதிகளை சேதப்படுத்தக்கூடும் என்று தெரிகிறது. இவை அனைத்தும் `தொலை நோக்கு ஞாபக சக்தி'யுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது!
சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை, பல்லாயிரக்கணக்கான புகைப்பவர்களை நீண்டகாலம் சோதனை செய்வதன்மூலம் கிடைக்கும் முடிவுகளைக்கொண்டு மீண்டும் ஊர்ஜிதம் செய்ய வேண்டியது அவசியம் என்கிறார் மூத்த ஆய்வாளர் டாம் ஹெபர்னான்.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? புகைப்பதால் கிக்கு மட்டும் ஏறவில்லை, நமக்குத் தெரியாமலேயே நமது தொலைநோக்கு ஞாபக சக்தியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது என்று தெரிகிறது. ஆக, இனி பொதுநல நோக்குள்ளவர்கள் `புகைக்காதே புகைக்காதே... உன் தொலைநோக்கு ஞாபக சக்தியை குறைக்காதே குறைக்காதே' என்று கோஷம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போனால்கூட தப்பில்லை என்றே தோன்றுகிறது!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...