வடமேற்கு ஐரோப்பாவைத் தாக்கிய சென் ஜூட் புயல் காரணமாக குறைந்தது 14 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியில் மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஜேர்மனியிலுள்ள கெல்ஸென் கிர்சென் நகரில் காரொன்றின் மீது மரமொன்று சரிந்து விழுந்ததில் இருவர் பலியானதுடன் அக்காரிலிருந்த இரு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.
அதே நகரில் பிறிதொரு காரின் மீது மரம் சரிந்து விழுந்ததில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதேசமயம் அங்கு ஒருவர் நீரில் மூழ்கியும் 66 வயது பெண்மணியொருவர் இடிந்து வீழ்ந்த சுவரின் கீழ் சிக்கியும் மரணமடைந்துள்ளார்.
இந்தப் புயலால் பிரித்தானியாவில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
லண்டனின் வடக்கே வட்போர்ட் எனும் இடத்தில் காரொன் றின் மீது மரமொன்று சரிந்து விழுந்ததில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கென்ட் நகரில் வீடொன்றின் மீது மரம் சரிந்து விழுந்ததில் அங்கு உறங்கிக்கொண்டிருந்த 17 வயது யுவதி கொல்லப்பட்டுள்ளார்.
அதேசமயம் மேற்கு லண்டனில் புயல் காற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட வீதியொன்றில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் ஆணொருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த எரிவாயு வெடிப்பில் அந்தப் பிராந்தியத்திலுள்ள பல வீடுகள் சேதத்துக்குள்ளாகியுள்ளன.
மணிக்கு 191 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய இந்த புயலால் மரமொன்று சரிந்து எரிவாயு குழாய் மீது விழுந்தமையே இந்த வெடிப்புக்கு காரணமென நம்பப்படுகிறது.
ஏற்கனவே புயலால் லண்டனில் அமைச்சரவை அலுவலகம் அமைந்திருந்த கட்டடத்தின் மீது பாரம் தூக்கி உபகரணமொன்று உடைந்து விழுந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் புயலால் டென்மார்க்கிலும் உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
மேற்கு பிரான்ஸிலுள்ள பிரிட்டனியில் பெண்ணொருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்தப் புயலையடுத்து லண்டன் மற்றும் வடமேற்கு ஜேர்மனிக்கான பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டன. நெதர்லாந்தின் சிபோல் விமான நிலையத்தில் குறைந்தது 50 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஜேர்மனிய விமான சேவைகளும் தாமதத்தை எதிர்கொண்டன.
ஜேர்மனியில் மீனவர் ஒருவரும் மாலுமி ஒருவரும் கடலில் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்.
Close
No comments:
Post a Comment