Jun 20, 2013

இளைஞர் யுவதிகளே மாரடைப்பு உங்களுக்கும் வரக் கூடுமா?

Heart attack in Younger people

எனக்கு நெஞ்சு வலிக்கிறது மாரடைப்பாக இருக்குமா? என ஒரு இளைஞன் அல்லது யுவதி உங்களிடம் கேட்டால் விடை என்னவாக இருக்கும்.

‘பீச்சல் பயந்தாங் கொள்ளியாக இருக்கிறான்’ எனச் சொல்லித் தட்டிக் கழித்துவிடுவீர்கள்.
மாறாக ‘அக்கறையின்றி இருந்தால் உனக்கு கெதியிலை ஹார்ட் அட்டக் வந்து விடும்’ என மருத்துவர் ஒரு இள வயதினருக்கு சொன்னால் என்ன நடக்கும். ‘இவர் சும்மா வெருட்டுகிறார்’ எனச் சொல்லி மருத்துவரையே மாற்றிவிடக் கூடும்.
ஆனால் உண்மை என்ன? மாரடைப்பு வருவதற்கான மாற்றங்கள் இளவயதிலேயே தோன்றுகின்றன என்பதுதான்.
மாரடைப்பு எவ்வாறு?
மாரடைப்பு வருவதற்கு அடிப்படைக் காரணம் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதுதான். அவ்வாறு படிவதை மருத்துவத்தில் atherosclerosis என்கிறார்கள்.

  • தமிழில் இதைத் தமனித் தடிப்பு (தமிழ்நாட்டில்),
  • அல்லது நாடித் தடிப்பு (இலங்கையில்) எனலாம்.
காலக் கிரமத்தில் கொழுப்பு படிவது மோசமாகி இருதயத்திற்கு இரத்தத்தைப் பாச்சும் நாடிகளில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு வரும். மூளைக்கான இரத்தக் குழாய்களில் அவ்வாறு நடந்தால் பக்கவாதம் வரும்.
Atherosclerosis
அத்திவாரம் இளவயதிலேயே
இந்தக் கொழுப்புப் படிவது இள வயதிலேயே ஆரம்பித்துவிடுகிறது.
அண்மையில் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளிடையே ஒரு ஆய்வு செய்யப்பட்டபோது அவர்களது இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிந்திருப்பது தெளிவாகக் காணப்பட்டது.
முக்கியமான விடயம் என்னவென்றால் இவர்கள் நல்ல ஆரோக்கியமானவர்கள். குருதிக் குழாய்களில் கொழுப்புப் படிவதற்கான இடர்; காரணிகள் (Risk factors) எதுவும் இல்லாதவர்கள் ஆவார்.
அதாவது அவர்களுக்கு கீழ்காணும் ஆபத்தான அடிப்படை இடர்  காரணிகள் எதுவும் கிடையாது என்பதுதான்.
  • நீரிழிவு
  • உயர் இரத்த அழுத்தம்
  • புகைத்தல் பழக்கம்
  • இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்பு
  • பரம்பரையில் இளவயதிலேயே மாரமடைப்பு வருவது
நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான இடர் காரணிகள் என இதுவரை காலமும் நம்பியிருந்தவை எதுவும் இல்லாதபோதும் ஏன் அவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொலஸ்டரோல் படிந்தது?
காரணம் என்ன?
காரணம் இவர்களில் நலக்கேட்டிற்கான வேறு விடயங்கள் காரணிகளாக இருந்தன. இவைதான் நாடித் தடிப்பு ஏற்படுவதற்கான புதிய காரணிகள். அவை என்ன?
  • அவர்களின் வயிற்றறையின் சுற்றளவு அதிகமாக இருந்தது. வயிற்றில் உள்ள உள்ளுறுப்புகளில் கொழுப்பு அதிகமாகப் படிந்தமைதான் வயிறு பருத்ததற்குக் காரணமாகும்.
  • அதேபோல நெஞ்சறையின் உள்ளுறுப்புளிலும் கொழுப்புப் படியலாம்.
visceral Fat
இந்த ஆய்வு கனடாவின் Heart and Stroke Foundation னால் செய்யப்பட்டது.
யுத்தத்திலும், விபத்துகளிலும் இறந்த இளவயதினரிடையே செய்யப்பட்ட பரிசோதனைகளில் அவர்களில் 80 சதவிகிதமானோருக்கு நாடித் துடிப்பு இருந்ததை முன்பு ஓர் ஆய்வு சுட்டிக் காட்டியது. எனவே அவர்கள் வெளிப்படையாக ஆரோக்கியமானவர்களாக இருந்தபோதும் எதிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான அத்திவாரம் போடப்பட்டமை உறுதியாகியது.
ஆபத்தைக் கணிப்பது எப்படி?
ஒருவரின் ஆரோக்கியத்தை அறிவதற்காக உயரம் (Height)> எடை (Weight), உடற்திணிவுக் குறியீடு ஆகியவற்றை மட்டும் அளந்து பார்ப்பது போதுமானதல்ல என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. வயிற்றறையின் சுற்றளவை அளப்பது முக்கியமானது.
  • ஆண்களில் இது 102 செ.மி ஆகவும்,
  • பெண்களில் 88 செ.மி ஆகவும் இருக்க வேண்டும்.
abd circumferance
வயிற்றின் சுற்றளவை விட, வயிற்று சுற்றளவிற்கும், இடுப்புச் சுற்றளவிற்கும் இடையோயன சதவிகிதம் முக்கியமானது என நம்பப்படுகிறது.
  • இது பெண்களில் 0.8ற்று குறைவானவும்,
  • ஆண்களில் 0.9 க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும்.
செய்ய வேண்டியது என்ன?
எனவே இளவயதிருக்கான செய்தி என்ன?
‘எங்களுக்கு நல்ல உணவு கிடைக்க்pறது. நன்றாகச் சாப்பிடுகிறோம். களைப்புக் கிடையாது. உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. நாம் அதியுயர் மனிதர்கள்’ என்ற மாயையில் மூழ்கியிருக்காதீர்கள்.
How-to-lose-belly-fat-for-kids
எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளான மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் போன்றவை வருவதற்கான அடித்தளம் ஏற்கனவே உங்களுக்கும் போடப்பட்டிருக்கலாம்.
ஆயினும் காலம் கடந்துவிடவில்லை. உங்களுக்கு ஆபத்தைக் கொண்டுவரக் கூடிய இடர் காரணிகளைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பருத்த வயிறு முக்கியமான பிரச்சனை என்பதை மறக்காதீர்கள்.
0204running
ஆரோக்கியமான உணவு முறை, தினசரி உடற் பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தைக் கடைப்பிடியுங்கள். இவற்றைச் செய்ய வேண்டிய வயது எனக்கு ஆகவில்லை என ஒருபோதும் எண்ண வேண்டாம். இப்பொழுதே ஆரம்பியுங்கள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...