நடைமுறை வாழ்க்கைப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதும், பொருளாதாரத் தேடலில் அதிகப் போட்டிகளையும் அதனால் ஏற்படும் மன அழுத்தங்களையும் எதிர்கொள்ள நேருவதால் இன்றைய இளைய தலைமுறையினருக்கு சிறிய வயதிலேயே முடி உதிர்தலும், வழுக்கையும் சகஜமாகிவிட்டன. அவசர யுகம் என்பதற்கேற்ப எதையும் யோசிக்க நேரமின்றி தலையில் தேய்த்தவுடன் பிரச்சினை தீரவேண்டும் என்று எண்ணுவோரை மையமாகக் கொண்டே ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து எல்லாம் முடி வளர் தைலங்கள் வரத் தொடங்கிவிட்டன.
ஆனால், மும்பையில் ரிச்பீல் மருத்துவ மையத்தில் பணிபுரியும் முடி சிகிச்சை மருத்துவரான டாக்டர் அபூர்வா ஷா, ஒழுங்கற்ற உணவு முறைகளைக் கொண்ட ஒரு நபருக்கே முடி பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றார். முடி வளர்வதற்கான புற சிகிச்சைகளை விடுத்து முதலில் தன்னுடைய உணவு முறையை ஒருவர் சீராக்க வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார்.
புரதங்கள், கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவே ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ஒருவரது உடல்நலத்தின் ஆரோக்கியத்தை அவரது முடியின் தன்மையே வெளிப்படுத்தும். முடி வளர்ச்சியில் பிரச்சினை ஏற்பட்டால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவைக் கவனித்து அதனை முதலில் சரிசெய்ய வேண்டும் என்று டாக்டர் அபூர்வா ஷா தெரிவிக்கின்றார்.
ஒருவரது முடி வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்க உதவும் உணவு வகைகள் என்று அவர் பின்வரும் உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளார்; பால் மற்றும் பால் பொருட்கள் (தினமும் ஒரு டம்பளர் பாலுடன் பால் பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்), சோயா சத்து மிகுந்த உணவு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் (பேரிக்காய், தக்காளி, பப்பாளி, பச்சைக் கீரைகள்), கிரீன் டீ ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இரும்பு, கால்சியம் போன்ற கனிமச் சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். தண்ணீர் தினமும் 12-14 டம்ளர்கள் கட்டாயம் அருந்தவேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் கனிமச் சத்துகள் நிறைந்த இளநீரைத் தினமும் அருந்தலாம் என்று அபூர்வா ஷா குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரமான உணவு அட்டவணையைத் தொடர்ந்து பின்பற்றுவதன்மூலம் உடல்நலத்தைப் பேணிக் காத்து வந்தாலே முடியும் செழிப்புடன் விளங்கும் என்று இந்த முடி சிகிச்சை மருத்துவர் உறுதிபடக் கூறுகின்றார்.
No comments:
Post a Comment