Written By Admin on Monday, October 29, 2012
சூறாவளி அச்சுறுத்தல்; அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு...
மீளக்குடியமர்ந்த முல்லைத்தீவு மக்கள் பெரும் அவதி..
முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தீவிரமடைந்து இன்றிரவு 80 km / h வேகத்தில் மினி சூறாவளி தாக்கவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் திருகோணமலை, குச்சவெளியிலிருந்து யாழ்ப்பாணம் வரையான கரையோரப் பிரதேசங்களில் சுமார் 500 மீற்றர் கடல் எல்லைக்குள் குடியிருக்கும் பொதுமக்களை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
முல்லைத்தீவு கடற்கரையின் கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள சுறாவளி, நாளை அதிகாலை 2 மணியளவில் இலங்கைக்குள் உட்புக வாய்ப்புள்ளதால் கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்படி மக்களை அப்பகுதிகளிலிருந்து அகற்றும் நடவடிக்கைகள் சற்று நேரத்துக்கு முன்னர், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக இதுவரை சுமார் நான்காயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆனந்தபுரம், மந்துவில், மல்லிகைதீவு, வேணாவில் புதுக்குடியிருப்பு கிழக்கு, கைவேலி, தேறாவில் ஆகிய பிரதேசங்களில் வசித்து வந்தவர்களே அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இவர்களுக்காக நிரந்தர இருப்பிட வசதிகள் காணப்படாமையே அதிகளவு பாதிப்பு ஏற்பட காரணம் என அவர் சுட்டிக்காட்னார்.
பாதிக்கப்பட்ட மக்களை பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் தங்கவைத்து தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment