வாஷிங்டன்: அமெரிக்காவில், அனல் பறக்கும் பிரசாரம், நேற்று இரவு
முடிந்த நிலையில், இன்று, அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவின் 50
மாகாணங்களில், அதிபர் தேர்தல், இன்று நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில்,
அதிபர் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் முன்னாள்
முதல்வர், மிட்ரோம்னியும் களத்தில் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், மாகாண ஓட்டுக்களே, அதிபர் தேர்தல் வேட்பாளரின்
வெற்றியை நிர்ணயிக்கின்றன. ஒவ்வொரு மாகாணத்தின், தேர்வு குழுவினர் (எலக்டோரல் காலேஜ்) ஓட்டுகள் மூலம், அதிபர் தேர்வு செய்யப்படுகிறார். மொத்தம், 538 ஓட்டுகளில், 270 ஓட்டுகள் பெறுபவரே அதிபராக நியமிக்கப்படுகிறார்.பல மாதங்களுக்கு முன், அதிபர் தேர்தலுக்குரிய வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பிரசாரம் நேற்று இரவுடன் முடிந்தது. உள்ளூர் விஷயங்கள் முதல், உலக விஷயங்கள் வரை விவாதித்து விட்டனர். இனி அதிபரை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு, மக்கள் கையில் தான் உள்ளது.
குடியரசு கட்சிக்கு, டெக்சாஸ் உள்ளிட்ட மாகாணங்கள் கோட்டையாக உள்ளன. கலிபோர்னியா, பெல்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில், ஜனநாயக கட்சி, செல்வாக்கு பெற்றுள்ளது. ஒஹியோ, ஐயோவா, விர்ஜினியா உள்ளிட்ட 10 மாகாணங்களில், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.
இந்த மாகாண வாக்காளர்களை கவர்வதற்காக, ஒபாமாவும், மிட் ரோம்னியும் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டனர். அதிபர் ஒபாமா,தனது மனைவி மிச்சேலுடன், ஓஹியோ மற்றும் ஐயோவா மாகாணங்களில் நேற்று பிரசாரம் செய்து விட்டு, தனது கோட்டையான சிகாகோவில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.எதிர்கட்சி வேட்பாளர் மிட்ரோம்னி, புளோரிடாவில் பிரசாரத்தை நேற்று காலை துவக்கி, விர்ஜினியாவி, ஓஹியோவில் தீவிர பிரசாரம் செய்து, நள்ளிரவில் நியூஹாம்ஷயரில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.
ஜனநாயக கட்சி சார்பில், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜோ பிடன், விர்ஜினியாவில் தீவிர பிரசாரம் செய்தார். இவரை எதிர்த்து போட்டியிடும், குடியரசு கட்சி வேட்பாளர் பால் ரையன், நிவேடா, கொலராடோ, ஐயோவா, விஸ்கான்சின் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.அமி பெரி உள்ளிட்ட ஆறு இந்திய வம்சாவளியினர் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர்களில் மூன்று பேருக்கு தான் வெற்றி வாய்ப்பு உள்ளது.சமீபத்தில்,"சாண்டி' புயல், 15 மாகாணங்களை சூறையாடியது. நியூயார்க் மற்றும் நியூஜெர்சி பகுதிகளில் இன்னும், சகஜ நிலை ஏற்படவில்லை. மின்சாரம் இன்றி, 40 லட்சம் பேர் அவதிக்குள்ளாகியுள்ளனர்."போதிய நிவாரண பணிகள் மேற்கொள்ளாததால், ஒபாமாவின் ஓட்டுக்கள் சரியக்கூடும்' என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க தேர்தலில், கம்ப்யூட்டர் மூலம் ஓட்டுகள், பதிவு செய்யப்படுகிறது.அமெரிக்காவில் முன் கூட்டியே ஓட்டுபோடும், நடைமுறை உள்ளது. இதன் படி, 34 மாகாணங்களில், 2.7 கோடி பேர் ஓட்டு போட்டு விட்டனர்.நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில், அமைக்கப்பட்ட ஓட்டு சாவடிகள், புயலில் சேதமடைந்து விட்டன. எனவே, புதிய ஓட்டு சாவடிகள், ராணுவ வாகனங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment