‘‘நான் உண்டு, என் கால் சென்டர் வேலை உண்டுன்னு இருந்தேன். ‘உன் குரல் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு. நீ ஏன் டப்பிங் பேசக்கூடாது’ன்னு நிறைய பேர்
தூண்டி விட்டதுல, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கார்டு எடுத்தேன். ஒரு படத்துல செகண்ட் ஹீரோயினுக்கு பேசப் போனேன். செலக்ட் ஆகலை. அடுத்து இன்னொரு படத்துல இங்கிலீஷ் பேசற பொண்ணு கேரக்டருக்கு... அதுலயும் செலக்ட் ஆகலை. இப்படியே பல நிராகரிப்புகள்...
குரல் நல்லா இருந்தும், நல்ல மொழிப்புலமை இருந்தும், என்னை செலக்ட் பண்ணாததுக்குக் காரணம் என்ன தெரியுமா? என்னோட தோற்றம்! நான் கருப்பா, குண்டா இருக்கிறதுதான் வாய்ப்புகளுக்குத் தடையாம்! எனக்கு இத்தனை மொழிகள் தெரியுங்கிறதோ, என் குரலோட தனித்தன்மையோ யார் கண்களுக்கும் தெரியலை. அவங்களைப் பொறுத்த வரை அழகா, ஸ்லிம்மா இருக்கிற ஒரு ஹீரோயினுக்கு டப்பிங் பேசணும்னா, டப்பிங் பேசறவங்களும், அதே மாதிரி அழகா, ஒல்லியா இருக்கணும்னு நினைக்கிறாங்க. அழகுங்கிற மாயை இந்தத் துறையில மட்டுமில்லீங்க... எல்லா இடங்கள்லயும் பிரதானத் திறமையா பார்க்கப்படுது. ‘அழகான பெண்கள் மட்டும்தான் ஜெயிக்கப் பிறந்தவங்களா’ன்னு எனக்குள்ள தாழ்வு மனப்பான்மை தலைதூக்குற போதெல்லாம், ‘நீ சாதிக்கப் பிறந்தவள். கட்டாயம் ஒருநாள் ஜெயிப்பே’ன்னு என் மனசாட்சி தைரியம் கொடுக்கும்.
‘இவ்ளோ நல்லா இங்கிலீஷ் பேசறீங்களே... பேசாம நீங்க டிரான்ஸ்லேஷனுக்கு முயற்சி பண்ணுங்களேன்’னு என்னைத் தேடி வந்த அட்வைஸ் எதையும் ஆரம்பத்துல நான்
சீரியஸா எடுத்துக்கலை.
இதுக்கிடையில காதல்... கல்யாணம்... குழந்தை உண்டானதும் வேலையை விட்டுட்டேன். 5 மாச கர்ப்பமா இருக்கிறப்ப, ஒரு பெரிய தீ விபத்து. உடம்பு முழுக்க வெந்து, உயிருக்குப் போராடற நிலைமைல ஆஸ்பத்திரில கிடந்தேன். வயித்துல குழந்தை வளர்ந்துட்டதால, அபார்ஷனும் பண்ண முடியாத நிலைமை. அதே வேளை குழந்தை நல்லபடியா பிறக்கணுமேங்கிற கவலை இன்னொரு பக்கம். கர்ப்ப காலம் முழுக்க பயத்துலயும் சோகத்துலயுமே கழிஞ்சது. ஆனா, கடவுள் என்னைக் கைவிடலை. நான் எதிர்பார்த்ததைவிட அழகா, ஆரோக்கியமான குழந்தையா பிறந்தான் நிரஞ்சன்.
குழந்தை பிறந்து,
ஃபயர் ஆக்சிடென்ட் அதிர்ச்சிலேருந்து ஓரளவு நான் வெளிய வந்ததும், மறுபடி மனசு டப்பிங் துறையைப் பத்தி யோசிச்சது. இந்த முறை ஒரு வெறியோட வாய்ப்புத் தேடி அலைய ஆரம்பிச்சேன்.
