இதய நோய்கள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு,
ரத்தக் குழாய் பாதிப்பு, நரம்பு மண்டலப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு
பிரச்னைகள் இந்நோய் காரணமாக ஏற்படும். இது சத்தமின்றி வந்து, வாட்டி
வதைக்கக் கூடிய ஒன்று என்பதால்தான், 'சைலன்ட் கில்லர்’ என்றும் பெயர்
சூட்டியுள்ளனர். எனவே, 'ப்ரீ டயாபீட்டிஸ்’ நிலையில் இருக்கும்போதே வளர
விடாமல் தடுப்பதே புத்திசாலித்தனம்'' என்ற டாக்டர் கருணாநிதி,
''திரும்பத் திரும்ப வலியுறுத்துவது உணவுப்
பழக்கத்தைத்தான். இஷ்டம்போல சாப்பிடவே கூடாது. குறிப்பாக ஸ்வீட். பொதுவாக,
'ஸ்வீட் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது. ஆனால், சர்க்கரை நோய் வந்த
பிறகு ஸ்வீட் சாப்பிடக்கூடாது' என்பார்கள். ஆனால், ஸ்வீட் என்பதே உணவுக்கு
அவசியமல்ல. காரணம், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலுமே இயற்கையாகவே
போதுமான சர்க்கரை சத்து இருக்கிறது. எனவே, தனியாக சர்க்கரையை எடுத்துக்
கொள்ள தேவையில்லை. கண்ணில் கண்ட இடத்தில் எல்லாம் கிடைக்கிறதே என்பதற்காக
ஸ்வீட், சாக்லேட் என்று பழக்கப்படுத்துவது பேராபத்து'' என்று எச்சரிக்கை
செய்தார்.
வாயைக் கட்டுவோம்... சர்க்கரையை விரட்டுவோம்!
உலக நீரிழிவு நோய் தினம்!
சார்லஸ் பெஸ்ட் என்பவருடன் இணைந்து, பிரடெரிக் பான்டிங்
என்பவர், 1921-ம் ஆண்டில் சர்க்கரை நோய்க்கு பயன்படும் இன்சுலின்
மருந்தைக் கண்டுபிடித்தார். பான்டிங்கின் பிறந்த தினம் நவம்பர் 14. இந்த
நாள்தான், உலக அளவில் இந்த நோய் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்குவதற்காக
'உலக சர்க்கரை நோய் விழிப்பு உணர்வு தினம்’ என ஐக்கிய நாடுகள் சபையால்
2006-ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
காலை உணவு... தவிர்க்க வேண்டாம்!
காலை 7 மணி, மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணி...
இதையட்டிய நேரங்களில் நம்முடைய உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் உச்சத்தில்
இருக்கும். இந்நேரத்தில் சாப்பிடும்போது... கூடுதல் உழைப்பு இன்றியே, 500
கலோரி வரையிலான ஆற்றல் எரிக்கப்படும். இதனால், உடல் எடை அதிகரிப்பது
தவிர்க்கப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கென்று தனியே சமைக்க வேண்டும் என்பது
கிடையாது. சர்க்கரையின் அளவை அதிகரிக்காத எந்த உணவையும் எடுத்துக்
கொள்ளலாம்.
சாப்பிடுவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள்.
இது உங்களது பசியைக் குறைத்து, உணவு எடுத்துக் கொள்ளும் அளவையும்
குறைக்கும். மூன்றுவேளை சாப்பிடும் உணவை, ஐந்து அல்லது ஆறு வேளைகளாக
பிரித்துச் சாப்பிடலாம். 'நானெல்லாம் ரொம்ப பிஸி...' என்று அலுவலக
வேலைகளில் தீவிரமாக இருப்பவர்கள்... கையோடு காய்கறி மற்றும் பழங்களை
சாலட்களாக எடுத்துச் சென்று, டீ குடிக்கும் நேரம்... இடைவெளி கிடைக்கும்
நேரம் என்று சாப்பிட்டுக் கொள்ளலாம். தினசரி உணவில் குறைந்தது 25 கிராம்
முதல் 30 கிராம் அளவுக்கு நார்ச்சத்துள்ள உணவுகள் அவசியம். அதிக அளவில்
பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.
தினசரி உணவு அட்டவணைக்கு உட்பட்டு அல்லது போதுமான
உடற்பயிற்சி செய்பவர்கள்... இனிப்பு வகைகளை கொஞ்சமாக சாப்பிடலாம்.
மற்றவர்கள் இனிப்புப் பொருட்களை தவிர்ப்பதுதான் நல்லது. குறிப்பாக வெள்ளை
சர்க்கரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கருப்பட்டி, வெல்லம்,
நாட்டுச்சர்க்கரை போன்றவற்றைச் சேர்க்கலாம்.
துடிப்பான வாழ்க்கைமுறை..!
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாதவர்கள்... இனியாவது
தினமும் உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என ஏதாவது ஒன்றை செய்யத்
தொடங்குங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன்
மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம். இதைச் செய்ய
முடியாதவர்கள் எளிய நடை பயிற்சி, வீட்டு வேலைகளை செய்தல், மாடிப் படிகளில்
ஏறி இறங்குதல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை செய்தாலே போதுமானது.
உணவு... உஷார்!
தவிர்க்க வேண்டியவை:
சர்க்கரை, இனிப்பு வகைகள், தேன், ஜாம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு,
ஊட்டச்சத்து பானங்கள், குளிர்பானங்கள், கார்பனேட்டட் பானங்கள், பிஸ்கட்,
மைதாவில் தயாரிக்கப்படும் கேக், பிரெட், பன், பீட்ஸா, பர்கர், கொழுப்பு
அதிகம் உள்ள வெண்ணெய், சீஸ், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, நண்டு,
இறால், ஆடு, மாடு இறைச்சி, மூளை, கல்லீரல், சிறுநீரகம் போன்றவை.
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நூடுல்ஸ் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
குறைக்க வேண்டியவை:
தேங்காய், எள், முந்திரி மற்றும் நெய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு,
மரவள்ளிக்கிழங்கு. அசைவம் மிகவும் குறைக்கப்படவேண்டும். வாரத்துக்கு இரண்டு
முறை தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி (80 கிராம்) அல்லது மீன் (100 கிராம்)
எடுத்துக் கொள்ளலாம்.
எடுக்க வேண்டியவை: ஆப்பிள்,
கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, நாவல் பழம்,
பேரிக்காய், அத்தி, மாதுளை, தர்பூசணி ஆகிய பழங்களை... வயது, உடல் உழைப்பு,
எடை, இதர நோய்களைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம். பழங்களை கடித்துச்
சாப்பிட வேண்டுமே தவிர, சாறாக அருந்தக் கூடாது.
சிறுநீரகங்கள் ஜாக்கிரதை!
'அதுதான் சர்க்கரைக்கு மருந்து, மாத்திரைகள்
இருக்கின்றனவே...' என்றபடி இஷ்டம்போல மாத்திரைகளை அள்ளி விழுங்கிக்
கொண்டிருந்தால்... ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரச்னைகள்
ஆரம்பமாகிவிடும். இத்தனை நாட்களாக உங்களுக்கு மருந்து, மாத்திரைகளை எழுதிக்
கொடுத்த அதே டாக்டர், ''அடடா... கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சே. ம்...
இத்தனை வருஷமா மருந்து, மாத்திரையா சாப்பிட்டிருக்கீங்க. அதோட வீரியம்
சும்மா இருக்குமா, கிட்னியை காலி பண்ணிடுச்சு'' என்று சிம்பிளாக
சொல்லிவிடுவார். பிறகென்ன, கிட்னி பிரச்னையும் சேர்ந்து கொள்ள, வாழ்க்கையே
நரகமாகிவிடும்!
சர்க்கரை நோயாளிகளுக்கு அழுத்தத்தைத் தாங்கக் கூடிய
கால் பகுதியில் அடிக்கடி புண் ஏற்படும். இப்படி ஆறில் ஒருவருக்கு வருவதாக
புள்ளிவிவரம் சொல்கிறது. இது, கால்களைத் துண்டிக்கும் அளவுக்குப் பிரச்னையை
உருவாக்குகிறது. காயங்கள், வெடிப்புகள், கொப்புளங்கள், வீக்கம், நகங்களில்
பிரச்னை என இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க
வேண்டும்.
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா