சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் பச்சைக் காய்கறிகளில் ஒன்று வெள்ளரிக்காய். தண்ணீர்ச்சத்து நிறைந்த இது உடலுக்கு மிகமிக அவசியமான பல சத்துப்பொருட்களை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களை அறிவோமா...
* வெயில் காலத்தில் குளிர்ச்சியை அள்ளி வழங்குவதற்காகவே வெள்ளரிக்காய் விளைவது இயற்கை அதிசயமாகும். வெள்ளரிக்காய் வடஇந்தியாவை பூர்வீகமாக கொண்ட பழமையான காய்கறியாகும். இது குக்குர்பிட்டா குடும்பத்தைச் சேர்ந்த கொடியில் விளையும் காயாகும். பல்வேறு வடிவம், அளவு, நிறம், பாரம்பரியம் கொண்ட வெள்ளரி வகைகள்
விளைகின்றன.
* வெள்ளரி மிகக்குறைந்த கலோரி ஆற்றல் வழங்கும் காய்கறி. 100 கிராம் வெள்ளரியில் 15 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. இதில் கொழுப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
* வெள்ளரிக்காயின் தோல் நார்ச்சத்து மிக்கது. மலச்சிக்கலைத் தடுக்கும் ஆற்றலுடையது. குடற்புற்றுநோய்க்கு எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
* பொட்டாசியம் சத்து நிறைந்தது வெள்ளரிக்காய். செல்களுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்க வல்லது. பொட்டாசியம் இதய செயல்பாட்டிற்கும் நன்மை பயக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
* பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஸி-சாந்தின், லூட்டின் போன்ற நோய் எதிர்பொருட்கள் நிறைந்துள்ளது. இவை உடலுக்கு நோய்த் தடுப்பாற்றலும், சருமத்திற்கு இளமையும் தரும்.
* சிறுநீர் சீராக உற்பத்தியாவது மற்றும் வெளியேற்றுவதில் வெள்ளரிக்காய் ஊட்டங்கள் பங்கெடுக்கிறது. உயர்ரத்த அழுத்தத்தில் இருந்து காப்பதுடன், உடல் எடையையும் சீராக்குகிறது.
* வைட்டமின் கே, வெள்ளரிக்காயில் மிகுதியாக உள்ளது. இது எலும்புகளின் உறுதிக்கும், அவற்றின் சிறந்த செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
* வெள்ளரி சரும அழகுப் பொருட்கள் தயாரிக்கவும், அல்சீமர் வியாதிக்கு மருந்துப் பொருள் தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. செய்து சாப்பிடுங்க:
* வெள்ளரிக்காய் பச்சையாக சாப்பிட ஏற்றது. கண்ணைக் கவரும் விதத்தில் அலங்கரித்து விருந்துகளில் படைக்கப்படுகிறது.
* வெள்ளரிக்காய் சாலட் செய்து சாப்பிடலாம். காய்கறி மற்றும் பழ சாலட்டுகளிலும் வெள்ளரிக்காய் சேர்க்கப்படுவது உண்டு.
* யோகர்ட், வெண்ணை ஆகியவற்றுடன் சேர்த்து சில குழம்பு வகைகளில் வெள்ளரிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
* வெள்ளரிக்காய் ஜுஸ் உடலுக்கு சக்தி தரும்.
No comments:
Post a Comment