‘சுட்டி’ டி.வில ‘பம்பர் கிங்’னு ஒரு கார்ட்டூன் தொடரை டப்பிங் பண்ற வாய்ப்பு வந்தது. டப்பிங் ஸ்டூடியோல உபயோகிக்கிற நியாண்டோ சாஃப்ட்வேர் போட்டேன். பொதுவா டப்பிங் பண்றப்ப, எந்த மொழில இருக்கோ, அதை நமக்குத் தேவையான இன்னொரு மொழியில மாத்தி எழுதணும். அதுக்கு ஒரு எழுத்தாளரைத் தேடணும். அப்புறம் டப்பிங் பேசறவங்களைக் கூப்பிட்டு, பேச வைக்கணும். எனக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு பல மொழிகள் தெரியுங்கிறதால, நானே ஸ்கிரிப்டை மாத்தி எழுதுவேன். அப்புறம் என் குரல்லயே எல்லா கேரக்டர்களுக்கும் பேசுவேன். பேசப் பேச அது அப்படியே கம்ப்யூட்டர்ல பதிவாயிடும். அப்புறம் அதை டப்பிங் ஆர்ட்டிஸ்ட்கிட்ட கொடுத்துப் பேச வைப்பேன்...’’- மூச்சு விடாமல் பேசுகிற ஜான்சி, கொரியன், சைனீஸ், தாய் என வெளிநாட்டுப் படங்களையும் டப்பிங் செய்திருக்கிறார்.
‘‘அந்த மொழிகள் எனக்குத் தெரியாது. காட்சிகளை வச்சுக் கதையைப் புரிஞ்சுக்குவேன். அதுக்கேத்தபடி வசனம் எழுதி, டப்பிங் பேச வச்சு, ரீ ரெக்கார்டிங், எடிட்டிங், மியூசிக் எல்லாம் முடிச்சுக் கொடுப்பேன்’’ என்பவர் இப்போது டிஸ்னி கார்ட்டூனுக்கான சில நிகழ்ச்சிகளை டப்பிங் செய்து கொண்டிருக்கிறார். தவிர ‘நிரஞ்சன் ஆடியோஸ்’ என்கிற பெயரில் சொந்தமாக டப்பிங் ஸ்டூடியோவும் நடத்துகிறார். இன்ஜினீயரிங், டப்பிங் கோ-ஆர்டினேஷன் என டப்பிங் தொடர்பான அத்தனை நுணுக்கங்களும் தெரிந்தவர்.
வாய்ப்புகளை மறுத்தவர்களே மறுபடி அழைத்து வாய்ப்புக் கொடுக்கும் அளவுக்கு ஜான்சியின் வளர்ச்சி இன்று உச்சம் தொட்டு விட்டது. ஆனாலும், ‘டப்பிங் பேசுவதில்லை’ என்பதே ஜான்சியின் இப்போதைய கொள்கை.
‘‘எனக்கு 29 வயசுதான் ஆகுது. அதுக்குள்ள 50 வயசுக்கான பக்குவம் எனக்கு வந்திருச்சு. வாப்புக்காக ஏங்கினப்ப கிடைக்கலை. இப்ப வாய்ப்புகள் தேடி வரும்போது அதை ஏத்துக்கிற மனநிலை எனக்கில்லை. டப்பிங்ல அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிக்குப் போயிட்டேன். வாய்ப்பு கொடுக்கிறவங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்... ‘உங்க பின்னணி என்ன? அனுபவம் என்ன’ன்னு கேட்காதீங்க. முதல் வாய்ப்பே மறுக்கப்பட்டா, அவங்களுக்கு அனுபவம் எங்கேயிருந்து வரும்?’’ - நியாயமாகக் கேட்கிற ஜான்சி, இத்துறையில் புதிதாகக் கால் பதிக்க விரும்புவோருக்கு சில ஆலோசனைகளையும் சொல்கிறார்.
‘‘வித்தியாசமான குரல் வளமும், அதை ஸ்டைலா பேசற திறமையும், ரெண்டு, மூணு மொழிப் புலமையும் இருக்கிறவங்களுக்கு கை நிறைய சம்பாதிக்க டப்பிங் துறை சரியான சாய்ஸ். அதே நேரம் முதல் நாளே வாய்ப்புகள் குவிஞ்சு, வருமானம் கொட்டாது. நிறைய அவமானங்களை சந்திக்க நேரலாம். அதுக்கெல்லாம் யோசிச்சா, அடுத்த படில ஏறவே முடியாது. ஜெயிக்கணுங்கிற வெறி இருந்தா, வெற்றி நிச்சயம். அதுக்கு நானே உதாரணம்!’’நம்பிக்கை மனுஷியின் வார்த்தைகளில் வலிகளைக் கடந்த வெற்றிக் களிப்பு!
No comments:
Post a Comment