Apr 30, 2013

கேள்விப்படாத கூகுள் சேவை சாதனங்கள்



Posted: 30 Apr 2013
எந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது. 

கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம். 

கூகுள் தரும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் கூட ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கு ஆச்சரியமானதாகத்தான் உள்ளது. இருப்பினும், கூகுள் இன்னும் பல சேவைகளை நமக்கு வழங்கி வருவது பலருக்குத் தெரியவில்லை. இவை எல்லாமே, இணையத்தில் இருக்கின்றன. நம் வாழ்வை இன்னும் சிறப்பாகவும், சுவைபடத்தக்கதாகவும் மாற்றி வருகின்றன. இவற்றை இங்கு பட்டியலிட்டுப் பார்க்கலாம். 


1. கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேட் (Google transliterate) இது ஒரு இலவச மொழி பெயர்க்கும் புரோகிராம். 64 மொழிகளுக்கிடையே மொழி பெயர்க்கும் பணியைத் தருகிறது. இதன் மூலம் சொற்கள், வாக்கியங்கள், இணையப் பக்கங்களை மொழி பெயர்க்கலாம். 
எண்ணற்ற தகவல்கள் அவை எந்த மொழியிலிருந்தாலும், வாடிக்கையாளர்கள் தங்கள் மொழியில் பெற முடியும். ஒருவர் தங்கள் மொழியில் இருப்பதனை, அல்லது அடுத்த மொழியிலிருப்பதனை, அதன் ஒலிக்குறிப்பில் டைப் செய்தால் போதும். சரியான டெக்ஸ்ட்டில் அவை அமைக்கப்பட்டு, மொழி பெயர்க்கப்படும்.
2. என்கிரிப்டட் சர்ச் (Encrypted Search):தேவையானவற்றைத் தேடுவதற்கு இது ஒரு வேகமான தேடுதளம். இந்தத் தளத்தின் முகவரி encrypted.google.com.வங்கிகள் பயன்படுத்தும் Secure Socket Layers (SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம் முதல் இந்த சேவை வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டு வருகிறது.
3. கூகுள் திங்க் (Google Think) கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள் வர்த்தக செயல்பாடுகளுக்கான ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும், குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும் அதனைப் போல சேவைத் தளங்களில் இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம். 
இங்கு கிடைக்கும் பல ஆய்வுகள், ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள் ஆகியவை பலரது வாழ்வில் புதிய திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும் கூறி உள்ளனர். 
4. கூகுள் மாடரேட்டர் (Google Moderator): பலவகைத் தலைப்புகள் குறித்து இங்கு இலவசமாகக் கலந்து ஆலோசிக்கலாம். கருத்துக்களை வரவேற்று, எந்த ஒரு வாடிக்கையாளரும், புதிய இழை ஒன்றை உருவாக்கலாம். கேள்விகளைக் கூடப் பதியலாம். 
இந்த தளத்திற்கு வரும் எவரும் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம். குறிப்பிட்ட கருத்தை வரவேற்று அதற்கு வாக்களிக்கும் வசதி கூட இதில் உள்ளது. முதல் கேள்விகள், நீல நிறப் பின்னணியில் மையக் கேள்வியாகக் காட்டப்படும். மற்றவர்கள் இது குறித்து தகவல் தெரிவிக்கலாம். ஒரு கருத்துரு அல்லது தலைப்பின் கீழ் துணைப் பிரிவுகளையும் உருவாக்கலாம்.
5. கூகுள் சவுண்ட் சர்ச் (Google Sound search): இது ஒரு விட்ஜெட் எனப்படும் அப்ளிகேஷன். நம்மைச் சுற்றி இசைக்கப்படும் இசை மற்றும் பாடல்களை அறிந்து அடையாளம் கொள்ள இது உதவி புரிகிறது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, அடையாளம் காணப்பட்ட பாடல்களை விலைக்கு வாங்க முடியும். அடையாளம் காணப்படும் பாடல்களின் பட்டியலை உருவாக்கி வைத்து, பின்னொரு நாளில் கேட்கலாம் மற்றும் வாங்கலாம்.
