Aug 31, 2012

'சாத்தம் ஆலை’ அந்தமான் தீவில் ஓர் ஆசிய ஆச்சரியம்!




அந்தமான்-நிகோபர் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள சாத்தம் தீவில் அமைந்துள்ள 'சாத்தம் மர அறுவை ஆலை’... ஆசியாவிலேயே மிகவும் பெரியதும், பழமையானதுமாகும். தீவின் 40% பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, அந்தமான் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி
வருகிறது.
நாடுகளை பிடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள்... அந்தமான் தீவுகளில் காலடி வைத்ததும், அங்கே குடியேறுவதற்காக காடுகளை அழிக்கத் தொடங்கினார்கள். அப்போது அவர்களால் வெட்டுப்பட்ட மரங்கள் ஒவ்வொன்றையும் பார்த்து பிரமித்துப் போனவர்கள்... அவற்றை தங்கள் நாட்டுக் கொண்டு சென்று பலவிதமான கட்டடப் பணிகளுக்கு பயன்படுத்தினர். மரங்களை மொத்தமாக இங்கிலாந்து கொண்டு செல்வது சிரமமாக இருக்கவே... அவற்றை அறுத்து, பலகைகளாகக் கொண்டு செல்ல நினைத்தனர். அதற்காக 1888|ம் ஆண்டில் உருவாக்கியதுதான் 'சாத்தம் மர அறுவை ஆலை'! அப்போது... இங்கிலாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட பழைய இயந்திரங்களுடன் துவங்கப்பட்ட ஆலை... இன்றைக்கு அதிநவீன இயந்திரங்களுடன் சுமார் 750 தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது!
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்த மர அறுவை ஆலையில் மரங்கள் அறுக்கப்பட்டு... மேற்கத்திய நாடுகளுக்கு வணிக நோக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையின் மரச்சுவர்கள் யாவும் அந்தமான் படாக் எனும் உயர்ரக மரத்தினால் அமைக்கப்பட்டவையே!
சிறப்பு வாய்ந்த இந்த மர அறுவை ஆலையைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அதன் பொறுப்பாளர், துணைநிலை வனப்பாதுகாவலர் ராஜ்குமாரைச் சந்தித்தேன். நூற்றாண்டு பெருமைவாய்ந்த அந்த ஆலை பற்றி பேசியவர், ''ஒரு காலத்தில் ஆண்டுக்கு 20 ஆயிரம் கனமீட்டர் மர அறுவை செய்து வந்த இந்த ஆலை, தற்போது 5,000 கனமீட்டர்தான் அறுவை செய்கிறது. இப்போது இந்த ஆலையை மேலும் நவீனமாக்க, 'இந்திய பிளைவுட் தொழில் ஆய்வு மையம்’ எனும் நிறுவனத்திடம் இதை கையளிக்க இருக்கிறோம். இரண்டு ஆண்டுகளில் இதை நவீனப்படுத்திக் கொடுப்பார்கள். அதன் பிறகு, பழைய திறனுக்கு இந்த ஆலை இயங்கக் கூடும்.
'இப்படி மரங்களாக வெட்டிக் கொண்டிருக்கிறார்களே' என்று நினைக்க வேண்டாம். நாங்கள் தாறுமாறாக மரங்களை வெட்டுவதில்லை. ஆங்கிலேயர்கள் வணிக நோக்கில் படாக் மரங்களை வெட்டிவிட்டு, அவற்றின் இடங்களில் வேகமாக வளரும் மென்மரங்களை நட்டு வைத்தனர். அதனால், 'படாக்’ மரங்கள் குறைந்த அளவிலேயே தற்போது உள்ளன. ஆனால், நாங்கள் வனச்சூழல் சரியாக பரமாரிக்கப்பட வேண்டும் என்கிற கொள்கையுடன் மரங்களை வெட்டுகிறோம். வெட்டப்படும் மரங்களைப் போல, இரண்டு மடங்கு மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். சில இடங்களில் ஆறு மடங்கு கன்றுகளைக்கூட நடுகிறோம். வருங்காலத்தில் பயன்படக்கூடிய வகையில் உற்பத்தியும் வளர்ச்சியும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். குறிப்பாக, படாக் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கிலும் கன்றுகளை நடவு செய்கிறோம். மக்களின் தேவைகளுக்காக இஷ்டம்போல வெட்டிக் குவிப்பதில்லை. வெட்டப்பட்ட மரங்களை, மக்களின் தேவைகளுக்குப் பகிர்ந்தளிக்கிறோம்.
வனத்துறையின் மேற்பார்வையில்தான் மரங்கள் வெட்டப்படுகின்றன. அப்படி வெட்டப்படும் மரங்களை ஒன்று சேர்த்துக் கட்டி, நீர்ப்பரப்பில் இழுத்து வந்து, கரை சேர்த்து, கனரக வாகனங்களில் அடுக்கி ஆலைக்கு கொண்டு வருகிறோம். இங்கு அறுக்கப்படும் 23 வகை மரங்களில் 'அந்தமான் படாக்’ ரகத்தைதான் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். வீட்டுப் பயன்பாட்டுக்காக கதவு, ஜன்னல், மேசை, நாற்காலி, கட்டில் போன்றவற்றுக்கு இது, பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆலையில் ஒரு கன மீட்டர் 'படாக்’ சுமார் 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மெயின் லாண்டில் (இந்தியாவை அப்படித்தான் இங்கு குறிப்பிடுகின்றனர்) இங்கு விற்பதைப் போல மூன்று மடங்கு விலை அதிகம்'' என்று அழகாக விவரங்களை அடுக்கினார்.
நாம் ஆலைக்குள் நுழைந்தபோது... அறுக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, வகைவகையாக பிரிக்கப்பட்டு... என ஆங்கங்கே மலைக்குன்றுகள் போல குவிந்திருந்த மரங்களைப் பார்த்தபோது... 'என்ன இது, இப்படி மரங்களை வெட்டிக் குவிக்கிறார்களே...' என்பது உட்பட பலகேள்விகள் என்னுள் எழுந்தன. ஆனால், ராஜ்குமாரிடம் பேசியபிறகு அத்தனை¬யும் விடைபெற்றன!

