May 20, 2013

முத்துக்கள் பத்து! --- உபயோகமான தகவல்கள்,



ங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத் தரும் ஏ.டி.எம், இந்த அவசர யுகத்தில் நமக்கெல்லாம் வரப்பிரசாதம்தான். ஆனால், எந்த ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருப்பது இயற்கைதானே? நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தை கையாள உதவும் வகையில் சில டிப்ஸ்கள், 'முத்துக்கள் பத்து’ என்ற தலைப்பில் இந்த இதழில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

தனியே... தன்னந்தனியே..!
அகால நேரங்களிலோ, மிகவும் தனிமையாக நீங்கள் இருக்கும் நிலை ஏற்படும்போதோ ஏ.டி.எம்-மைத் தவிருங்கள். கொஞ்ச நேரம் காத்திருந்தாலும் பரவாயில்லை... வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் ஏ.டி.எம்-களை தேர்ந்தெடுங்கள். ஒரே அறையில் இரண்டு மெஷின்கள் இயங்கும் வசதி கொண்ட பூத்களை இரவு நேரங்களில் தவிருங்கள். ஏ.டி.எம்-மைப் பயன்படுத்தும் ஆரம்ப காலத்தில் நம்பிக்கையான ஒருவரின் துணை அவசியம்.
கணக்கு எங்கே...  கார்டு அங்கே!
முடிந்த மட்டிலும் உங்கள் கணக்கு இருக்கும் வங்கியின் ஏ.டி.எம்-மைப் பயன்படுத்துவதே சிறந்தது. சில சமயம் பணம் வருவதில் கோளாறு ஏற்பட்டாலோ அல்லது பணம் வராமல், தொகை உங்கள் கணக்கில் கழிக்கப்பட்டாலோ மேற்கொண்டு நாம் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கான நடைமுறைகள் கொஞ்சம் எளிதாக இருக்கும்.
கார்டை விட்டு கண்ணைத் திருப்பாதீர்கள்!
பெரிய கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது. சில நாணயக் குறைவான நிறுவனங்களிலும், பெட்ரோல் பங்குகளிலும் உங்கள் கார்டை தேய்த்துப் பணம் பெற்ற பிறகு, ரகசியமாகத் தாங்கள் வைத்திருக்கும் இன்னொரு மெஷினிலும் தேய்த்துக் கொள்வார்கள். இது சம்பந்தபட்ட ஊழியர்களும் ஏமாற்றுப் பேர்வழிகள் சிலரும் சேர்ந்து செய்திருக்கும் தில்லாலங்கடி ஏற்பாடு. இதன் மூலம் உங்கள் கார்டின் அனைத்து விவரங்களும் அந்தத் திருட்டு மெஷினில் பதிவாகிவிடும். பிறகு, ஒரு போலி கார்டைத் தயாரித்துப் பணத்தை லவட்டிவிடுவதுண்டு. எனவே, ஊழியர்கள் கார்டைத் தேய்க்கும்போது உங்கள் கண்கள் அதிலேயே கவனமாக இருக்கட்டும்.
கார்டு... கைப்பை... கவனம்!
 சில ஏ.டி.எம் மெஷின்களில் கார்டை நுழைத்ததுமே சரிபார்க்கப்பட்ட பிறகு கார்டை வெளியே எடுத்துவிடலாம். சில மெஷின்களில் நீங்கள் பணம் எடுத்து முடியும் வரை கார்டு மெஷினுக்குள்ளேயே இருக்கும். அப்படிப்பட்ட மெஷின்களிடம் எச்சரிக்கை தேவை. பணத்தை எடுத்துக் கொண்டு கார்டை எடுக்கப் பலர் மறந்துவிடுகிறார்கள். அதேபோல கைப்பை மற்றும் இதர பொருட்களை ஏ.டி.எம் அறையிலிருந்து வரும்போது கவனமாகத் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்.
'பின் நம்பர்’ மறையுங்கள்!
ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கும்போது, ரகசிய எண்களை (பின் நம்பர்) அழுத்துவீர்கள் அல்லவா? அப்போது இயன்ற வரை ஒரு கையால் அழுத்துப் பலகையை மறைத்துக் கொண்டு, இன்னொரு கையால் அழுத்துங்கள். சில இடங்களில் உங்கள் ரகசிய எண்ணைக் கேமிரா மூலம் படம் எடுத்து மோசடி செய்பவர்களும் இருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கும் தெரியாமல், உங்கள் உடம்பையே ஒரு கேடயமாக உபயோகித்தும் ரகசிய எண் அழுத்துவதை மறைக்கலாம்.
கூரியரிலும் நடக்குது காரியம்!
 உங்கள் ரகசிய எண் கொண்ட விவரங்களைக் கூரியர் மூலம் வங்கியில் இருந்து அனுப்புவார்கள். சில எத்தர்கள், கூரியர் நிறுவன ஊழியர்களை சரிக்கட்டி விவரங்களைத் தெரிந்துகொண்டு, கவரை மீண்டும் ஒட்டி டெலிவரி செய்துவிடுவதுண்டு. கிடைத்த விவரங்களைக் கொண்டு போலி கார்டு தயாரித்து, எப்போது கணிசமான தொகை சேருகிறதோ அப்போது பணத்தை எடுத்து விடுவார்கள். கூரியர் வழியாக ஏ.டி.எம் கார்டு கிடைத்த உடனேயே ரகசிய எண்ணை மாற்றிக் கொள்வதன் மூலம் இந்த பிரச்னையை தவிர்க்கலாம்.
பின் நம்பர் பாதுகாப்பு... ரொம்ப முக்கியம்!
ரொக்கப் பணத்தைப் போல, காசோலைப் புத்தகத்தைப் போல ஏ.டி.எம் கார்டும் முக்கியமானது. மிகவும் பாதுகாப்பாக வைத்திருங்கள். பின் நம்பரை வேறு யாருக்கும் தெரிவிக்காதீர்கள். குறைந்தது இரண்டு மாதத்துக்கு ஒருமுறையாவது பின் நம்பரை மாற்றுங்கள். தொலைபேசியிலும் இ-மெயிலிலும் உங்கள் ஏ.டி.எம் எண்ணை யாருக்கும் ஒருபோதும் அளிக்காதீர்கள். ஏ.டி.எம் கார்டிலோ... உங்கள் பர்ஸிலோ பின் எண்ணை எழுதி வைக்கக் கூடாது.
பிறர் கண்பட எண்ணாதீர்கள்!
ஏ.டி.எம் மெஷின் தரும் பணத்தை வெளியில் நிற்பவர்கள் பார்க்கும்படி சரிபார்த்து எண்ணாதீர்கள். நிதானமாகப் பாதுகாப்பான இடத்துக்குப் போய் எண்ணுங்கள். எண்ணி முடித்ததும் பாதுகாப்பாகப் பணத்தைப் பத்திரப்படுத்துங்கள்.
செயல்பாட்டை முடக்குங்கள்!
ஏ.டி.எம் கார்டு தொலைந்துபோனால் உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய டோல் ஃப்ரீ எண்ணைத் தொடர்புகொண்டு ஏ.டி.எம் கார்டின் செயல்பாட்டை முடக்குங்கள். பிறகு, முறைப்படி வேறு கார்டு பெற நடவடிக்கை எடுங்கள்.
தயார் நிலை அவசியம்!
ஏ.டி.எம் மெஷினை அடைவதற்கு முன்னரே கைப்பை அல்லது பர்ஸில் இருந்து கார்டை எடுத்துத் தயார் நிலையில் கையில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்து விடுங்கள். முடிந்த மட்டும் ஒரே மெஷினைப் பயன்படுத்தும்போது பயன்பாடு எளிதாகவும் விரைவாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...