பல்லேகெலே, செப். 27-
இலங்கையில்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில்
லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில், சூப்பர்-8 சுற்று ஆட்டங்கள் இன்று
தொடங்கின.
பல்லேகெலே மைதானத்தில் நடந்த முதல்
போட்டியில், இலங்கை அணி சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
இரவு 8 மணிக்கு தொடங்கிய 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து
அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி
முதலில் பேட் செய்தது. விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர்
கெயில் 35 பந்துகளில், 6 பவுண்டரி 4 சிக்சருடன் 58 ரன்கள் விளாசினார்.
இதேபோல்
நீண்ட நேரம் களத்தில் நின்று, இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும்
சிதறடித்த சார்லஸ், 56 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.இதில்
10 பவுண்டர், 3 சிக்சர் அடங்கும்.
ஆனால் பின்வரிசை
ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்
முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் என்ற
கவுரவமான ஸ்கோரை எட்டியது.
இதையடுத்து 180 ரன்கள்
எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல்
ஓவரிலேயே மரண அடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ். ரவி ராம்பால் வீசிய அந்த
ஓவரில் கீஸ்வெட்டர், ரைட் இருவரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி
வெளியேறினர். இதையடுத்து பேர்ஸ்டோ 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர்
ஹேல்சுடன் ஜோடி சேர்ந்த மோர்கன் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அவரது
மின்னல் வேக ஆட்டத்தால் இங்கிலாந்தின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது. கடைசி 5
ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 70 ரன்கள் தேவைப்பட்டன. அதன்பின்னர்
மோர்கனின் ஆட்டத்தில் அனல் பறந்தது.
எனினும் ஆரம்ப
கட்டத்தில் ஏற்பட்ட விக்கெட் வீழ்ச்சி காரணமாக, மோர்கனின் அதிரடி ஆட்டம்
இங்கிலாந்துக்கு கை கொடுக்காமல் போனது. ஹேல்ஸ் 68 ரன்கள் (51
பந்துகள்) எடுத்த நிலையில் ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.
20
ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள்
மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில்
வெற்றிபெற்றது. மோர்கன் 36 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள்
எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
No comments:
Post a Comment