May 16, 2012

சர்க்கரையைச் சமாளிக்க இன்சுலின் பம்ப்!


2020-ல் இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ.... உலக அளவில், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில் எட்டு கோடியைத் தொட்டுவிடும்!'' என்று எச்சரிக்கிறது சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் சமீபத்திய ஆய்வு.   
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க முடியாத சங்கடம், இன்சுலின் ஊசி. இப்போது அந்தச் சங்கடத்துக்கு ஒரு மாற்று வந்திருக்கிறது. 'வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து ஊசி குத்திக்கொண்டு, வலியைத் தாங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் இனி சர்க்கரை நோயாளிகளுக்கு இல்லை!’ என்கிற நல்ல செய்தியைத் தர வந்திருக்கிறது 'இன்சுலின் பம்ப்’!

சர்க்கரை நோய் ஆராய்ச்சியாளர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியம் பேசும்போது... ''இன்சுலின் சுரக்கும் இடம் கணையம். நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் குளுக்கோஸை இன்சுலினே ரத்தத்தின் மூலமாக செல்களுக்கு அனுப்புகிறது. கணையத்தில் பிரச்னைகள் ஏற்படும்போது இன்சுலின் சுரப்பதிலும் குறைபாடுகள் உருவாகும். இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு, ஊசி மூலம் இன்சுலினைச் செலுத்துவது நடைமுறையில் இருக்கும் சிகிச்சை முறை. ஆனால், அடிக்கடி ஊசி மூலமாக இன்சுலினைச் செலுத்தும்போது வலியும் வேதனையும் இருக்கும். இதனால், தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள வேண்டிய நோயாளிகள்கூட சமயங்களில்  போட்டுக்கொள்வது இல்லை. இந்தப் பிரச்னைக்கு தீர்வாக 'இன்சுலின் பென்’ (Insulin Pen) வந்தது. ஆனால், அதன் பயன்பாடும் பலருக்குத் திருப்தியாக இல்லை.
இவர்களுக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இன்சுலின் பம்ப். இன்சுலின் பம்ப்பை வயிற்றுப் பகுதியில் செருகிக்கொள்வதால் ஒரு நாளைக்கு மூன்று - நான்கு தடவை ஊசி மூலம் இன்சுலின் செலுத்திக்கொள்ளும் வேதனை குறைகிறது. ஆரம்பத்தில் 'ஓப்பன் லூப் இன்சுலின் பம்ப்’  (Open loop insulin pump) அறிமுகம் செய்யப்பட்டது. இதில், ஒருவருக்கு எவ்வளவு இன்சுலின் தேவை என்பதைப் பரிசோதித்து, அதற்கேற்ப நாம் பட்டனை அழுத்தி  இன்சுலினைச் செலுத்த வேண்டி இருந்தது. பம்ப்பில் இன்சுலின் அளவு காலியானாலும் நமக்குத் தெரியாது. இந்தக் குறைபாடு இல்லாத வகையில் வந்திருப்பது 'க்ளோஸ்டு லூப் இன்சுலின் பம்ப்’ (Closed loop insulin pump). இதில் உள்ள பயோ-சென்சார் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைப் பரிசோதித்து, உடலுக்குத் தேவையான இன்சுலினைத் தானாகவே செலுத்தும். இதைச் 'செயற்கைக் கணையம்’ என்றே கூறலாம். ஒரு செல்போன் அளவே உள்ள இந்த இன்சுலின் பம்ப்பை நோயாளியின் இடுப்புப் பகுதியில் வைத்து அதில் உள்ள மெல்லிய பிளாஸ்டிக் குழாய் மற்றும் பிளாஸ்டிக் ஊசியை வயிற்றுக்குள் செருகிக்கொள்ளலாம். இதனால் எந்தவித அசௌகரியமும் இல்லாமல் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் இதில் இருக்கும் வசதி.
பல்வேறு சிகிச்சை முறைகளோடு ஒப்பிடுகையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவின் ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதில் க்ளோஸ்டு லூப் இன்சுலின் பம்ப் முழுமையான மருத்துவப் பயன் தருவதாக உள்ளது. மேலும் உடல் அளவிலும்  மனதளவிலும் சோர்ந்துபோக வேண்டிய நிலையும் இல்லை. எத்தனை யூனிட் இன்சுலின் தேவையோ, அதைத் துல்லியமாகக் கொடுக்கவும் முடிகிறது.
ஆரம்பத்தில் ஒரு இன்சுலின் பம்ப்பின் விலை மூன்று லட்சம் ரூபாயாக இருந்ததால், இது அதிக செலவுள்ள சிகிச்சை முறையாகக் கருதப்பட்டது. இன்னொரு விஷயம், இந்தச் 'சின்ன யானை’க்குத் தீனியும் போட வேண்டும். இன்சுலின் பம்ப் உபயோகிப்போர் இன்சுலினுக்காக மாதத்துக்கு ரூ. 3,000-ல் இருந்து ரூ. 5,000 ரூபாய் வரை செலவிடவேண்டும். ஆனால், இப்போது க்ளோஸ்டு லூப் இன்சுலின் பம்ப் ரூ. 80,000 முதல் ரூ. 2 லட்சம் வரைக்கும் கிடைக்கிறது'' என்றார் டாக்டர் பாலசுப்பிரமணியம்.
நல்ல செய்திதான். ஆனால், சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் விலை இன்னும் குறைந்தால்தான் இந்தச் செய்தி இனிக்கும்!
அரசுக்கு  வேண்டுகோள்!
இன்சுலின் பம்ப் குறித்து அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் கருணாநிதி. ''டைப்-1 சர்க்கரை நோய் சிறுவயதிலேயே குழந்தைகளைத் தாக்கக்கூடியது. இவர்களுக்குத் தினமும் நான்கு முறையாவது இன்சுலின் ஊசி போடவில்லை எனில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள்ளேயே கோமா நிலைக்கு சென்றுவிடுவார்கள். இதனால்  வாழ்நாள் முழுவதும் கண்டிப்பாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய பரிதாபத்திற்குரிய நிலையில் இவர்கள் இருக்கிறார்கள். இது உடல் வலி மட்டுமின்றி, மன வலியையும் அதிகரித்து, அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. தமிழ்நாட்டில் குறைந்தது 200 குழந்தைகளாவது டைப்-1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களை அரசு தயவு செய்து கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றவர், ''அரசின் காப்பீடு திட்டத்தில் இன்சுலின் பம்ப் பொருத்துவதையும் சேர்க்க வேண்டும். இப்போது இன்சுலின் பம்ப் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழக அரசே இறக்குமதி செய்வதன்மூலம் வரிகள் குறையும். மேலும், மொத்தமாக வாங்கும்போது அதன் விலை பாதியாகக் குறைந்துவிடும். அரசின் சார்பிலேயே இன்சுலின் பம்ப் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்தால் சர்க்கரை நோயால் ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு, இதயம், சிறுநீரக பாதிப்பு போன்றவற்றைக் குறைக்க முடியும்'' என்கிற வேண்டுகோளை முன்வைத்தார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...