May 27, 2013

தோலை அழகாகவும், சுருக்கமின்றியும் வைத்திருக்க உதவும் நலுங்குமாவு பாசிப்பயறு!

News Service அழகிய தோலுக்கு ஆசைப்படாதவர்கள் யாருமே இருக்கமுடியாது. தோல் அழகாக வைத்திருப்பது மட்டுமின்றி தோலில் சுருக்கமில்லாமல், வறட்சியில்லாமல் வைத்திருப்பது மிகவும் கடினம். சுற்றுப்புற சூழலில் வெப்பமாற்றத்திற்கு ஏற்றவாறு நம் தோலும் மாறிக்கொண்டே இருக்கும். வெயில் காலத்தில் தோல் சுருங்கி தொங்குவதும், குளிர் காலத்தில் தோல் வறண்டு வெடிப்பதும் இயற்கையே. இதற்கேற்றாற் போல் நாமும் நமது தோலை பக்குவமாக பராமரிக்காவிட்டால் தோலில் பல தொல்லைகள் உண்டாகிவிடும்.
  
தோலை சுத்தமாக வைப்பது அவசியம். ஏனெனில் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான நுண்கிருமிகள் மற்றும் சீதோஷ்ண மாற்றம், வேதிப்பொருட்களின் தாக்கம் என தோலுக்கு நேரடியாக தொல்லை தரக்கூடிய வாய்ப்புகள் ஏராளம் உண்டு. ஆகவே நாம் ஒவ்வொரு முறை வெளியில் செல்லும் பொழுதும் அல்லது வெளியிலிருந்து வந்த பின்பும் தோலினை
சரியான படி சுத்தம் செய்ய வேண்டும். இல்லையயனில் நுண்கிருமிகளாலும், வேதிப்பொருட்களாலும் தோல் தாக்கப்படுவதை நம்மால் தவிர்க்க இயலாமல் போய்விடும். வெயில் காலத்தில் வியர்வை துவாரங்களில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வேனிற்கால கட்டிகளும், பருக்களும் உண்டாகி தோல் பாதிப்படைந்துவிடும். வெயில் காலத்தில் தோலில் கட்டிகள் தோன்றுவதாலும், குருக்கள் தோன்றுவதாலும் தோலின் இயற்கை நிறம் மற்றும் மென்மை பாதிப்படைந்து பலவித தோல் நோய்கள் உண்டாகிவிடுகின்றன.
நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட விலங்கு கொழுப்பு சேர்ந்த சவுக்காரக்கட்டி என்று சொல்லப்படும் சோப்புகளை பயன்படுத்துவதால் வியர்வை துவாரங்கள் அடைபடுகின்றன. தோல் விரைவில் வறட்சியடைகிறது. ஆகவே நமது முன்னோர்கள் தோலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய, உடல் உஷ்ணத்தை தணிக்கக்கூடிய நறுமணமுள்ள மூலிகைப் பொடிகளை பயன்படுத்தி வந்தனர். இவை தோல் வறட்சியை தவிர்ப்பதுடன், உடலுக்கு நறுமணத்தையும், மூச்சுக்கு புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தின. இதனால் தோல் நோய்கள் உண்டாகும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டது.
வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட வாசனை திரவியங்களை உடலில் பூச வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. ஏனெனில் மூலிகைகளின் நறுமணம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. பிறந்த குழந்தைகளுக்கு கூட நலம் செய்யும் மூலிகை குளியல் பொடி பாரம்பரியமாக பல இடங்களில் குறிப்பிட்ட இனத்தவரிடம் பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வரும் குளியல் பொடிகளில் சிறப்பு வாய்ந்தது மட்டுமின்றி, தனித்தன்மையுடையது தான் நலுங்குமா.
நலுங்குமாவில் சேரும் முதன்மையான பொருள் பாசிப்பயறு ஆகும். பேசியோலஸ் ரேடியேட்டஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த பாசிப்பயிறு என்று அழைக்கப்படும் பச்சை பயிறில் மெத்தியோனின், டிரிப்டோபேன், தைரோசின் மற்றும் லைசின், வேலின், லியுசின் போன்ற புரதங்களும் நிறைந்துள்ளன. இவை தோலுக்கு குளிர்ச்சி தருவதுடன் நுண்கிருமிகளையும் நீக்குகின்றன. குழந்தை நீராட்டு, பூப்புனித நீராட்டு, திருமண சடங்கு போன்றவற்றில் நீராடுவதற்கு நலுங்குமா பயன்படுத்துவது நமது வழக்கம்.
நலுங்குமாவை நாமே வீட்டில் தயார் செய்யலாம். பாசிப்பயிறு-1பங்கு, வெட்டிவேர்-2 பங்கு, சந்தனம்-2 பங்கு, கோரைக்கிழங்கு-கால் பங்கு, கார்போகரிசி-கால் பங்கு, விளாமிச்சம் வேர்-2பங்கு, கிச்சிலிக்கிழங்கு-2பங்கு ஆகியவற்றை சுத்தம் செய்து, அளவுப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பயறு, கார்போகரிசி இரண்டையும் இளவறுப்பாக வறுக்க வேண்டும். மற்றவற்றை நன்கு வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து சரக்குகளையும் தனித்தனியே ஒன்றன்பின் ஒன்றாக மைய இடித்து, சலித்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை உடலில் தேய்த்து குளித்து வர கோடைக்காலத்தில் தோன்றும் வியர்வை நாற்றம், தோல் நிறமாற்றம், அரிப்பு ஆகியன நீங்கும்.
நலுங்குமாவு தயார் செய்ய இயலாதவர்கள் வெறும் பாசிப்பயிறை மற்றும் இளவறுப்பாக வறுத்து, பொடித்து, சலித்து குளித்து வரலாம். எனது வீட்டில் முள்முருங்கை மரம் உள்ளது. இதன் இலையை தினந்தோறும் அடையாக செய்து சளித் தொல்லைக்கு சாப்பிட்டு வருகிறேன். இதனை தினந்தோறும் உட்கொள்ளலாமா?
முள்முருங்கை உஷ்ணம் வீரியம் உடையது. கபத்தொல்லையை நீக்குவதற்கு மட்டுமின்றி தடைப்பட்ட மாதவிலக்கை ஏற்படுத்தவும் முள்முருங்கை பயன்படுகிறது. இதனை அரிசியுடன் சேர்த்து அடையாக தட்டியோ அல்லது தோசையாக வார்த்தோ மூன்று முதல் ஐந்து நாட்கள் சாப்பிடலாம். நாட்பட்ட தீவிர சளியில் ஏழு நாட்கள் வரை உட்கொள்ளலாம். மாதவிலக்கான நாட்களில் முள்முருங்கையை தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் இரத்தப்போக்கு அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...