Jan 14, 2013

ஆப்கானில் அமைதியை ஏற்படுத்த தலிபான்களுடன் பேச ஒபாமா - ஹர்சாய் முடிவு!

News Service ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த தலிபான்களுடன் பேச்சு நடத்துவது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் ஆகியோர் முடிவு செய்துள்ளனர். இதற்காக கத்தாரில் அமைதிப் பேச்சு நடத்துவதற்கான அலுவலகத்தைத் திறக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், 2014ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என்று ஒபாமா அறிவித்திருந்தார்.
  
படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாகவும், அதற்கு பிந்தைய ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் செயல்பாடு குறித்தும் முடிவு செய்வதற்காக அதிபர் ஹமீது கர்சாய் அமெரிக்கா சென்றுள்ளார். ஒபாமாவுடனும், அமெரிக்க அதிகாரிகளுடனும் மூன்று கட்டப் பேச்சுவார்த்தைக் கூட்டங்களை ஹமீது கர்சாய் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து ஒபாமாவும், ஹமீது கர்சாயும் செய்தியாளர்களை கூட்டாகச்
சந்தித்து பேட்டியளித்தனர்.
அப்போது, தலிபானுடன் பேச்சு நடத்த ஆப்கனும், அமெரிக்காவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர். இதற்காக கத்தார் நாட்டில் தலிபான் பிரதிநிதிகளுக்கான அலுவலகத்தைத் திறக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அந்த அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஆப்கன், அமெரிக்கா, பாகிஸ்தான் உள்பட ஆப்கன் நலனில் அக்கறையுள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கன் தொடர்பான முடிவுகள் குறித்து ஒபாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது
தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா எந்தவிதமான நிபந்தனைகளையும் முன்வைக்காது. அதே சமயம், வன்முறை பாதையை தலிபான்கள் கைவிட்டால் மட்டுமே, அமைதி சாத்தியம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இது தொடர்பாக ஹமீது கர்சாய் தெரிவித்த யோசனைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். அரசியல் சாசனச் சட்டப்படி தங்களின் கருத்துகளை தலிபான்கள் தெரிவிக்க வேண்டும்.
ஆப்கன் அரசியல் சாசனம், பெண்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பு வழங்காமல் முன்னேற்றம் இல்லை என்பதை ஆப்கானிஸ்தான் உணர வேண்டும்.ஆப்கனில் உள்ள அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையை 66 ஆயிரமாக குறைத்துவிட்டோம். அடுத்த ஆண்டு இறுதிக்குள் படைகளை முழுவதுமாக வாபஸ் பெறத் திட்டமிட்டுள்ளோம். எனினும், இது தொடர்பாக களத்தில் உள்ள ராணுவ அதிகாரிகளின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளேன்.
அடுத்த சில மாதங்களில், ஆப்கானிஸ்தானைப் பாதுகாக்கும் பொறுப்பைப் படிப்படியாக அந்நாட்டுப் படையினரிடம் ஒப்படைக்கும் பணிகள் தொடங்கும். இன்னும் ஒரு சில மாதங்களுக்குப் பின், ஆப்கன் படைகளுக்குப் பயிற்சி அளித்தல், ஆலோசனை அளித்தல் உள்ளிட்ட பணிகளை மட்டுமே அமெரிக்க ராணுவம் மேற்கொள்ளும். ஆப்கனில் நிகழ்ந்த மிக நீண்ட போர், அடுத்த ஆண்டுக்குள் முடிவுக்கு வருகிறது. அல் காய்தாவை ஒடுக்குவதற்காகத்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போரைத் தொடங்கியது. இன்று அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. இனி எப்போதும், ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தி அமெரிக்காவை தாக்கும் திட்டத்தில் அல் காய்தா ஈடுபடாது.
ஆப்கன், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளன. அங்கிருந்து பயங்கரவாதிகளை அகற்றுவதற்கு ராணுவ நடவடிக்கை மட்டுமே போதுமானதல்ல. அதற்கும் மேலான நடவடிக்கை தேவை. ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அரசியல் மற்றும் தூதரகம் சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதற்குத் தேவையான உதவிகளை அமெரிக்கா மேற்கொள்ளும். பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஆப்கனுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும். இல்லாவிட்டால், அமைதி சாத்தியமில்லை.
இப்பிராந்தியத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த, சிறையில் உள்ள தலிபான் அமைப்பினரை விடுதலை செய்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது'' என்றார் பராக் ஒபாமா. முன்னதாக இருநாடுகளின் அதிபர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், தலிபான்களுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும், அதற்கான அலுவலகத்தை அமைக்க கத்தார் நாடு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...