அந்தமான் யானைகள்!
அந்தமானில் யானைகள் கிடையாது. மரங்களை காடுகளில் இருந்து கொண்டு வருவதற்காக, 1906-ம் ஆண்டு, இந்தியாவிலிருந்து யானைகள் கொண்டுவரப்பட்டன. தற்போது, உச்ச நீதிமன்றம் ஆணை காரணமாக மரங்களை வெட்டுவதில் சில சிக்கல்கள் ஏற்படவே.... 'இன்டர்வியூ’ எனும் தீவில் யானைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு, அவை பராமரிக்கப்படுகின்றன. தற்போது 110 யானைகள் வரை அந்தக் காட்டில் வசிக்கின்றன.
முடக்கிய ஜப்பான் குண்டு!
இரண்டாம் உலகப் போரின்போது, அதாவது, 1942-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி இந்த மர அறுவை ஆலையின் மீது ஜப்பானியர்கள் சரமாரி குண்டு மழை பொழிந்தனர். ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் கருகி இறந்ததோடு... கடல் கொந்தளித்து வெளிக்கிளம்பி, பாறைகளும் வெடித்துச் சிதறியிருக்கின்றன. இதனால் முற்றிலும் முடங்கிப்போன ஆலை, ஜப்பானியர்களிடம் இருந்து அந்தமான் மீட்கப்பட்ட 1946-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு... இன்று வரை தன் பணியைத் தொடர்கிறது.
அந்தமான் படாக்!
'டெரோகார்பஸ் டல்பர்ஜியோட்ஸ்' (pterocarpus dalbergiodes) எனும் தாவரவியல் பெயர் கொண்ட அந்தமான் படாக் மரத்துக்கு... அந்தமான் செம்மரம், கிழக்கிந்திய மகோகனி, செஞ்சிவப்பு மரம் என பல பெயர்கள் உண்டு. மென்மையான பிரௌன், பொன்னிறம், அடர் சிவப்பு பிரௌன், செறிவான சிவப்பு மற்றும் தீக்கொழுந்து சிவப்பு போன்ற நிறங்களில் இம்மரங்கள் உள்ளன. நாளடைவில் தண்ணீர்பட்டு பொலிவிழந்து போனாலும், லேசாக மெருகேற்றம் செய்தாலே பழைய பொலிவுக்கு வந்துவிடும் என்பதுதான் இம்மரத்தை மக்கள் பெரிதும் விரும்பக் காரணம்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...