நகரி, நவ.7-
இந்தியாவில் புகழ் பெற்று திகழும் பீடாதிபதிகளுள் சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகளும் ஒருவர். உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். அவர் நேற்று ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ள வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
வெளியே வந்த அவரிடம் நிருபர்கள் சூழ்ந்து கொண்டு 2012-ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் கூறி
வருகிறார்களே? என்றனர்.
இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
2012-ம் ஆண்டு உலகம் அழிந்து வரும் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்துமத சாஸ்திரப்படி 2012-ல் உலகம் ஒருபோதும் அழியாது. இந்த உலகம் அழிய இன்னும் பல ஆயிரம் வருடங்கள் உள்ளன.
எனவே பொதுமக்கள் யாரும் பீதி அடைய தேவை இல்லை. சில மதத்தினர் உலகம் அழியும் என்று வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படி வதந்தி பரப்புபவர்களை யாரும் நம்ப மாட்டார்கள். நான் உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களில் தரிசனம் செய்து வருகிறேன். பெரும்பாலான கோவில்களில் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்க்கப்படுகிறது. இதனை கோவில் நிர்வாகிகளும், ஊழியர்களும் கைவிட வேண்டும்.
கடவுள் முன்பு அனைவரும் சமம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். காளகஸ்தி கோவிலை தெற்கு காசி என்றே கூறலாம். இங்கு ஒருதடவை வந்து வழிபட்டால் போதும் முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment