Apr 29, 2013

கொலை வெறியுடன் துரத்தும் கொலஸ்ட்ரோல் - ஒரு பார்வை!


News Service
இப்போதெல்லாம் 'காலில் ஆணி குத்திடுச்சு' என மருத்துவரிடம் போனால்கூட, 'ஷுகரும் கொலஸ்ட்ராலும் செக் பண்ணிருங்க' என்பதுதான் மருத்துவரின் முதல் அறிவுரை. சர்க்கரை வியாதி இருக்கிறது என்று தெரிந்ததும் அதற்கான மருந்துகளுடன் கொசுறாக, ஒரு கொலஸ்ட்ரால் மருந்தும் கொடுப்பது மருத்துவ ஐதீகமாகிவருகிறது. ஏன் இந்த கொலஸ்ட்ரால் பயம்? 'பின்னே, மாரடைப்பைத் தடுக்க கொலஸ்ட்ராலைக் குறைக்க வேணாமா? அதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வலி இல்லா மாரடைப்பு வந்துவிடுமே, அதைத் தடுக்கத்தான் கொலஸ்ட்ரால் குறைப்பு மருந்துகள்!' என்று வாதாடும் மருத்துவர்கள் இன்று ஏராளம்.
  
கொலஸ்ட்ரால் பெரும்பாலும் உடலின் ஈரலால் உருவாக்கப்படும், உடலுக்குத் தேவையான ஒரு வஸ்து. அதை வஸ்தாது ரேஞ்சில் பார்க்க ஆரம்பித்தது சமீபத்தில்தான்
. காரணம், மாரடைப்பு நிகழும் 50 சதவிகித மக்களில் அதிக ரத்தக் கொழுப்பு இருந்ததைக் கண்டறிந்த மருத்துவ விஞ்ஞானம், 'கொலஸ்ட்ரால்தான் காரணம்' என கட்டப்பஞ்சாயத்து பண்ணிவிட்டது. ஆனால், மீதி 50 சதவிகிதத்தினருக்கு கொஞ்சூண்டு கொலஸ்ட்ரால் இருந்ததைக் கவனிக்க மறந்தனரா அல்லது மறுத்தனரா என்பதுதான் இப்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கும் முன்னர், இந்த கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்தில் 30 பில்லியன் டாலர் வணிகம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
உடலில் கொலஸ்ட்ராலின் கால் பங்கு மூளையில் இருக்கிறது. நரம்பு உறையான myelin-லும் இன்னும் ஒவ்வொரு செல் உறையிலும் கொலஸ்ட்ரால் மிகவும் அவசியமான பொருள். அன்றாடம் இயல்பாக ரத்தக் குழாய் உட்சுவர்களில் நடக்கும் சிறுசிறு வெடிப்பைப் பட்டி பார்த்து பதமாகவைத்திருக்கும் முக்கிய வேலையை கொலஸ்ட்ரால் செய்கிறது. 'இவ்வளவு முக்கியமான ஒரு பொருளை மருந்து கொடுத்து மட்டுப்படுத்துவது எவ்வளவு முட்டாள்தனம்?' என்கிறார் அமெரிக்காவின் பிரபல இதய மருத்துவர் டாக்டர் செண்டிரா. சமீபத்தில் சி.என்.என். வெளியிட்ட மருத்துவ ஆய்வு நூலின் ஆசிரியரான அவர் சொல்லும் உண்மைகள் கொஞ்சம் அதிரவைக்கின்றன.
உலகில் தேவையில்லாமல் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் கொலஸ்ட்ரால் குறைக்கும் ஸ்டாட்டின்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றன. இதனை உட்கொள்வதால் இளமையிலேயே கால் வலி, நரம்பு பலவீனம் போன்றவை ஏற்படுகிறது. சிலருக்குப் பயனளிப்பதுகூட, அது கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் அல்ல. அதன் anti-inflammatory செய்கையால்தான் என்கிறார் அவர். ஒரு புண்ணை ஆற்ற, நோயில் இருந்து நம்மைக் காக்க நடக்க வேண்டிய inflammation,, காரணம் இல்லாமல் நடக்கும்போதுதான் மாரடைப்பு முதல் கேன்சர் வரை வருகிறது என்பதுதான் தற்போதைய மருத்துவ விளக்கம். நாம் தவிர்க்க வேண்டியது எண்ணெயை அல்ல... டென்ஷனையும் சோம்பேறித்தனத்தையும் மட்டும்தான்.
