பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
வட இலங்கையில் முதன் முறையாக ஒரு மன்னன் ஆட்சிக்கு
உட்பட்ட அரசு தோன்றிய காலமாக 13 ஆம் நூற்றாண்டு காணப்படுகிறது. இவ் அரசின்
தலைநகர் அமைந்த இடமாக நல்லூர் விளங்குகிறது. இந் நல்லூரைத் தலைநகரமாகக்
கொண்டு ஆரியச்சக்கரவர்த்திகளும், அவர்களைத் தொடர்ந்து சுதேச மன்னர்களும்
ஏறத்தாழ 350 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்கள். இவர்களுடைய ஆட்சிக் காலத்தில்
யாழ்ப்பாணம், தீவகம், தென்மராட்சி, வடமராட்சி, வலிகாமம், வெளிநாடு என்று
அழைக்கபடும் பூநகரி, பொன்னாலை, வன்னி போன்ற பிரதேசங்கள் நேரடிக்
கண்காணிப்பில் இருந்தன. இவற்றைத் தவிர திருகோணமலை மாவட்டம்,
கிழக்கிலங்கையில் சில வன்னிமைகள் ஆகியனவும் யாழ்ப்பாண அரசை ஏற்று நிர்வாகம்
நடத்தினார்கள். திருமண உறவுகள் மூலம் இவ் அரசுகளுடன் உடன்பாடு ஏற்படுத்தி,
அவர்களை யாழ்ப்பாண மன்னர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு
வந்தமைக்கும் ஆதாரங்கள் உள்ளன.
ஆகவே யாழ்ப்பாண மன்னர்களின் 350
ஆண்டு கால ஆட்சியில் ஒரு மையமாக நல்லூர் இராசதானியே காணப்படுகிறது. இங்கு
உள்ள புராதன எச்சங்கள் அனைத்தும் யாழ்ப்பாண இராச்சியத்துக்கு உரியது என்று
நாம் கூறமுடியாது. ஆனால் அவ் விடங்களில் புராதன எச்சங்கள் தோன்றியமைக்கு,
யாழ்ப்பாண மன்னர்களுடைய இராசதானி அங்கு இருந்தமை ஒரு முக்கிய காரணமாகும்.
போர்த்துக்கேய ஆசிரியராக குவைரோஸ், தனது இறுதி யுத்தம் நல்லூரில்
நடைபெற்றதாகக் குறிப்பிடுவதை உதாரணமாகக் கூறலாம். அந்த இறுதி
யுத்தத்தின்போது மிகப் பெரிய ஒரு கோயிலைத் தாங்கள் சங்கிலிய மன்னனிடம்
இருந்து கைப்பற்றி, அக்கோயிலையே தமது பாதுகாப்பு அரணாகவும், நிர்வாக
அரணாகவும் பயன்படுத்தியதாக தமது குறிப்புக்களில் அவர் சுட்டிக்
காட்டுகின்றார்.
ஆகவே அத்தகைய ஒரு பின்னணியில் பிற்காலத்தில்
ஒல்லாந்தர் கால, ஆங்கிலேயர் கால கட்டடங்கள் காணப்பட்டமைக்கு, ஏற்கனவே
இருந்த இராசதானி மையத்தை அவர்கள் கைப்பற்றி, அங்கிருந்து ஆட்சி செய்ததன்
விளைவுதான் எனக் கூறமுடியும். தற்போது நல்லூர்ப் பிரதேசத்தில் உள்ள
யாழ்ப்பாண அரசு காலச் சின்னக்களும் யாழ்ப்பாண அரசுகளைத் தொடர்ந்து ஆட்சி
செய்த போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய காலச் சான்றுகளும் காணப்படுவதற்கு
முக்கிய காரணம் நல்லூர் இராசதானி ஆகும். ஆயினும் தற்போது நல்லூர்ப்
பிரதேசத்தில் நான்கு வகையான வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுகின்றன. யமுனா
ஏரி, சங்கிலியன் தோரண வாயில், சங்கிலியன் தோப்பு, மந்திரிமனை என்பனவே
அவையாகும்.
யமுனா ஏரி இவற்றில்
யமுனா ஏரியானது, யாழ்ப்பாண அரசு கால தொன்மைச் சின்னமாகப் பலராலும்
கருதப்படுகிறது. யமுனா ஏரியின் வரலாற்று முக்கியத்துவம், யாழ்ப்பாண
வைபவமாலையில் சிறப்பித்துக் கூறப்படுவது இங்கு நோக்கத்தக்கது. அதில் கங்கை
நதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி, அவ்விடத்திலே யமுனா ஏரி
ஏற்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. யமுனா ஏரி பல்வேறு கால கட்டங்களில்
புனரமைக்கப்பட்டமைக்கு உட்படுத்தப்பட்டபோது, அங்கிருந்து புராதன கட்டட
எச்சங்களும், வழிபாட்டுக்குரிய தெய்வச் சிலைகளும் கிடைத்தமை மூலம் இவ் ஏரி
வரலாற்றுப் பழமை வாய்ந்த ஏரி என்பதற்கு மிக முக்கியமான சான்றாக அமைகிறது.
'ப ' வடிவில் அமைந்த இவ் ஏரியின் அமைப்பானது, பிற்காலத்தில் தோன்றிய ஏரிகள்
மற்றும் கேணிகள் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகக்
காணப்படுகிறது. மேலும் யாழ்ப்பாண அரசு தொடர்பான இலக்கியங்களிலே யமுனா
ஏரிக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் அது ஒரு பழைமையான ஏரி என்பதையே
எடுத்துக் காட்டுகிறது.
சங்கிலியன் தோரண வாயில்
நல்லூர்
பிரதேசத்தில் காணப்படுகின்ற மிக முக்கியமான கலை வடிவமாக சங்கிலியன் தோரண
வாயில் காணப்படுகிறது. சங்கிலியன் தோரண வாயிலானது, மன்னனுடைய அரண்மைக்குச்
செல்லுகின்ற வாசலின் உட்பகுதி என்பது பொது மக்கள் பலருடைய பொதுவான
அபிப்பிராயம் ஆகும். யாழ்ப்பாண அரசு தொடர்பாகத் தோன்றிய நூல்களான கைலாய
மாலை, யாழ்ப்பாண வைபவமாலை முதலான இலக்கியங்களிலே யாழ்ப்பாண அரசு கால
அரண்மனைகள், கோட்டைகள், வீதிகள் போன்றவற்றைப் பற்றிய விபரமான செய்திகள்
காணப்படுகின்றன. அந் நூல்களில் குறிப்பிடப்பட்ட பலவற்றை தற்போது பார்க்க
முடியாவிட்டாலும், இத்தோரண வாயில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கலை
வடிவமாகவும், வரலாற்றுச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. இத் தோரண
வாயிலின் அழகும், கலை மரபும், தோற்றமும் ஒல்லாந்தர் காலத்தை ஒத்தது என்பது
அறிஞர்களின் பொதுவான கருத்தாகும்.
ஆயினும் அவ் விடத்திலே அவர்கள்
ஒரு தோரண வாயிலை அல்லது ஒரு வாசல் பகுதியை அமைந்தமைக்கு, ஏற்கனவே
அங்கிருந்து ஆட்சி புரிந்த யாழ்ப்பாண மன்னர்களைப் போர்த்துக்கேயரும்,
ஒல்லாந்தரும் வெற்றி கொண்டமைதான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. ஆகவே
இந்தத் தோரண வாயிலின் கலை மரபிலே பிற்காலப் பிற நாட்டுக் கலை மரபுகள்
காணப்பட்டாலும், அதில் காணப்படுகின்ற கபோதம், கும்முட்டம் போன்ற கலை
வடிவங்கள் ஒரு திராவிடக் கலை மரபுக்கு உரியதாகக் காணப்படுகிறது. பொதுவாக
வரலாற்று ஆசிரியர்கள் இத்தோரண வாயிலின் கலை வடிவிலே அன்னியக் கலை மரபும்,
சுதேச கலை மரபும் கலந்து காணப்படுவதாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.
சங்கிலியன்
தோரண வாயில் பழைமையான ஒரு இருப்பிடத்தின், தொடர்ச்சியான பிற்கால வடிவமாகப்
பார்க்கப்பட்டாலும், இவ்விடத்திலே பழைமையான ஓர் இருப்பிடம்
இருந்திருக்கலாம் என்பதை தோரண வாயிலுக்கு சில யார் தொலைவில் கிழக்கு
நோக்கிச் செல்லுகின்ற போது காணப்படுகின்ற சின்னங்கள் மிக முக்கிய
சான்றுகளாகக் காணப்படுகின்றன. குறிப்பாக இலங்கைத் தொல்லியல் திணைக்களம்
அங்கு அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, அப்பிரதேசத்தின் நிலத்துக்குக்
கீழே மிகப் பெரிய அரண்மனை போன்ற கட்டடங்கள் இருந்ததற்கான எச்சங்கள்
கண்டுபிடிக்கப்பட்டன. அதனால்தான் என்னவோ, பாரம்பரியமாக சங்கிலியன் தோப்பு
அல்லது சங்கிலியன் இருப்பிடம் என்று கூறப்படும் இடத்தில் எதிர்பாராத
வகையில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், அங்கு ஒரு புராதன அரண்மனை அல்லது
இருப்பிடம் இருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றது. அதன் காரணமாகவே தோரண
வாயிலுக்குக் கிழக்கே காணப்படுகின்ற கட்டடங்களையும், அதன் கலை
வடிவங்களையும் பொது மக்கள் சங்கிலிய மன்னனின் அரண்மனைக் கட்டடத்தின் ஒரு
பகுதி எனக் கூறுகிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது உள்ள
கட்டட அத்திவாரத்தின் கீழ் தென்மேற்கு நோக்கியும், தென் கிழக்கு நோக்கியும்
பல அத்திவாரங்களும், பல சிதைவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மந்திரிமனை
நல்லூரில்
காணப்படுகின்ற, பலரையும் கவர்ந்த ஒரு நினைவுச் சின்னமாக மந்திரிமனை
காணப்படுகின்றது. இது யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அல்லது அங்கு
தற்போது காணப்படுகின்ற பழைமையான பல்வேறு கட்டடங்களில் இருந்து முற்றிலும்
வேறுபட்ட ஒரு கலை வடிவமாகும். இதன் அமைப்பு, தோற்றம், அழகு, தொழிநுட்பம்
ஆகியன யாழ்ப்பாணத்தில் உள்ள மிகத் தொன்மையான கலை மரபுக்கு சிறந்த எடுத்துக்
காட்டாக உள்ளது. இக் கட்டடப் பகுதியின் மேற் பக்கத்தில் தெற்கு, வடக்கு,
கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி மூன்று கல்வெட்டுச் சாசனங்கள் காணப்படுகின்றன.
இவை பிற்காலத்துக்குரிய சாசனங்களாகவே காணப்பட்டாலும், அரச இலட்சனையோடு
உள்ள பிற்காலத்துக்குரிய கட்டடம் என கூற முடியாது. ஏனெனில், யாழ்ப்பாண அரசு
தொடர்பான பல இலக்கியங்களில் இவ் அரண்மனை பற்றிய குறிப்புகள் பல
காணப்படுகின்றன. ஒல்லாந்தர் அல்லது போர்த்துக்கேயருக்கு உதவியாக
இருந்தவர்களுக்காக, அவர்கள் கட்டிக் கொடுத்த கலை வடிவமாகவும் இதை சில
அறிஞர்கள் நோக்குகிறார்கள்.
ஆனாலும் யாழ்ப்பாணத்தில் உள்ள மிகச்
சிறந்த, பாதுகாக்கப்பட வேண்டிய, முக்கியமான கலை வடிவமாக இம் மந்திரிமனை
காணப்படுகிறது. இதன் அமைப்பு ஒல்லாந்தர் கால அல்லது பிற்பட்ட ஒல்லாந்தர்
காலத்துக்கு உரியதாக இருந்தாலும், அதன் மர வேலைப்பாடுகளும், தொழிநுட்பமும்
மிகப் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே யாழ்ப்பாணத்தில் ஒரு அரசு
13 ஆம் நூற்றாண்டுக்கும் 16 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் இருந்தது
என்பதற்கு இம் மந்திரிமனை மிகச் சிறந்த ஒரு சான்றாகும். பொதுவாக இம்
மந்திரிமனையை அவதானித்த மேற்குலக அறிஞர்களும், சுதேச அறிஞர்களும் "இதன் கலை
வடிவத்தில் அன்னியக் கலை மரமும், சுதேச கலை மரமும் கலந்து காணப்படுவதற்கு
முக்கிய காரணம் இம்மந்திரிமனையைக் கட்டியவர்கள் சுதேச மக்களாக இருக்க
வேண்டும்" எனக் குறிப்பிடுகின்றனர்.
ஆகவே நாம் இன்று பார்க்கின்ற
நல்லூரில் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் கட்டடங்கள் இல்லாவிட்டாலும்,
பொதுவாக நகரிலும், கடற்கரையிலும் தங்கள் இருப்பிடங்களையும், நிர்வாக
மையங்களையும், இராணுவ மையங்களையும் அமைத்துக் கொண்ட போர்த்துக்கேயர்,
ஒல்லாந்தர் அவற்றை அங்கு அமைக்காது நல்லூரில் அமைத்துக் கொண்டமைக்கு
ஏற்கனவே நல்லூரிலே ஒரு இராசதானி இருந்தமைதான் மிக முக்கிய காரணமாகும். ஆகவே
கலை மரபில் அன்னியக் கலை மரபு இருக்கின்ற காரணத்தால் இக் கலை வடிவங்களை
நாம் புறக்கணிக்க முடியாது. அதிலே சுதேச கலை மரபுகளும் கலந்து
காணப்படுகின்றன. ஆகவே இக்கலை வடிவமும் பாதுகாக்கப்பட வேண்டும்.
தொகுப்பு: உமா பிரகாஷ்
|
No comments:
Post a Comment