Oct 29, 2012

சூறாவளி தாக்கலாமென்ற எச்சரிக்கையை அடுத்து வடக்கு கரையோர மக்கள் இரவிரவாக வெளியேற்றம்; கொட்டும் மழையில் பெரும் அவலம்


jaffna_floodரொஷான் நாகலிங்கம்

வடக்கு,கிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை இரவு சூறாவளி தாக்களாமென்ற அபாய அறிவிப்பையடுத்து வடபகுதி கரையோர மக்கள் இரவிரவாக அவசர அவசரமாக கொட்டும் மழையில் கையில் அகப்பட்ட பொருட்களுடன் இடம்பெயர்ந்தனர்.
வங்காளவிரிகுடாவில் இலங்கையின் வடக்கே நிலைகொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக மாறி வடக்கு,கிழக்கு கரையோரத்தால் கடக்கலாமென்று வானிலை அவதான நிலையம் நேற்றிரவு அவசர அவசரமாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
வடக்கே பருத்தித்துறை முதல் வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, திருகோணமலை கரையோரமாக சூறாவளி  தாக்கக்கூடுமென அரசு நேற்றிரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடாக இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தது.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் செவ்வாய் அதிகாலை 2 மணியளவில் வட பகுதியூடாக சூறாவளியாகக் கடந்து செல்லுமென்பதால் திருமலை முதல் யாழ்ப்பாணம் வடமராட்சி வரையான கரையோரத்தில் 500 மீற்றர் வரையிலான பகுதியிலுள்ள மக்கள் அங்கிருந்து நேற்று இரவு வெளியேற்றப்பட்டனர்.
திங்கட்கிழமை காலை முல்லைத்தீவுக்கு கிழக்காக 200 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருந்த தாழமுக்கம் வடமேற்காக நகர்கின்ற நிலையில், இது சூறாவளியாக வட பகுதியூடாக செவ்வாய் அதிகாலை 2 மணியளவில் கடக்கலாமென எதிர்வு கூறப்பட்டது.
இத்தாழமுக்கம் காரணமாக நேற்று வடக்கு,கிழக்கு கரையோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இத்தாழமுக்கம் சூறாவளியாக வட பகுதி கரையூடாக கடக்கலாமென எதிர்வு கூறப்பட்டது. இச்சூறாவளி அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்தாதென தெரிவிக்கப்பட்டது.
எனினும் மக்களின் பாதுகாப்புக் கருதி திருகோணமலை குச்சவெளி முதல் வடமராட்சி வரையான கரையோரப் பகுதிகளில் 500 மீற்றர் தூரம் வரையிலான மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அவசரமாகக் கோரியிருந்தது.
ஒலிபெருக்கியூடாக அறிவிக்கப்பட்டதுடன், மக்களை பாதுகாப்பு பகுதிக்கு நகர்த்தும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஈடுபட்டதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...