6. கூகுள் ஸ்கீமர் (Google Schemer): தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, அவற்றை மேற்கொள்வதற்கான வழிகளைத் தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. மேற்கொள்ளப்பட இருக்கும் வேலைகள் எது வேண்டுமானதாகவும் இருக்கலாம். 
ஓர் அருங்காட்சியகம் செல்லுதல், நண்பர்களுடன் கூட்டாகக் கலந்துரையாடல், வார இறுதிக்கான சுற்றுலா செல்ல இடம் தேர்ந்தெடுத்தல் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏற்கனவே இது போல கலந்துரையாடப்பட்டு வரையறை செய்யப்பட்ட திட்டங்களும் இதில் கிடைக்கும்.
7. பவர் சர்ச்சிங் வித் கூகுள் (Power searching with Google): தேடுதல் தளம் தான், கூகுள் நிறுவனத்தின் வலிமையே. அந்த வகையில், எப்படி சிறப்பாக நம் தேடுதலை அமைத்துக் கொள்ளலாம் என்று, இந்த தளத்தில், கூகுள் நமக்கு டிப்ஸ் தருகிறது. இணையத்திலேயே பயிற்சியும் தரப்படுகிறது. இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட வழிகளை, தேடுதலுக்கென நாம் தெரிந்து கொள்கிறோம்.
8. பில்ட் வித் குரோம் (Build with chrome):ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனமான லெகோவுடன் இணைந்து கூகுள் அமைத்த தளமே பில்ட் வித் குரோம். இது ஒரு நவீன இணைய தொழில் நுட்பமாகும். இங்கு பிரவுசர் வழியாக, முப்பரிமாணப் படங்களைக் காணலாம். பயனாளர்களும் தங்களின் முப்பரிமாண உருவங்களை அமைக்கலாம். இதில் செயலாற்றுவது மிகவும் வேடிக்கை நிறைந்ததாக உள்ளது. 
9. கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் (Google Art Project): இது கூகுள் தரும் ஸ்ட்ரீட் வியூ போன்றதாகும். மியூசியம்,கலை அரங்கங்கள் ஆகியவற்றிற்கு, வாடிக்கையாளர்கள், இணைய வெளியிலேயே சுற்றுலா மேற்கொள்ளலாம். கலைத் துறையில் முன்னணியில் ஈடுபடும், 40 நாடுகளைச் சேர்ந்த 151 வல்லுநர்களுடன் இணைந்து இந்த தளத்தினை கூகுள் அமைத்துள்ளது. மியூசியம் நிர்வாகிகளிடமிருந்து அளப்பரிய தகவல்களும், கூகுள் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்பமும் இந்த தளத்தில் இணைந்து வாடிக்கையாலர்களுக்கு நல்லதொரு அனுபவத்தினைத் தருகின்றன.
10. கூகுள் ஸ்காலர் (Google Scholar): இலக்கியம், ஆய்வு கட்டுரைகள், கல்வித் துறை சார்ந்த பதிப்புகள், இணைய வெளி தகவல் சேமிப்புகள், ஆய்வுச் சுருக்கங்கள் மற்றும் நீதிமன்றம் வெளியிடும் கருத்துகள் ஆகியவை குறித்து உரையாட இது ஒரு நல்ல தளம். மிகப் பெரியதாக விரிந்து இருந்தாலும், இதனை அணுகுபவர்கள், தங்களுக்குத் தேவையானதை மிக எளிதாகப் பெற்று இயங்கலாம்.
11. கூகுள் மார்ஸ் (Google Mars): அரிசோனா பல்கலையில் உள்ள, நாசா விண் வெளி ஆய்வு விஞ்ஞானிகளுடன் கூட்டாக இணைந்து, சிகப்பு கிரகமான மார்ஸ் குறித்த மேப் ஒன்றை கூகுள் தயாரித்துள்ளது. இது ஏறத்தாழ கூகுள் எர்த் போன்றதாகும். அதன் மூலம் நாம் எப்படி பூமியின் அனைத்து பாகங்களுக்கும் சென்று வர முடிகிறதோ, அதே போல மார்ஸ் கிரகத்திற்கு, கூகுள் இதில் பாதை அமைத்துத் தருகிறது. மார்ஸ் எப்படி தோற்றமளிக்கும் என்பதனை நாம் கண்டு கொள்ள அருமையான தளம் இது.
Posted: 30 Apr 2013 06:51 AM PDT

சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், சாப்பிடும் உணவு போல இணையம், இன்றைய உலகையும் நம்மையும் கட்டிப் போட்டுள்ளது. இணையம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலவில்லை. 

நம் வாழ்க்கை விரக்தியின் எல்லைக்கே சென்று விடும். இணையம் நமக்கு தகவல்களைத் தருகிறது; நாம் வாழும் சமூகத்தை நம்முடன் இணைக்கிறது. வர்த்தகத்தையும், நம் அன்றாடப் பணிகளையும் மேற்கொள்ள அடிப்படைக் கட்ட மைப்பாய் இயங்குகிறது. 

நாம் மகிழ்வாக இருக்க, பொழுதினைப் பொறுப்போடும், ரசிப்புத் தன்மையுடனும் கழிக்கத் தேவையானவற்றைத் தருகிறது. இப்படி இன்னும் இந்த பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம். 

இது போல இணையத்தினை வடிவமைத்துத் தந்ததன் பின்னணியில் பல்லாயிரக் கணக்கானவர்கள் இருக்கலாம். இருப்பினும், தலைமைப் பொறுப்பில் இருந்து இந்த மாற்றங்களை அவ்வப்போது கொண்டு வந்தது சிலரே. அவர்களை இங்கு காணலாம்.
1. விண்ட் செர்ப் மற்றும் பாப் கான் (Robert Elliot “Bob” Kahn and Vinton G. Cerf): 
இணையத்தின் தந்தையர்கள் என்று அழைக்கப்படுபவர்கள். இவர்கள் தான் இணையத்தினை முதன்முதலில் வடிவமைத்தவர்கள். அமெரிக்காவில் இயங்கிய பொறியாளர்கள். கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள். இணையத்தின் கட்டமைப்பான Transmission Control Protocol (TCP) and the Internet Protocol (IP), என்பதனை வடிவமைத்தவர்கள். 
2. டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee): World Wide Web (WWW) என்னும் கட்டமைப்பை உருவாக்கியவர். 
3. லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds): பின்லாந்து நாட்டைச் சேர்ந்த அமெரிக்க சாப்ட்வேர் பொறியாளர். லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் கட்டமைப்பிற்கு அடிப்படையை அமைத்தவர். யூனிக்ஸ் சிஸ்டம் குறித்து பல்கலையில் படித்த பின்னர், லினக்ஸ் சிஸ்டம் வடிவமைப்பினை தன் ஆய்விற்கு எடுத்துக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றவர். 
1991ல் இதனை வெளியிட்ட பின்னர், பல லட்சக் கணக்கானவர்கள் இன்று வரை இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். பலரால் இது மேம்பாடு அடைந்துள்ளது. சாதாரண சர்வர்கள் முதல், மெயின் பிரேம் கம்ப்யூட்டர்கள், சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றின் இயக்க முறைமையாக லினக்ஸ் இயங்கி வருகிறது. 
4. ராஸ்மஸ் லெர்டோர்ப் (Rasmus Lerdorf) டேனிஷ் நாட்டைச் சேர்ந்த கனடா நாட்டுக் குடிமகன். பொறியாளர். இன்று இணைய தளங்களில் பயன்படும் PHP ஸ்கிரிப்டிங் மொழியை அதன் வேரிலிருந்து அமைத்துக் கொடுத்தவர். இரண்டு கோடிக்கும் மேற்பட்ட இணைய தளங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. பத்து லட்சம் இணைய சர்வர்களை இது இயக்குகிறது. PHP என்பது முதலில் Personal Home Page என்பதன் சுருக்கமாக இருந்தாலும், இப்போது PHP Hypertext Preprocessor என அழைக்கப்படுகிறது. 
5. ரா தாமஸ் பீல்டிங் (Roy Thomas Fielding): அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானி. HTTP என்பதனை வரையறுத்து வடிவமைத்துத் தந்தவர். கம்ப்யூட்டர் நெட்வொர்க் ஆர்க்கிடெக்சர் என்னும் பிரிவில் ஒரு தலைமை விஞ்ஞானி.
