nஹீhற்றா நோய்களின் மிக முக்கியமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் நோய் உயர் இரத்த அழுத்தம் என்பதை அறிந்துகொண்டோம். உயர் இரத்த அழுத்தத்தை ‘ஒரு மெளனமான கொலையாளி’ என்று கூறுமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது அதன் இயல்பு.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது. இது ஆளையே ஒரு நொடியில் முடித்துவிடும். மாரடைப்பில் சிறிய அளவு தாக்கம் ஏற்படும் போது அதனை ‘மைல்ட் அட்டாக்’ என்று கூறுவார்கள் ‘மைல்ட் அட்டாக்குக்கு ஆளான ஒருவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மூலம் இரத்த நாளத்தின் அடைப்பை சரி செய்து விடுவார்கள்.
இப்போது அவர் தன்னுடைய உணவுப் பழக்க வழக்கங்களை முழுமையாக மாற்றிக்கொள்ள வேண்டும். பைபாஸ் சிகிச்சை செய்து கொண்டவர்கள் வழமை போன்று தன் வேலைகளை செய்ய முடியும்.
ஆனால் உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் ஷிtrokலீ இனால் அதாவது பக்கவாதம்,
அல்லது பாரிசவாதத்துக்கு ஆளாகுவார்கள்.
பக்கவாதம் என்பது மூளைக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நாளத்தில் ஏற்படும் தடை காரணமாக மூளையின் செயற்பாடுகள் மிக விரைவாக இழக்கப் படுவதே.
மூளையின் உயிரணுக்களுக்கும் தேவையான ஊட்டச் சத்துகளும் ஒக்சிசனும் கிடைக்காமல் போவதினால் பாதிக் கப்படும் மூளையின் பகுதி செயற்பட முடியாமல் போய் உடலின் ஒரு பக்கத்திலுள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகள் இயங்க முடியாமல் போகிறது.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடன் வாழ்ந்து அவர்களை பராமரித்துள்ளதால் அவர்கள் படும் அவஸ்த்தையை உணர்ந்துள்ளேன்.
சிலருக்கு இடது பக்கம் முழுமையாக செயலிழந்து போவதுண்டு சிலர் எழுந்து நடக்க முடியும் ஆனால் முகம் கோணலாக காணப்படும். இடது பக்க கை செயலற்றதாக காணப்படும். ஒருபக்க கண் பார்வை மங்கிப் போகும்.
இதேபோன்று சிலருக்கு வலது பக்கம் செயலிழந்து போகும் பேச்சு வராது. புரிந்துகொள்ள முடியாமை, வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியிலேயே கழிக்க வேண்டிய நிலை. மற்றவரின் உதவி எந்நேரமும் தேவைப்படும் நிலையில் இருப்பார்கள். உணவு உண்பது முதல் சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் வரை உதவிக்கு இன்னொருவர் தேவைப்படும். எந்நேரமும் ஆத்திரப்படுவார்கள்.
சில வேளைகளில் இப்படியானவர்களை ஓடி ஓடி கவனித்தவர்கள் காலம் போகப் போக அவரை தொல்லையாகவே கருதுவார்கள். இதனை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
பக்கவாதம் நிரந்தரமான நரம்புச் சிதைவை ஏற்படுத்துகிறது. ஐரோப்பிய நாடுகளில் பக்கவாத நோய்க்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகம். எமது நாட்டிலிருந்து இத்தாலி போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளவர்களிடம் கேட்டால் ‘நான் அங்கு வருத்தக்காரரை பராமரிக்கிறேன்’ என்பார்கள். பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவரை பராமரிக்கும் வேலைக்கு சென்றுள்ளவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பதால் நம்மவர்கள் பல்லைக் கடித்துக்கொண்டு வேலை செய்கிறார்கள்.
உயர் இரத்த அழுத்தம் பக்கவாதத்துக்கான முதன்மை காரணியாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
புகைத்தல் பழக்கம் உடையவர்களுக்கும், நீரிழிவு நோய், உயர் கொலஸ்ரோல் அளவுள்ளவர்களில் பக்கவாதம் ஏற்படுவதற்கான முதன்மை காரணிகளாக அமைகிறது.
அதிக கொழுப்பு உணவுகள் உடலில் கொலஸ்ரோல் அளவை அதிகரிப்பதாலும், உப்பு அதிகளவு சேர்க்கப்பட்ட உணவுகள் உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமாக இருப்பதாகவும் அதிகரித்த கலோரி கொண்ட உணவுகள் உடல் பருமனை அதிகரிக்கச் செய்வதாலும் பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கின்றன.
பழ வகைகள், காய்கறி வகைகள் இந்நோயை ஏற்படுத்துவதற்கான சாத்தியத்தை வெகுவாக குறைக்கிறது.
பக்கவாதத்துக்கான அறிகுறிகள் பொதுவாக திடீரென சில வினாடிகளிலிருந்து சில நிமிடங்களில் தோன்றி இருக்கும். இவ்வாறு தோன்றும் அறிகுறிகள் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டு போவதில்லை. மூளை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து ஏற்பட்ட பாதிப்பு அமையும்.
மூளையின் எப்பகுதி பாதிக்கப்படுகிறதோ அதற்கு நேர் எதிரான உடலின் பக்கமே பாதிக்கப்பட்டிருக்கும்.
முகம், கை, கால்களில் திடீரென தளர்வும், உணர்வற்ற தன்மையும், ஏற்படல், இது பொதுவாக உடலின் ஒரு பக்கம் மட்டும் ஏற்படல்.
வாய் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்ளல், விழுங்க முடியாமை, திடீரென ஏற்படும் குழப்பம் பேச முடியாமல் போதல் கிரகிக்க முடியாமல் போதல்.
ஒரு கண்ணிலோ, அல்லது இரண்டு கண்ணிலுமோ பார்வைக் குறைபாடு திடீரென ஏற்படுதல் போன்றன பக்கவாத நோய் பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகளாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும். நாளை செல்வோம் என காலம் தாழ்த்தக்கூடாது.
இரவு இது போன்ற அறிகுறிகள் தென்பட்டும் நாளை காலையில் செல்வோம் என காலந்தாழ்த்தியதால் ஜாம்பவனாக திகழ்ந்த எனது நண்பர் சக்கர நாற்காலியே கதியாக பேச முடியாமல் எழுந்து நடக்க முடியாமல் இறந்தே போனார்.
பக்கவாதம் என்பது உடனடியாக தீவிர சிகிச்சை வழங்கப்பட வேண்டிய நோயாகும். பக்கவாத தாக்கம் ஏற்படின் மூளையின் கலங்கள் சில நிமிடங்களிலேயே அழிவடைய ஆரம்பித்து விடும். எனவே பக்கவாதத்துக்கான அறிகுறிகள் ஏதாவது சந்தேகப்படும் படியாக ஏற்படுமாயின் அறிகுறிகள் இல்லாமல் போகின்றனவா? என பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் சென்று கூடிய விரைவில் தகுந்த மருத்துவரின் உதவியை நாட வேண்டியது மிகவும் அவசியம்.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் நிரந்தரமாக எழுந்து நடக்க முடியாத பேச முடியாத சிந்திக்க முடியாத தாமாகவே தமது வேலைகளை செய்துகொள்ள முடியாதவர்களாக இருப்பதுண்டு. சிலர் எழுந்து நடக்கக் கூடியதாக ஓரளவு பேசக்கூடியவராக எழுதக்கூடியவராக இருப்பார். இவரால் அவருக்கோ அவரை சார்ந்தவர்களுக்கோ பிரச்சினைகள் இராது. ஆனால் முதலில் குறிப்பிடப்பட்ட ரகத்தை சார்ந்தவர்களால் அவருக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் பிரச்சினையாக இருக்கும். பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகளும் ஏற்படும்.
இதிலிருந்து விடுபடுவதற்கு பக்கவாதம் எம்மை அணுகாமல் இருப்பதற்கு வழிவகைகளை நாம் செய்துகொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தம் அடிக்கடி பரிசோதிக்கப்பட்டு உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* ஓரளவு உயர் இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இருந்தாலே பக்கவாதம் ஏற்பட கூடிய வாய்ப்பாக மாறிவிடும்.
* உடலில் கொலஸ்ரோல் அதிகரிக்காமல், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
* இதயத் துடிப்பு ஒழுங்கற்று இருக்குமானால் அதனை சாதாரண நிலைக்கு கொண்டுவர மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுக்க வேண்டும்.
* நீரிழிவு நோய் வராமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
* புகைத்தல் கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக மருத்துவ நிபுணரின் ஆலோசனை மிகவும் அவசியம்.
No comments:
Post a Comment