அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை நிறுத்த வலியுறுத்தியும் தூத்துக்குடியில் மீனவர்கள் செப்.10ம் தேதி முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தொழிலாளர் சங்கத்தினர், மீனவ பெண்கள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தூத்துக்குடியில் ஒருவாரம் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் போராட்டக் குழுவினர் தங்களது அடுத்தக் கட்ட போராட்டமாக இன்று (சனி) தூத்துக்குடி துறைமுகத்தை கடல் வழியாக நூற்றுக்கணக்கான படகுகளில் சென்று முற்றுகையிடுவோம் என்று அறிவித்திருந்தனர். அதன்படி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று காலை 8.30 மணிக்கு 240க்கும் மேற்பட்ட படகுகளில் தலா 10 பேர் வீதம் சுமார் 2400 பேர் துறைமுகம் நோக்கி அணிவகுத்து சென்றனர்.
இதுபோல் திரேஸ்புரம், தெர்மல்நகர் பகுதியிலிருந்தும் ஏராளமான நாட்டுப் படகுகள் துறைமுகம் நோக்கி சென்றன. இவை தவிர கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான படகுகளில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே புன்னக்காயலில் கூடினர். பின்னர் அங்கிருந்து அணிவகுத்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுடன் துறைமுகம் நோக்கி வந்தனர். இவர்கள் அனைவரும் வெளிதுறைமுகம் முன் படகுகளை நிறுத்தி அணு மின்நிலையத்துக்கு எதிராக கோஷமிட்டனர். துறைமுகம் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமலிருக்க மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் ஸ்வரன்தாஸ், துணை கமாண்டன்ட் சந்தோஷ்குமார் தலைமையில் கடலோர காவல் படையினர், மரைன் போலீசார் ஆயுதம் ஏந்தி மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் தவிர அகல்யாபாய், நாயகிதேவி, வீரா உள்ளிட்ட 10 படகுகளில் கடலோர காவல் படையினர் துறைமுகத்தை சுற்றி தீவிர ரோந்து வந்தனர். இதற்காக மண்டபம், ராமேஸ்வரம், அதிராமபட்டினம், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 4 ரோந்து படகுகள் வரவழைக்கப்பட்டிருந்தன. கடலோர காவல்படையின் சிறிய ரக விமானங்களும் துறை முகத்தை வட்டமிட்டு வந்தன. மேலும் ஏடிஜிபி சைலேந்திரபாபு, டிஐஜி ஜான்நிக்கல்சன், எஸ்.பி.க்கள் மூர்த்தி, முகமது அனிபா ஆகியோர் தலைமையில் 1500 போலீசார், முக்கிய இடங்களில் போராட்டக்காரர்கள் நுழையாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே மீனவ பெண்கள், சிறுவர், சிறுமியர் இன்று காலை 11 மணிக்கு இடிந்தகரை, கூட்டப்புளி, தூத்துக்குடி கடற்கரையில் மனிதசங்கிலி போராட்டம் தொடங்கினர். தூத்துக்குடி துறைமுகத்தை மீனவர்கள் இன்று முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment