Oct 4, 2012

கடல் வெப்பம் அதிகரிப்பதன் எதிரொலி: மீன்களின் அளவில் ஏற்படும் பாரிய மாற்றம்



பருவநிலை மாற்றத்தாலும், கடல் வெப்பம் அதிகரிப்பதாலும் மீன்களின் உடல் எடை குறைந்து கொண்டே வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடல் வெப்பம் தொடர்பாக கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைகழகத்தின் மீன் வள ஆய்வு மையம் சமீபத்தில் ஆய்வொன்றை நடத்தியது.
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் மற்றும் கடல் வெப்பம் அதிகரிப்பால் கடல் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி தீவிரமாக ஆராயப்பட்டது.
கணனி உதவியுடன் 600க்கும் மேற்பட்ட கடல் மீன் வகைகளின் மாதிரிகள்
உருவாக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் தெரியவந்த தகவல்கள் பற்றி ஆய்வு குழு தலைவர் பேராசிரியர் வில்லியம் சியூங் கூறுகையில், சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பருவநிலையில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடல் வெப்பமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதனால் மீன்களின் வாழ்க்கை முறை பாதிக்கப்படுவது தெரிந்ததே. கடல் வெப்பத்தால் மீன்களின் உடல் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது என தற்போது தெரியவந்துள்ளது.
மிகச்சிறிய அளவில் தொடங்கி பல டன் வரை பல்வேறு அளவுகளில் மீன்கள் இருக்கின்றன. கடல் வெப்பம் அதிகரிப்பால், மீன்களின் அதிகபட்ச வளர்ச்சியானது குறைந்துகொண்டே போகிறது.
கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்ததைவிட மீன்களின் எடை 2050ஆம் ஆண்டில் 14 முதல் 20 சதவிகிதம் வரை குறையும் என்று தெரிகிறது.
பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் உள்ள கடல்களில்(இந்திய பெருங்கடல், வங்கக்கடல், அரபிக்கடல் உள்பட) இந்த பாதிப்பு அதிகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மீன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி பிரிட்டிஷ் கொலம்பியாவின் மீன்வள ஆய்வு மையம் பல ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு டேனியல் பாலி என்ற ஆராய்ச்சியாளர் தலைமையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்துக் கொண்டுதான் மீன்கள் தொடர்ச்சியாக வளர்கின்றன. கடல் வெப்பம் அதிகரித்தால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்களின் உடல் வளர்ச்சி குறையும் என்று ஆய்வு முடிவில் டேனியல் கூறியிருந்தார். அதன் அடிப்படையிலேயே தற்போதைய ஆய்வு நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...