6. ஹக்கான் வியூம் லீ (Håkon Wium Lie): ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை விஞ்ஞானி. இணைய பொறியாளர்களில் முன்னணியில் செயலாற்றியவர். Cascading Style Sheets (CSS) என்ற கோட்பாடினைக் கொண்டு வந்து செயல்படுத்தியவர்.
7. ரே டாம்லின்ஸன் (Ray Tomlinson): மின் அஞ்சலின் தந்தை எனப் போற்றப்படுபவர். 1971ல் ARPANET கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில், முதன் முதலில் மின் அஞ்சலை இயக்கிக் காட்டியவர். 
8. ராபர்ட் டப்பான் மோரிஸ் (Robert Tappan Morris): இணையத்தில் முதல் வைரஸ் என அழைக்கப்படும் மோரிஸ் வோர்ம் என்ற வைரஸை உருவாக்கியவர். இது 1988ல் நடந்தது. கம்ப்யூட்டர் மோசடி மற்றும் தீய நோக்கத்திற்காகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிரான சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட முதல் நபர்.
9. டாம் ஆண்டர்சன் (Tom Anderson): முதல் சோஷியல் இணைய தளமான மை ஸ்பேஸ் (“My Space”) என்பதனை உருவாக்கியவர். 2003ல் இது உருவாக்கப்பட்டது.
10. ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales): விக்கிபீடியா தளத்தினை உருவாக்கியவர். இந்த கட்டற்ற இணைய வெளி கலைக் களஞ்சியத்தை, 2001 ஆம் ஆண்டு ஜனவரி 15ல், இவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இப்போதும் இது தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
11. ஷான் பேனிங் (Shawn Fanning): பைல்களைப் பகிர்ந்து கொள்ளும் நேப்ஸ்டர் என்னும் கட்டமைப்பினை வரையறை செய்து 1998ல் வழங்கியவர்.
12. பிராம் ஹோஹன் (Bram Cohen): P2P பிட் டாரண்ட் பைல் ஷேரிங் அமைப்பினை உருவாக்கித் தந்தவர். 
13. ஜெப் பெஸோஸ் (Jeff Bezos): அமேஸான் டாட் காம் என்னும் உலகின் பிரபலமான இணைய வர்த்தக தளத்தினை உருவாக்கியவர். இணைய வழி வர்த்தகத்தின் மாடல் இயக்கமாக இன்றும் பின்பற்றப்படும் வர்த்தக இணைய தளம்.
14. மார்க் ஸுக்கர் பெர்க் (Mark Zuckerberg): Mark Elliot Zuckerberg என்ற பெயர் கொண்ட இவர், பேஸ்புக் இணைய தளத்தை வடிவமைத்த ஐந்து பொறியாளர்களில் தலைமையானவர். பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி. நூறு கோடிக்கும் மேல் வாடிக்கையாளர்களைக் கொண்டு, உலகின் முதல் இடத்தில் இயங்கும் சமூக இணைய வலைத் தளம் பேஸ்புக் என்பது சொல்லத் தேவையற்ற தகவல்.
15. லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page & Sergey Brin): உலகின் மிகப் பெரிய தேடுதல் தளமான கூகுள் டாட் காம் உருவாக்கிய கம்ப்யூட்டர் மற்றும் இணைய வல்லுநர்கள். பின்னர், கூகுள் நிறுவனம் பல பிரிவுகளைத் தொடங்கி இணையத்தைத் தன் வசப்படுத்தி வருகிறது. தற்போது மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் தந்து வருகிறது. எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி, உலகின் மிகப் பெரிய இணைய நிறுவனமாக கூகுள் இயங்கி வருகிறது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...