ஓராண்டுக்கு தினமும் ஒரு கிளாஸ் ஒயின் குடித்தால், மார்பக புற்றுநோய் உட்பட உடலில் பல கட்டிகள் உருவாகும் அபாயம் உள்ளது என்று சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. மிலன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேரிடம் மது குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்தியது.
இதுவரையில் ஒயின் குடித்தால் எந்த பாதிப்பு ஏற்படாது, உடலநலனுக்கு மிக நல்லது என்று நம்பப்பட்டு வரும் நிலையில், அது தவறு என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. மது
குடிப்பவர்களுக்கும், மது குடிக்காதவர்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் கூறப்பட்டதாவது:
தினமும் ஒயின் உள்ளிட்ட மது குடிப்பவர்களுக்கு, புற்றுநோய் அபாயம் அதிகம் இருந்தது. வாய், தொண்டை, இரைப்பை, மார்பக புற்றுநோய்க்கு அதிகம் வாய்ப்பு இருந்தது. ஓராண்டுக்கு தினமும் ஒரு கிளாஸ் மது குடித்தவர்களில், 24,000 பேர் உணவுக்குழாய் புற்றுநோயால் இறந்துள்ளனர். 5,000 பேர் வாய் புற்றுநோயாலும், மேலும் 5,000 பேர் மார்பக புற்றுநோயாலும் இறந்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டது.
ஆனால், சர்வதேச ஆல்கஹால் ஆராய்ச்சி அறிவியல் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘‘இந்த ஆய்வின் முடிவில் உள்ள பல்வேறு விஷயங்கள் கேள்விக்குரியதாக உள்ளது. ஏனெனில், ஆய்வில் ஏற்கனவே மது குடித்து அதை கைவிட்டவர்கள், எப்போதுமே மது குடிக்காதவர்கள் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால், ஏற்கனவே மது குடித்து பின்னர் அதை விட்டவர்களின் உடலில் பாதிப்பு இருந்திருக்கும்.
மேலும், ஆய்வில் கலந்துக் கொண்டவர்கள் எவ்வளவு மது குடித்தார்கள், எந்த அளவில் கலந்து குடித்தார்கள் என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதேபோல் ஆய்வில் பங்கேற்றவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றியும் விவரிக்கப்படவில்லை. அதாவது அவர்கள் புகைப்பிடிப்பவர்களா என்பது போன்ற விஷயங்கள் குறிப்பிடப்படவில்லை. இவை ஆய்வு முடிவை பலவீனப்படுத்தும்’’ என்றனர்.
No comments:
Post a Comment