Oct 15, 2012

நூறு கோடி பேருடன் பிரம்மிக்க வைக்கும் Facebook

உங்கள் வீட்டு அழைப்பு மணி, பாலங்கள், விளையாட்டுக்கள், விமானங்கள் மட்டுமா மக்களை இணைக்கிறது? இவற்றைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் இதயங்களை இணைக்கும் தளமாக எங்கள் பேஸ்புக் விளங்குகிறது. 

அண்மையில், செப்டம்பர் 14ல், பேஸ்புக்கின் ஜனத்தொகை நூறு கோடியைத் தாண்டியது. இது எனக்கு மிகப் பெரிய பெருமையாகும்' என்று வெற்றிப் பெருமிதத்துடன் கூறி உள்ளார், இதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க். இந்த செய்தி அக்டோபர் 4ல் தான் வெளியிடப்பட்டது. 


மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் பேஸ்புக் ஜனத்தொகை 17.5 கோடியாக இருந்தது. 36 மாதங்களில், 82.5 கோடி பேர் இணைவது என்பது பெருமைப்படத்தக்க விஷயம் தான். 
நூறு கோடி என்பது, உலகின் 700 கோடி மக்கள் தொகையில் 14%. பதின்மூன்று
வயதுக்கு மேலான உலகின் மக்கள் தொகையில், பேஸ்புக் 18% பேரைக் கொண்டுள்ளது. 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பேஸ்புக்கில் அக்கவுண்ட் திறக்க முடியும் என்றாலும், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் 13க்கு முன்னரே, பேஸ்புக்கில் உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
தொடர்ந்து இளைஞர்களின் எண்ணிக்கையே பேஸ்புக் தளத்தில் அதிகரித்து வருகிறது. முதியவர்கள் பலர் இதில் ஆர்வம் இழந்து வருகின்றனர். 2007 ஆம் ஆண்டில், பேஸ்புக் மக்களின் சராசரி வயது 26 ஆக இருந்தது; 2010ல் இது 23 ஆகக் குறைந்தது. இப்போது இது 22. 
சென்ற ஜூலை 2010ல், பேஸ்புக் மக்கள் தொகை 50 கோடியாகத்தான் இருந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் இரு மடங்காகி உள்ளது. இது பேஸ்புக்கின் மாபெரும் வெற்றியைக் காட்டுகிறது. 
பேஸ்புக் தளத்தில் அதிக எண்ணிக்கையில் பதிந்துள்ள மக்கள் அமெரிக்கர்களே (16 கோடிக்கும் மேல்). இதனை அடுத்து வரும் நாடுகள் இந்தியா (கிட்டத்தட்ட 6 கோடி), இந்தோனேஷியா, (4 கோடிக்கும் சற்று அதிகம்)மெக்ஸிகோ (ஏறத்தாழ 4 கோடி) மற்றும் பிரேசில் (6 கோடிக்கு சற்று குறைவு)ஆகும். 
இவற்றில், உலகத்திலேயே அதிக ஜனத்தொகை கொண்ட நாடுகள் நான்கு உள்ளன. (மெக்ஸிகோ உலக ஜனத்தொகைக் கணக்கில் 11 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது.) அதிக ஜனத்தொகை கொண்டுள்ள சீனா, பேஸ்புக்கைப் பொறுத்தவரை தன் கதவை மூடிக் கொண்டுள்ளது. இது அங்கே தடை செய்யப்பட்டுள்ளது.
"அடுத்த நூறு கோடி என்ற இலக்கை எட்டி, உலகம் முழுவதையும் பேஸ்புக் மூலம் இணைப்போம்' என்று ஸூக்கர்பெர்க் கூறி உள்ளார். 
இவர் வெளியிட்டுள்ள சில தகவல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. பிப்ரவரி 2009ல் இந்த தளம் தொடங்கப்பட்ட பின்னர், செப்டம்பர் 10ல் எடுத்த கணக்கின் படி, 1.13 ட்ரில்லியன் (ஒரு ட்ரியல்லன் என்பது அமெரிக்க வழக்கில் நூறாயிரங் கோடி) கருத்துகள், படங்கள், தகவல்கள் விரும்பப்பட்டுள்ளன (likes). 
140.3 நூறாயிரம் கோடி நண்பர்களுக்கிடையே இணைப்புகள் ஏற்பட்டுள்ளன. 219 பில்லியன் (ஒரு பில்லியன் = நூறு கோடி) போட்டோக்கள் தளத்தில் ஏற்றப்பட்டுள்ளன. இது நீக்கப்பட்ட போட்டோக்களின் எண்ணிக்கையை நீக்கிய எண். போட்டோக்கள் தளத்தில் பதிய 2005 ஆம் ஆண்டில் தான் அனுமதிக்கப்பட்டது. 
