தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மந்தையூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் - பத்மா தம்பதிக்கு பூஜா என்ற மூன்றரை வயது பெண் குழந்தையும், குணா என்ற இரண்டரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
ஆனந்தனுக்கு சொந்தமான நிலத்தில் 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு நேற்று முன்தினம் தோண்டப்பட்டது. தண்ணீர் வராததால் கிணற்றை மூடாமல் அப்படியே சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை ஆனந்தன் தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது மனைவி பத்மா, தனது மகன் குணாவுடன் தனது நிலத்திற்கு அருகில் உள்ள தொட்டியில் துணி துவைப்பதற்காக வந்தார்.
குணாவை கீழே இறக்கி விட்டு பத்மா துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த குணா எதிர்பாராதவிதமாக, மூடப்படாத 600 அடி கிணற்றில் தவறி விழுந்தான். 20 அடியில் பாறைகளுக்கு இடையே குணா சிக்கிக்கொண்டு கதறினான்.
மகனின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ந்து ஓடி வந்த பத்மா, மகனை தேடினார். குணாவின் அழுகுரல் கேட்டு கிணற்றை நோக்கி ஓடினார். அப்போது, மகன் குணா பாறையில் சிக்கிக் கொண்டு அழுவதை பார்த்து பத்மாவும் காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள் என்று கூக்குரல் எழுப்பினார்.
மனைவியின் கூக்குரலை கேட்டு கிணறு அருகே ஓடி வந்தார் ஆனந்தன். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
2 ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் சிறுவன் குணா விழுந்த கிணறு அருகில் 20 அடி ஆழத்திற்கு 2 குழிகள் தோண்டப்பட்டது. பின்னர் சிறுவன் விழுந்த இடத்தின் அருகில் மண் சுவற்றில் துளையிடப்பட்டது. 4 அடி அளவில் துளையிடப்பட்டதும் குழந்தை குணா இருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக குழந்தை குணா கயிறு மற்றும் கொக்கி உதவியுடன், மீட்கப்பட்டான். இந்த மீட்பு காலை 10.30 மணி முதல் மாலை 3.15 மணி வரை நடந்தது. தீயணைப்பு வீரர்களின் கடுமையான முயற்சியால் குழந்தை குணா, உயிருடன் மீட்கப்பட்டான். குழந்தை குணா உயிருடன் கிடைத்ததை கண்டு பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
உடனடியாக தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் குழந்தை குணாவுக்கு அரசு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ராஜ்குமார், குளுக்கோஸ் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்தார். இதன் பிறகு குழந்தை குணா ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.
இது பற்றி தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரன், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தை குணாவை நேரில் பார்த்தோடு, நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
தேன்கனிக்கோட்டை அருகே ஆழ்துளை குழிக்குள் விழுந்த குழந்தை நான்கரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை! குழந்தையை பல வழிகளில் நம்மை விட்டு விலகி விளையாடவே துடிக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் குழந்தையுடனேயே பெற்றோர்கள் இருக்க வேண்டும். எந்த வேலை இருந்தாலும் விட்டுவிட்டு குழந்தை மேல் கவனத்தை செலுத்த வேண்டும்.
சென்னை உள்பட தமிழகத்தில் வீட்டில் உள்ள டி.வி. பெட்டி விழுந்து குழந்தை பலி, மாடியில் விளையாடி கொண்டிருந்த குழந்தை பலி, வீட்டின் பால்கனியில் இருந்து குழந்தை தவறி விழுந்து பலி, தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி அப்படி குழந்தைகள் இறங்கும் சம்பவத்தை பார்த்தால் பெற்றோர்கள் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும்போதோ, வெளியில் செல்லும் போதும், வேலைக்கு போகும்போதும் குழந்தையை அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்பதே நம்முடைய அன்பான வேண்டுகோள்.
No comments:
Post a Comment