கடந்த காலத்தில் நிலவிய பல தவறான கொள்கைகளைத் தெளிவுபடுத்துவதற்கு இந்த நூல் உறுதுணை புரிந்தது. அதுவே இந்நூலின் பெருஞ்சாதனையாகும். பணந்தான் செல்வம்; ஓர் அரசு பெருமளவுத் தங்கத்தைத் தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என வற்புறுத்திய பழைய கோட்பாட்டினை ஸ்மித் இந்நூலில் வன்மையாகக் கண்டித்தார். அதே போன்று நிலந்தான் முதன்மையான பொருள்வள ஆதாரம் என்ற கொள்கையினையும் இந்நூல் மறுத்தது. மாறாக உழைப்புதான் (Labour) அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததென இது வலியுறுத்தியது. உழைப்புப் பகிர்வு (Division of Labour) வாயிலாக உற்பத்தியைப் பெருமளவுக்கு அதிகரிக்க முடியும் என ஸ்மித் உறுதியாகக் கூறினார். தொழில்துறை விரிவாக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுகிற காலங்கடந்தத் தாறுமாறான அரசுக் கட்டுப்பாடுகளை அவர் கடுமையாகத் தாக்கினார்.
நாடுகளின் செல்வம் என்ற நூலில் ஸ்மித் வலியுறுத்திய மையக் கருத்து இதுதான். தடையிலா அங்காடி (Free Market) மேற்போக்கில் ஒழுங்கற்றதாகத் தோன்றினாலும், உள்ளபடிக்கு அது தன்னையே முறைப்படுத்திக் கொள்ளும் ஒரு செயல்முறையைக் கொண்டிருக்கிறது. அதன்படி, அந்த அங்காடி, சமுதாயம் மிகுதியாக விரும்பக் கூடிய சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்படக்கூடிய பொருள்களை, சமுதாயம் விரும்புகிற வகையிலும், சமுதாயத்திற்கு தேவைப்படுகிற அளவுக்கும் தானாகவே உற்பத்தி செய்ய முனைகிறது. எடுத்துக்காட்டாக, மக்கள் விரும்பும் ஏதேனும் பொருள் பற்றாக்குறையாக இருக்கிறது எனக் கொள்வோம். அப்போது அதன் விலை ஏறுவது இயற்கை. விலை ஏற, ஏற அப்பொருளின் உற்பத்தியாளருக்கு அதிக ஆதாயம் கிடைக்கிறது. இவ்வாறு அதிக ஆதாயம் கிடைப்பதைப் பார்த்து மற்ற உற்பத்தியாளர்களும் அதே பொருளை உற்பத்தி செய்ய ஆவல் கொள்கிறார்கள். இதனால் உற்பத்தி பெருகி, முதலில் நிலவிய பற்றாக்குறை நீங்கிவிடும். மேலும், பொருளின் உற்பத்தி பெருகி, அதை உற்பத்தி செய்யும் பல்வேறு உற்பத்தியாளர்களிடையே ஏற்படும் போட்டி காரணமாக, அந்தப் பொருளின் விலை அதன் இயல்பான விலைக்கு (Natural Price). அதாவது, அதன் உற்பத்திச் செலவுக்கு (Production Cost) குறைந்து விடும். பற்றாக்குறையை நீக்கிச் சமுதாயத்திற்கு உதவி புரிய யாரும் வேண்டுமென்றே முயற்சி மேற்கொள்ளவில்லை. எனினும் அந்தப் பற்றாக்குறைச் சிக்கல் தானாகவே தீர்ந்து விட்டது. ஸ்மித்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த ஆதாயத்தையே கருத்தில் கொள்கிறான். எனினும், ஒரு மறைமுகமான கரத்தின் தூண்டுதல் காரணமாக, அவன்தான் உட்கருத்துக் கொள்ளாமலேயே, ஒரு குறிக்கோள் எட்டுவதற்கு உதவுகிறான். அவன் தன் சொந்த நலனுக்குப் பாடுபடுவதன் மூலம், தானே உதவி புரிய எண்ணியிருந்தால் எந்த அளவுக்கு உதவி புரிந்திருக்க கூடுமோ அந்த அளவைவிட மிகக் கடுமையான அளவில் சமுதாயத்திற்கு அவன் உதவி செய்கிறான். (நாடுகளின் செல்வம் புத்தகம் IV, அத்தியாயம் II).
