இதுகுறித்து, சர்வதேச கடல் சார்ந்த அதிகாரிகள் குழு நேற்று கூறியதாவது:சிங்கப்பூரை சேர்ந்த, “மவுண்ட் அபுதாபி ஸ்டார்’ என்ற கப்பல், எண்ணெய் டாங்கர்களை ஏற்றிக்கொண்டு, நைஜீரியா அருகே, கினியா வளைகுடா வழியாக சென்று கொண்டிருந்தது.அப்போது, கடற் கொள்ளையர்கள், அக்கப்பல் மீது அதிரடி தாக்குதல் மேற்கொண்டனர்.
பின்னர், வேறு பகுதிக்கு, அந்த கப்பலை கடத்திச் சென்றனர். அக் கப்பலில், 23 மாலுமிகள் இருந்தனர்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.கடத்தப்பட்ட கப்பல், துபாயை சேர்ந்த பயனீர் கப்பல் நிர்வாக சேவை நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 23 மாலுமிகள் பணியாற்றி வந்தனர். இவர்களில் ஒரு மாலுமி, தனது மேலதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தகவல் கூறியதை அடுத்து, கப்பல் கடத்தப்பட்ட விஷயம் தெரியவந்தது.
இதுபற்றி, அக்கப்பலை இயக்கி வந்த நிறுவனத்தின், தகவல் தொடர்பாளர் ஆடம்சன், நிருபர்களிடம் கூறியதாவது:கப்பலை இயக்கிய, மாலுமிகள் குழுவில் இருந்த, ஒருவரிடம் இருந்து எங்களுக்கு திடீரென போன் வந்தது. கப்பலை, கடற்கொள்ளையர்கள் கடத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும், பாதுகாப்பான ஒரு அறைக்குள் சென்று, கதவை பூட்டி விட்டு பதுங்கி இருப்பதாக அவர் கூறினார்.
இச் சம்பவம் குறித்து, நைஜீரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட கப்பலை மீட்பதற்காக, கடற்படை கப்பல் ஒன்று சென்றுள்ளதாக அறிகிறோம்.இவ்வாறு ஆடம்சன் கூறினார்.நைஜீரியா அருகில் ,உள்ள கடல் பகுதிகளில், இந்த ஆண்டு மட்டும், 37 முறை கடற்கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். கப்பலில் கொண்டு செல்லப்படும் எண்ணெய்தான் இவர்களின் இலக்கு. எண்ணெய் முழுவதையும், திருடிய பின்னர், இக் கொள்ளையர்கள், கப்பலை விடுவித்து விடுவது வழக்கம்.
நைஜீரியா அருகே, கினியா வளைகுடா பகுதியில், கடந்த இரண்டு வாரங்களில், மூன்றாவது முறையாக, கடற்கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.கடந்த வாரம்,ரஷ்யாவை சேர்ந்த கப்பல் ஒன்று கடத்தப்பட்டது. அதில் இருந்த எண்ணெயை திருடிய பின்னர், கப்பலை கொள்ளையர்கள் விடுவித்தனர்.
அதே போன்று, கிரீஸ் நாட்டை சேர்ந்த கப்பல் தாக்கப்பட்டு, மூன்று ஆயிரம் டன் எண்ணெய் திருடப்பட்டது.இரண்டு மாதங்களுக்கு முன்பு, இதே பகுதியில், எண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள், எண்ணெய்க்காக கடத்தப்பட்டன.
No comments:
Post a Comment