By Kavinthan Shanmugarajah 2012-10-30 14:12:57 |
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனம் அப்பிள்.
ஆனால் இப் பெயர் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப் போகின்றது என்பதே தற்போதைய கேள்வி.
இதற்கான காரணம் அப்பிள் நிறுவனம் அண்மைக்காலமாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் சிலவாகும்.
அப் பிரச்சினைகள் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறியதாகத் தோன்றினாலும், ஒவ்வொன்றும் அப்பிளின் ஆணிவேரையே ஆட்டம் காண வைக்கும் அளவுக்கு சக்தி கொண்டவை.
அது தற்போது சிறிது சிறிதாகத் தெரியத் தொடங்கியுள்ளது.
ஆம், அப்பிரச்சினைகளில் சிலவற்றைப் பார்ப்போமானால்,
ஐபோன் 5 இன் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாமல் போனமை,இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்தமையினால் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு.
ஐ.ஓ.எஸ். 6 இயங்குதளத்தில் கூகுள் மெப்ஸ்க்குப் பதிலாக அப்பிளின் சொந்த மெப் அப்ளிகேசனை உபயோகித்தது அந்நிறுவனம்.
எனினும் அப்பிளின் சொந்த மெப் அப்ளிகேசன் சரிவர இயங்காமல் ஏகப்பட்ட குழப்பங்களை உண்டாக்கியது.
பலரின் விமர்சனத்துக்குள்ளாகிய மெப் விவகாரம் இறுதியில் அப்பிளின் தற்போதைய நிறைவேற்று அதிகாரி டிம் குக் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக மனிப்புப்புக் கோரும் வரை சென்றது.
இதேபோல் 'சைரி' எனப்படும் குரல்கட்டளைக்கு இணங்க செயற்படும் அப்ளிகேசனில் காணப்பட்ட குறைபாடுகள் அதனால் ஏற்பட்ட சர்ச்சை என முன் எப்போதும் இல்லாதவாறான பல பிரச்சினைகளுக்கு அப்பிள் முகங்கொடுக்கத் தொடங்கியுள்ளது.
ஒரு பக்கத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏகப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்தியிருக்க மறு பக்கத்தில் செம்சுங் அதிரடியாக விற்பனையில் சாதித்து வருவாயைப் பல மடங்கு அதிகரித்துள்ளதாக ஊடகங்களின் ஊடாக அறிக்கை விட்டுக்கொண்டுள்ளது.
இதுவும் அப்பிளுக்குத் தலையிடியாக மாற மறுபக்கத்தில் கூகுள் நெக்ஸஸ் டெப்லட்டை வெளியிட்டு ஐபேட்டின் சந்தையை சரிக்க மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறு எத்திசையில் திரும்பினாலும் பிரச்சினை, சர்ச்சை, சந்தையை இழக்கும் அபாயம் என நிஜத்திலும் ஆடித்தான் போயுள்ளது அப்பிள்.
இந்நிலையில் மரத்திலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல புதிய அடியொன்றும் அப்பிளுக்கு விழுந்துள்ளது.
ஆம், அப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட உப தலைவரான ஸ்கொட் போர்ஸ்டோல் தனது பதவியிலிருந்து விலகுவதாக அப்பிள் அறிவித்துள்ளது.
ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் அப்பிளின் மெப் மற்றும் சைரி ஆகியவற்றால் தோன்றிய குழப்பத்தின் காரணமாக நிறுவனத்தில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்தே இவர் பதவி விலகுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பிளின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸூடன் நெருங்கிய உறவைப் பேணிவந்த ஸ்கொட் போர்ஸ்டோல் நிறுவனத்தினுள் சற்று சர்ச்சைக்குரிய நபராகவே திகழ்ந்துள்ளார்.
இவர் 'divisive figure who "never'' fit into the culture at Apple' என அதிகமாக வர்ணிக்கப்படுகின்றார்.
அடுத்தவருடம் பதவி விலகவுள்ள இவர் டிம் குக்குக்கு ஆலோசகராக செயற்படுவார் எனவும் பிறிதொரு தகவல் தெரிவிக்கின்ற அதேவேளை அவர் அப்பிளை விட்டு வெளியேறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்கொட் போர்ஸ்டோல் சுமார் 15 வருடங்களாக அப்பிளில் பணியாற்றி வருவதுடன் அதன் வளர்ச்சிக்குப் பங்காற்றிய ஒருவராகவும் திகழ்கின்றார்.
இதேவேளை அப்பிளின் சில்லறை வர்த்தகப்பிரிவின் தலைவராக செயற்பட்டவருமான ஜோன் பிரோவெட்டும் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பிள் நிறுவனத்தில் ஒரே நேரத்தில் இத்தகைய பெரிய இரண்டு பதவிகள் வெற்றிடமாவது இதுவே முதன்முறையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ஸ்டீவ் ஜொப்ஸின் மறைவுக்குப் பின்னர் அப்பிளில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாக இதனைக் கருதமுடியும்.
ஸ்டீவ் விட்டுப் போன இடத்தை குக்கினால் நிரப்ப முடியுமா என ஆரம்பத்திலேயே சந்தேகம் எழுந்தது. எனினும் சிறிது காலத்துக்கு சிறப்பாக செயற்பட்ட அவர் தற்போது சறுக்கத் தொடங்கியுள்ளதாக எண்ணத்தோன்றுகின்றது.
இதற்கு மேலே குறிப்பிட்ட காரணங்களே சிறந்த உதாரணங்களாகும்.
No comments:
Post a Comment