நான் ஒரு விவசாயி. வயது 60. சிறுநீர் கழித்த இடத்தில் நிறைய எறும்புகள் மொய்க்கின்றன. "சர்க்கரை நோய் உனக்கு உள்ளது, சிறுநீரகம் பழுதாகிவிட்டது' என்று நண்பர் பயமுறுத்துகிறார். இது எந்த நோயின் அறிகுறி? இதற்கு என்ன ஆயுர்வேத மருந்து சாப்பிடலாம்?
வை.தேவராஜன், அடைக்கம்பட்டி.
"மூத்ரஸ்யக்லேதவாஹனம்' என்கிறது ஆயுர்வேதம். சிறுநீரின் வழியாக "க்லேதம்' அதாவது உடல் உட்புறப் பிசுபிசுப்பு திரவம் எடுத்துச் செல்லப்பட்டு வெளியேறுகிறது என்று அதற்கு அர்த்தம் கூறலாம். இந்தத் திரவம் எங்கிருந்து ஏற்படுகிறது? உணவில் இயற்கையாகவே அமைந்துள்ள கொழுப்புப் பொருட்கள், எண்ணெய்ச் சத்துகள், இனிப்புச்
சுவையில் நிறைந்துள்ள நிலம் மற்றும் நீரின் பூதாதிக்யங்கள் போன்றவையின் செரிமான பாக்கிகள்தான் அவை. உடல் உட்புறங்களில் அவை தேங்கவிடாமல் இருப்பதற்காக, சிறுநீரின் வழியாக உடலே வெளியேற்றுகிறது. வீட்டில் எண்ணெய்ப் பிசுக்குள்ள தரை, சாமி விளக்குத் திரி, காப்பி சிந்தியுள்ள இடம், சரியாக மூடாமல் மறந்துவிட்ட வெல்ல டப்பா, குளிர்ச்சியான அரிசி வைத்துள்ள ட்ரம், இரவில் படுக்கச் செல்லும் முன் துடைக்காமல் விட்டுவிட்ட கேஸ் அடுப்பு போன்றவற்றில் எறும்பு ஊறுவதை நாம் பார்க்கிறோம். இவற்றிலுள்ள சுவையின் மீது நாட்டம் ஏற்பட்டு எறும்புகள் மொய்க்கின்றன எனப் பொதுவாக நாம் கருதினாலும் அங்குள்ள குளிர்ச்சியும் காரணமாகலாம். உங்களுடைய விஷயத்தில் இந்தக் க்லேதம் எனும் குளிர்ச்சியான கழிவு சற்றுக் கூடுதலாக வெளியேறுகிறதோ? என்று தோன்றுகிறது.
வாயு மற்றும் ஆகாய மகாபூதத்தை அதிகம் உள்ளடக்கிய கசப்புச் சுவையைக் கொண்ட மணத்தக்காளி, பொன்னாங்கண்ணிக் கீரை, பாகற்காய், சுண்டைக்காய், மஞ்சள் போன்றவற்றையும், வாயு - நிலம் ஆதிக்கம் கொண்ட துவர்ப்புச் சுவையை உள்ளடக்கிய கடுக்காய், கருங்காலி, தேன், அத்தி, வாழைப்பூ போன்றவற்றையும் சற்று அதிகம் உணவில் சேர்த்துக் குடலின் வழியே ஜீரண கோசங்களில் உறவாடச் செய்தால், அவற்றின் மூலம் சிறுநீர் வெளியேற்றத்தில் சூட்டை அதிகமாக்காமல் குளிர்ச்சியைக் குறைத்து கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையை வெளியேற்றினால் அநேகமாக எறும்புகள் உங்கள் சிறுநீரை திரும்பிக் கூடப் பார்க்காமல் மறுபக்கம் ஓடிவிடும். இதிலுள்ள வேறு ஒரு நன்மை, சிறுநீரகங்களில் க்லேதம் எனும் பிசுபிசுப்பான திரவம் அதிக தடிமனாக இல்லாமல் மெலிந்த திரவமாக வருவதால், அதன் வேலைப் பளுவை எளிதாக்கி, அதன் செயல்திறனையும் கூட்டு
கிறது. பெருமளவு ரத்த அழுத்தம் சிறுநீரகங்களில் சீராக இருக்குமென்பதால், அவை பழுதடையும் வாய்ப்பையும் குறைக்கலாம். இந்த இரு சுவைகளும் வறட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. அதனால் உட்புறங்களில் கசியும் தேவையற்ற நீரைச் சுண்டச் செய்து, சிறுநீரகங்களுக்கு அனுசரணையாக இருந்து நீரைப் பிரித்து வெளியேற்றுவதால், உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னை தீர, நிறைய வாய்ப்பிருக்கிறது.
விளாமிச்சம் வேர்,
சந்தன சிராத்தூள்,
நில வேம்பு, மரமஞ்சள், கடுக்காய்த் தோல்,
கருங்காலிக் கட்டை
போன்றவற்றை வகைக்கு
5 கிராம் வீதம் எடுத்து, இரவில் அவை மூழ்குமளவு தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலை கசக்கிப் பிழிந்து வடிகட்டிய நீரை, வெறும் வயிற்றில் குடித்தாலும் உங்கள் உபாதைக்கு நல்ல தீர்வு கிடைக்கலாம்.
சாரீபாத்யாஸவம் எனும் ஆயுர்வேத மருந்தை சுமார் 30 மி.லி. காலை, இரவு உணவுக்குப் பிறகு 48 நாட்கள் சாப்பிடுவது நல்லது.
No comments:
Post a Comment