மன இறுக்கமும் பரபரப்பும் அடிக்கடி நிகழும்போது இந்தத் தேவையற்ற inflammation நிகழும். ஒரு சின்ன உதாரணம், தெருவில் தனியாக நடந்துவரும்போது ஒரு நாய் விரட்டுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உடல் அதிவேகமாக அட்ரீனலையும், கார்டிசால் சுரப்புகளையும் சுரக்கும். பிற பணிகளை எல்லாம் ஒரு சில நிமிடங்கள் உடல் தள்ளிவைக்கும். நீங்கள் நாயிடம் இருந்து தப்பும் வரையோ அல்லது மருத்துவரைப் பார்த்து வாங்கிய நாய்க் கடிக்கு மருந்து எடுக்கும் வரையோ, இந்த பரபரப்புச் சுரப்பு நல்லபடியாக நடக்கும். ஆனால், நவீன வாழ்வில் நம்மை எப்போதுமே ஏதாவது ஒரு நாய் துரத்திக்கொண்டே இருக்கிறது. வேலையில், வீட்டில், சாலையில், சமூகத்தில் என எங்கும் நடக்கும் இந்தத் துரத்தலும் அதற்கான நமது எதிர்வினையும்தான் பெரும்பாலான மாரடைப்புகளுக்குக் காரணம். ஆகவே, மொத்தக் குற்றத்தையும் கொலஸ்ட்ரால் தலையில் சுமத்துவது சரியல்ல.
இந்தியாவிலும் இப்போது பல மூத்த இதய மருத்துவர்கள் இந்தக் கருத்தைப் பேசத் துவங்கிஉள்ளனர். டாக்டர் செண்டிரா கூடுதலாகச் சொன்ன கருத்து, 'தேங்காய் எண்ணெய் இதயத்துக்கு நல்லது' என்பது. 'அதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் 'அக்யூஸ்ட் நம்பர் ஒன்'னாக இன்றும் பலரால் பார்க்கப்படுவது அர்த்தமற்றது' என்கிறார் அவர். இயற்கை தரும் கொழுப்பில் அதிகப் பிரச்னை எப்போதும் கிடையாது. மனிதன் உருவாக்கும் வனஸ்பதி, மார்ஜரைன் (பீட்சா, பர்கர், டோனட், பவ், ஹாட் டாக், சிப்ஸ் இன்னும் பல பேக்கரி ரொட்டி அயிட்டங்களில் சேர்க்கப்படுவது) முதலான எண்ணெயில்தான் trans fat எனும் மிகக் கெட்ட கொழுப்பு அதிகம். அதை தவிர்த்தே ஆக வேண்டும்.
"அப்படீன்னா... கொழுப்பு கவலை வேண்டாமா?" என அவசர முடிவு தேவையில்லை. அக்கறை வேண்டும். காலை நடை கட்டாயம். நேரம் இல்லை எனக் கெஞ்சுவோர், வீட்டில் எப்போதோ ஒரு உத்வேகத்தில் வாங்கிப்போட்டு சில வருடங்களாக ஜட்டி, பனியன் காயப்போடும் ஸ்தலமாக மாறிவிட்ட 'ட்ரெட் மில்' இயந்திரத்தைத் துடைத்து, எண்ணெய் போட்டு, தினமும் 25 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். தினசரி உணவில் நிச்சயமாக வெந்தயம், மஞ்சள், பூண்டு, சீரகத்துக்கு இடம் கொடுங்கள். மாரடைப்பு அபாயத்தை தினசரி மூச்சுப் பயிற்சியால் தடுக்க முடியும் எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, யோகா பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்தித்தான் பாருங்களேன்...
மிக முக்கியமாக மன இறுக்கத்தைக் களைய, வீட்டு வாசலில் செருப்பை விடும்போதே அலுவலகத்தையும் விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் காதுகளில் செல்போன் ஒலிக்க வேண்டாம். குழந்தையின் சிணுங்கலோ, அப்பாவின் முதுமைக் குரலோ ஒலிக்கட்டும். படுக்கையில் உங்கள் மடிக்குச் சொந்தக்காரர் மடிக்கணினி அல்ல. மனைவியோ, கணவரோ மட்டும்தான். ஏனென்றால், இச்சை தரும் காதலும் பச்சைத் தேநீரும் உங்கள் மனசைப் பாதுகாக்கும்; மாரடைப்பைத் தடுக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட பாரம்பரிய உண்மை!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...