Apr 16, 2013

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் பவுனுக்கு ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது. திங்கள்கிழமை மட்டும் மிக அதிகபட்சமாக ரூ.984 குறைந்து ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 72-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே சரிந்து வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ. 2 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது.

காரணம் என்ன? சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் இந்திய

வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் நிலவி வந்த பொருளாதார ஏற்ற இறக்கங்கள் கடந்த வாரத்தில் இந்தியச் சந்தையில் எதிரொலித்தது.
இந்த நிலையில் சர்வதேசப் பொருளாதாரத்தில் பங்கு வகிக்கும் பெரிய நிதி நிறுவனங்கள் இதுவரை இருப்பு வைத்துள்ள தங்கத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்தன.

இதன் காரணமாகவே கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலையில் திடீர் சரிவு காணப்பட்டது. நகை வியாபாரிகளே எதிர்பாராத வகையில் பவுன் விலை ரூ.600 முதல் ரூ.1000 வரை குறைந்து வருகிறது. வரும் வாரத்திலும் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி விலை சரிவு: தங்கத்தின் விலை குறைந்ததன் தாக்கம் வெள்ளி விலையிலும் எதிரொலித்துள்ளது. சென்னை சந்தையில் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.4,160 குறைந்து ரூ.45,440-க்கு திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

முதலீட்டாளர்கள் அதிர்ச்சி: தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக நகைக் கடைகளில் பெண்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. விலை குறைந்த நேரத்தில் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வேறு சேமிப்புகளில் இருந்து பணத்தை எடுத்து தங்கம் வாங்கி வருகின்றனர். சென்னையில் தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் நகைக் கடைகளில் கடந்த சில நாள்களில் தங்கம் விற்பனை 20 முதல் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.

விலை குறைந்தது பொது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அதேவேளையில், தங்கத்தின் மீது முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திங்கள்கிழமை விலை நிலவரம்:

ஒரு கிராம் ரூ.2,509

ஒரு பவுன் ரூ.20,072

ஒரு கிராம் வெள்ளி ரூ.48.60

ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.45,440

சனிக்கிழமை விலை நிலவரம்:

ஒரு கிராம் ரூ.2,632

ஒரு பவுன் ரூ.21,056

ஒரு கிராம் வெள்ளி ரூ.51.30

ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.49,600

ஒன்றரை ஆண்டுகளில் இதுவே குறைவு
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தங்கத்தின் விலை இந்த அளவுக்கு குறைந்துள்ளது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர், 2012-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.20,480-க்கு விற்கப்பட்டது. இதேபோல கடந்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு, கடந்த நவம்பர் 26-ம் தேதி ஒரு பவுன் ரூ.24,544-க்கு விற்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் இதுவே அதிகபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...