உலக உயிர்களையெல்லாம் காத்தருளுகின்றவர் விஷ்ணு பகவான். ஏனெனில் காத்தல் தொழிலைச் செய்வது அவரே. விஷ்ணுவானவர் இந்த தொழிலை புரியும் நிலையில், ஒரு கையில் சுதர்சனம் எனும் சக்கரத்தையும் மற்றொரு கையில் பான்ய சன்னியம் எனும் சங்கையும், இன்னொரு கையில் கெளமோதகம் எனும் கதையையும் தாங்கிய வடிவில் விளங்குகிறார்.
இவ் ஆயுதங்கள் அனைத்திலும் மேன்மை மிக்கது சுதர்சனச் சக்கரமாகும். விஷ்ணு பகவானிற்கு எத்தகைய சக்தி இருக்கின்றதோ அத்தகைய சக்தி இச் சக்கரத்திற்கும் உள்ளது. ஆயுதங்களின் அரசன் என போற்றப்படுவதும் இதுவாகும். இதனால் இதனை சக்கரத்தாழ்வார் எனவும் அழைப்பர். எனவே இந்த சிறப்பு மிக்க சக்கரத்தாழ்வாரின் பெருமைகளை இங்கே காண்போம்.
இன்னல் நீக்கி இன்பம் அளிக்கவல்லது சுதர்சன சக்கரமாகும். கஜேந்திரனின் அவலக் குரல் கேட்டு அவ்விடம் வந்த விஷ்ணு பகவானின் கையிலிருந்து விரைந்து சென்ற சுதர்சனப் பெருமான் கஜேந்தரனை பிடித்திருந்த முதலையை பிளந்து அவனை காத்தருளி மீண்டும்
பகவானின் கரத்தில் வந்து சேர்ந்தது. அதுமட்டுமா விஷ்ணு பகவான் கிருஷ்ணராக அவதாரம் செய்த போது அவ் கிருஷ்ண பகவானை அவரது மகிமையை அறியாத சிசுபாலன் பழித்துரைக்கின்றான்.
கிருஷ்ணரும் சிசு பாலனின் தாய்க்கு நூறு தடவைகள் சிசுபாலனின் பழிச் சொற்களை பொறுப்பேன் என வாக்களித்தார். அதனைப் பொருட்படுத்தாத சிசு பாலன் நூறு தடவைகள் கடந்து நூற்றி ஓராவது பழிச் சொல்லை கூறும்போது பகவானின் கையில் இருந்த சக்கரம் கண் இமைக்கும் பொழுதில் விரைந்து சென்று சிசுபாலனின் சிரசைக் கொய்து திரும்பியது.
இதனைத்தவிர அர்ஜுனன் மகன் அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமாகவிருந்த ஜயத்ரதனை கொல்வதாக சபதம் முடித்த அர்ச்சுனனுக்காக மாதவன் கையிலிருந்த சக்கரத்தினால் சூரியனை மறைத்து பின் அதனை விலக்கவும் அதனால் ஜயத்ரதனை அர்சுனன் கொன்றான்.
இவ்வாறான மகிமைகளை கொண்ட இவ் சக்கரத்தாழ்வாரை நாம் பக்தியுடன் வழிபட்டு வந்தால் பின்வரும் நன்மைகள் உண்டாகும். மனதில் உள்ள பயம் விலகும், தீராத நோய்கள் நீங்கும், எதிரிகள் யாரும் இருக்கமாட்டார்கள். அவ்வாறு இருந்தால் அவர்கள் அழிந்து போவார்கள். செல்வ வளம் பெருகும். புத்தியில் தெளிவு உண்டாகும். முட்டாள்தனம் நீங்கும், இவற்றை தவிர சுதர்சன மகா மந்திரத்தை தினமும் கூறி சுதர்சனப் பெருமாளை வழிபட்டு வரவேண்டும்.
எனவே ஒளி வீசக்கூடிய வலிமை பொருந்திய, வாசனை மிகுந்த துளசி மாலையை சூடிய பரந்தாமனின் திருக்கரத்திலே இருக்கின்ற சுதர்சனமாகிய சக்கரத்தாழ்வாரை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோமாக.
சுதர்சன காயத்திரி மந்திரம்
ஓம் சுதர்சனாய வித்மஹே
ஜ்வாலா சகராய தீமஹினா
ஓம் சுதர்சனாய வித்மஹே
ஜ்வாலா சகராய தீமஹினா
No comments:
Post a Comment