தடையிலாப் போட்டிக்கு (Free Competition) இடையூறுகள் ஏற்படுமானால், இந்த மறைமுகக் கரம் தனது பணியை ஒழுங்காகச் செய்ய முடியாது. எனவே தடையிலா வாணிகத்தில் ஸ்மித் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மிகையான காப்பு வரிகளை (Tarriffs) அவர் தீவிரமாக எதிர்த்தார். வாணிகத்திலும், தடையிலா அங்காடியிலும் அரசு தலையிடுவதை எப்போதும் பொருளாதாரத்தின் செயல்திறனை வெகுவாகக் குறைத்துவிடும் என்றும், அதனால், இறுதியில் பொதுமக்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கருதினார். (தலையிடாமைக் (Laissez Faire) கொள்கையை ஸ்மித் கண்டுபிடிக்கவில்லை. ஆயினும், அந்தக் கொள்கையை ஊக்குவிப்பதற்கு வேறெந்த மனிதரையும் விட அவர் அரும்பணியாற்றியுள்ளார்.)
மக்கட்பெருக்கத்தைத் தடுப்பதற்கு ஒழுக்கக் கட்டுப்பாடு வேண்டும் என்ற கொள்கையை மால்தஸ் (Malthus) வலியுறுத்தினார். அவருடைய கொள்கையின் ஒரு பகுதியை நாடுகளின் செல்வம் எனும் நூலில் ஸ்மித் முன்னதாகவே கூறியிருக்கிறார். எனினும், மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஊதியங்கள் பிழைப்புக் கூலி நிலையிலிருந்து (Subsistence Level) உயர்வதற்கு தடங்கல் ஏற்படும் என ரிக்கார்டோவும், கார்ல் மார்க்சும் கருதியபோது, உற்பத்திப் பெருக்கம் ஏற்படும்போது ஊதியங்கள் உயர முடியும் என்ற கருத்தை ஸ்மித் வலியுறுத்தினார். ஸ்மித் கூறிய இந்தக் கருத்து சரியானது என்பதும், ரிக்கார்டோவும் மார்க்சும் தவறாகக் கருதினார் என்பதும் பிந்திய நிகழ்வுகளினால் மெய்ப்பிக்கப்பட்டன.
ஸ்மித்தின் கருத்துகளின் சரிநுட்பம் பற்றியும், பிற்காலக் கோட்பாட்டாளர்கள் மீது அவருடைய செல்வாக்குக் குறித்து நடைபெறும் விவாதங்கள் ஒருபுறமிருக்க, சட்டங்கள் இயற்றுவதிலும், அரசுக் கொள்கைகளிலும், அவருடைய செல்வாக்கு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. நாடுகளின் செல்வம் என்ற நூல் தனித்தேர்ச்சித் திறனோடும், மிகுந்த தெளிவோடும் எழுதப்பட்ட நூலாகும். அது மிகப் பெருமளவில் படிக்கப்பட்டது. வாணிகத்திலும், வர்த்தக விவகாரங்களிலும் அரசு தலையிடுவதற்கு எதிராகவும், குறைந்த காப்பு வரி தடையிலா வாணிகம் ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் அவர் கூறிய வாதங்கள், 19 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் அரசுக் கொள்கைகளில் திட்டவட்டமான செல்வாக்கைச் செலுத்தின. இந்தக் கொள்கையின் மீது அவருடைய செல்வாக்கினை இன்றுங்கூட காண முடிகிறது.
ஸ்மித் காலத்திற்குப் பிறகு பொருளாதாரக் கோட்பாடு மிகப் பெருமளவுக்கு வளர்ந்துவிட்டது. அவருடைய கொள்கைகளில் சில இன்று ஒதுக்கப்பட்டு விட்டன. இந்தக் காரணங்களினால், ஆடம் ஸ்மித்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடத் தோன்றும். ஆனால், பொருளாதாரக் கோட்பாட்டினை ஆக்க முறையான, மனிதச் சிந்தனை வரலாற்றில் ஒரு தலைமை சான்ற சான்றோராக அவர் திகழ்கிறார்.
No comments:
Post a Comment