ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசும் எவரிடமும் இருக்கும் சந்தேகம் இது. சரி, கெட்டது என்றால், எந்தெந்த எண்ணெய் எல்லாம் கெட்டது? நல்லது என்றால், எவ்வளவு வரை எடுத்துக்கொண்டால் நல்லது?
''நம் சருமத்தில் சூரியக் கதிர்கள் படும்போது, உடலில் கொழுப்பு இருந்தால்தான் சூரிய ஒளியில் இருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். வைட்டமின் டி சத்து குறைந்தால், சர்க்கரை நோய், ஆஸ்டியோபெரோசிஸ் போன்ற நோய்கள் வரக்கூடும்'' என்று தொடங்கிய உணவியல் நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, எண்ணெயால் நமக்கு ஏற்படும் நன்மை, தீமைகளை விளக்கினார்.
நிறைவுற்ற கொழுப்பு அமிலம் அதிகமாகும்போது, அது கொழுப்பாக மாறி உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும். ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் அதிகரிக்கும்போது, நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் ரத்தம் உறைவதைத் தடுக்கும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவே, இவை இரண்டும் நல்ல கொழுப்பு எனக் கூறலாம். சராசரியாக நாம் சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கக் கூடிய கொழுப்புச் சத்து, நமது உடலில் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். அதாவது, நிறைவுற்ற கொழுப்பு அமிலம் 7 சதவீதமும் ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் 15 சதவீதமும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் 10 சதவீதமும் இருக்க வேண்டும். இந்த மூன்றும் நம் உடலில் இந்த விகிதப்படி இருந்தால், இதய நோய் வருவதைத் தவிர்க்கலாம்.
கொழுப்பினால் நம் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கிறது. பசியைக் கொழுப்பு குறைக்கிறது. நாவில் உமிழ்நீரைச் சுரக்கவைக்கிறது. சருமத்தைப் பொலிவுடன், ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. பால் சம்பந்தப்பட்ட லாக்டோஸ், வெண்ணெய், பாயசம் போன்ற உணவு வகைகளில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகிப்பதற்கும் உதவுகிறது. உடல்நிலை சரியில்லாதபோது, உடல் எடை மற்றும் புரதச் சத்து குறையும்போது, உடலுக்கு வலுவைத் தருகிறது. எலும்பு வளர்ச்சிக்கு உதவும் கால்சியமும் உடலில் சேரத் துணைபுரிகிறது. எனவே, எண்ணெயை அளவோடு சேர்த்துக்கொண்டால், அது ஆரோக்கியத்துக்கே வழிவகுக்கும்'' என்ற கிருஷ்ணமூர்த்தி, எண்ணெய் வகைகளைப் பற்றி விரிவாய்ச் சொல்லத் தொடங்கினார்.
No comments:
Post a Comment