ஆறு கோடியே 26 லட்சம் பாடல்கள் 2,200 கோடி முறை இசைக்கப்பட்டுள்ளன. இசைக்கப்பட்ட நேரத்தை ஒன்றிணைத்தால், அது 2 லட்சத்து 10 ஆயிரம் ஆண்டு காலமாகும். செப்டம்பர் 2011ல் தான், பாடல்கள் இசைப்பது பேஸ்புக்கில் தொடங்கியது. எனவே ஓராண்டில் இந்த அளவிற்கு பாடல்களை இதன் வாடிக்கையாளர்கள் கேட்டுள்ளனர். 
பேஸ்புக் தளத்தை மொபைல் சாதனங்கள் வழி பயன்படுத்துபவர்கள் 60 கோடிக்கும் மேலானவர்கள். 
2004 ஆம் ஆண்டு, ஒரு சிறிய, பழைய பொருட்கள் போட்டு வைக்கும், ஒரு மோசமான கல்லூரியின் புதிய மாணவர்களுக்கான அறையில் வைத்துதான், பேஸ்புக் சமுதாய இணைய தளம் தொடங்கப்பட்டது. இப்போது நூறு கோடி பேரைத் தன்னுள் கொண்டதாக பேஸ்புக் விரிந்துள்ளது. 
உலகில் எழுவரில் ஒருவர் இதில் உள்ளனர். பேஸ்புக் மட்டும் ஒரு நாடாகக் கருதப்பட்டால், ஜனத்தொகைக் கணக்குப்படி, மூன்றாவது பெரிய நாடாக இருக்கும். சீனா 134 கோடி மக்களுடன் முதல் இடத்திலும், இந்தியா 120 கோடி மக்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. 
நூறாவது கோடி நபராக யார் சேர்ந்தார் என்பது இன்னும் தெரியப்படவில்லை. ஆனால் அவர் செப்டம்பர் 14ல் சேர்ந்திருக்க வேண்டும். பேஸ்புக் இப்போது உலகின் ஒரு புதிய பரிமாணமாக வளர்ந்து இயங்கி வருகிறது. இதன் வழியே, உலகின் பல மூலைகளில், தங்களைப் பிரிந்து அல்லது தொலைந்து சென்ற அன்புக் குரியவர்களை பலர் மீண்டும் சந்தித்துள்ளனர்; 
பலருக்கு வேலை கிடைத்துள்ளது. இருப்பினும் பேஸ்புக் தளம் பல பிரச்னைகளைத் தொடர்ந்து சந்தித்துக் கொண்டுள்ளது. முன்பு இதனை உரிமை கொண்டாடியவர் களிடமிருந்து வழக்குகள், நிதிப் பற்றாக் குறை மற்றும் அவ்வளவாக வரவேற்பினைப் பெறாத இதன் பங்கு வெளியீடு எனப் பல சோதனைகள் தொடர்ந்து இதனைப் பயங்காட்டி வருகின்றன. இருப்பினும் அனைத்து தடைகளையும் மீறி பேஸ்புக் இயங்கி வருகிறது. 
நூறு கோடி சந்தாதாரர்கள் என்பது பெரிய விஷயமே; பெருமைக்குரிய விஷயமே. ஆனால் இதனால் பேஸ்புக் இணைய தளத்திற்கு லாபமா? என்ற கேள்விக்கு இல்லை என்று தான் கூற வேண்டும். மெக்டொனால்ட் தளத்தினை நூறு கோடிக்கு மேலான வாடிக்கையாளர்கள் வந்து சென்றுள்ளனர். 
ஆனால், அவர்கள் காசு செலுத்தி அதனுடன் வர்த்தகம் மேற்கொண்டனர். ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ட்யூன்ஸ் தளம் 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இவர்கள் திரைப்படங்கள் மற்றும் பாடல்களை இந்த தளத்தில் காசு கொடுத்து வாங்கியுள்ளனர். ஆனால், பேஸ்புக் தன் சந்தாதாரர்களிடமிருந்து நேரடியாக பணம் எதனையும் பெறவில்லை. 
தன் தளத்தை நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தக் கொடுப்பதன் மூலமே, வருமானம் பெறுகிறது. மற்ற வர்த்தக தளங்களுடன் ஒப்பிடுகையில், இது மிக மிகக் குறைவே. இந்த வருமானமும் பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்தே கிடைக்கிறது. விளம்பரத்தினை அடுத்து, சில பொருட்களை தன் தளம் மூலம் விற்பனை செய்திட வழி கொடுத்து, மேலும் வருமானம் ஈட்ட பேஸ்புக் முயற்சிகளை எடுத்து வருகிறது.
கோடிக்கணக்கான பேர் நண்பர்களாவதற்கு, ஒரு பாலமாக இருப்பது ஒரு பெரிய புண்ணியமான விஷயமாகும். அதனை பேஸ்புக் கொண்டுள்ளது. இது அதனை பல ஆண்டுகளுக்கு வாழ வைக்கும்.



No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...