Sep 2, 2012

ஒரு பெண்ணின் இருதயம்


உலகத்தின் முதல் இருதய மாற்று ஆபரேஷனை வெற்றிகரமாகச் செய்த தென் ஆப்பிரிக்க டாக்டர் கிரிஸ்டியான் பர்னார்ட் ஒன் லைஃப்என்ற தலைப்பில் தன் சுயசரிதத்தை எழுதியிருக்கிறார். அதில் ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட்என்ற பாகத்திலிருந்து ஒரு சில பகுதிகள் 
:
 
‘‘லாயி வாஷ்கான்ஸ்கியின் இதயம் மோசமடைந்திருந்தது. தகுந்த மாற்று இருதயம் கிடைத்தவுடன் அவருக்கு புதிய இதயத்தைப் பொருத்த காத்துக் கொண்டிருந்தோம்.


கார் விபத்தில் அகப்பட்டுக் கொண்ட டெனிஸ் டார்வல் என்ற 24 வயதுப் பெண்ணின் இருதயம் எங்களுக்குக் கிடைத்தது. இதோ டெனிஸின் தந்தை கூறுவதைக் கேளுங்கள்:

‘‘புதிய கார் வாங்கியிருந்தோம். நான், என் மனைவி, பெண் டெனிஸ், பையன் கீத் எல்லாரும் கடைத் தெருவுக்குச் சென்றோம். கேக் வாங்க என் மனைவியும் டெனிஸும் சென்றார்கள். நாங்களிருவரும் காரில் உட்கார்ந்து இருந்தோம்.

‘‘என்ன இன்னும் வரக் காணோமே?’’ என்று சொல்லிக் கொண்டே கீத் காரிலிருந்து இறங்கிப் பார்த்தான்.

‘‘தூரத்தில் வருகிறார்கள்’’ என்றான். அவன் சொன்ன சில செகண்ட்கள் கழித்து பலத்த ஓசை கேட்டது. டயர்கள் கிரீச்சிட்டன.

‘‘அப்பா... ஏதோ ஒரு கார் ஆக்சிடெண்ட் ஆகிவிட்டது... அப்பா, நம் டெனிஸும் அம்மாவும்தான் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்...’’

அடுத்த கணம் அங்கு சென்றோம். ரோடு நடுவில் ரத்த வெள்ளத்தில் என் மனைவி கிடந்தாள். என் பெண்ணும் மயங்கிக் கிடந்தாள். அவள் முகத்தில் பலத்த காயங்கள். வாய், காது வழியாக ரத்தம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் வந்துசேர்ந்தது.

ஆஸ்பத்திரிக்கு நான் போனபோது என் மனைவி இறந்து விட்டாள் என்று கூறினார்கள். அவள் ஆம்புலன்ஸில் செல்லும் போதே இறந்து விட்டிருந்தாள்.

என் கண்மணி டெனிஸ் வலியால் முனகிக் கொண்டிருந்தாள். எமர்ஜென்ஸி அறைக்குள் எடுத்துச் சென்றார்கள். அவள் மூக்கிற்குள் ட்யூப் செருகி இருந்தார்கள். அக்காட்சி என் வயிற்றைப் பிசைந்தது.

டாக்டர் பேஸ்மென் என்னைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று ஓய்வாக இருக்கச்சொன்னார்.

‘‘அப்பா... நீங்கள் வீட்டுக்குப் போங்க. நான் இங்கு வெய்ட் பண்றேன்’’ என்றான் என் மகன்.

‘‘வீடு! என்ன வீடு? அங்கு யார் இருக்கிறார்கள்? அங்கு எதற்காகப் போக வேண்டும்?’’

இரவு பத்து மணி வாக்கில் டாக்டர் பேஸ்மனும் டாக்டர் வென்டரும் வந்தார்கள். டெனிஸை நான் பார்க்க என்னை அழைத்துச் செல்ல வருகிறார்கள் என்று எண்ணினேன்.

‘‘டார்வென். உஙகளுடன் முக்கிய விஷயம் ஒன்றைப் பேச வேண்டும். சற்று நிதானமாகப் பேசலாம்’’ என்றனர்.

‘‘மிஸ்டர் டார்வென். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டோம். உங்கள் பெண் பிழைப்பது துர்லபம் என்று மூளை நிபுணர் கூறுகிறார்.’’

‘‘அது என் துரதிர்ஷ்டம்.’’

‘‘ஒரு சமாசசாரம். உங்கள் பையனைச் சற்று வெளியே போய் இருக்கச் சொல்கிறீர்களா?’’

அவன் போன பிறகு டாக்டர் கூறினார். ‘‘உங்கள் பெண்ணைக் காப்பாற்ற இயலாது. காரணம் அவளுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் மிகவும் பலமானவை. இந்த ஆஸ்பத்திரியில் ஒரு ஆசாமி இருக்கிறார். அவரது உயிரை நாங்கள் காப்பாற்ற முடியும் நீஙகள் அனுமதி கொடுத்தால்’’

‘‘என்ன அனுமதி?’’

‘‘டெனிஸின் இருதயத்தை எடுத்து அவருக்குப் பொருந்தலாம் என்று நினைக்கிறோம்...’’

எனக்கு கிட்டத்தட்ட நான்கு முழு நிமிடங்கள் பிடித்தன இதைப் பற்றி முடிவு எடுக்க. எனு் குழந்தை செத்துக் கொண்டிருக்கிறாள். அவள் ஹார்ட்டைப் பற்றி நான் முடிவு எடுக்க வேண்டும்.

டெனிஸ்! அவளைப் பற்றி எண்ணிப் பார்த்தேன். என்னுடைய பிறந்த நாளுக்கு ஒரு கேக் பரிசு கொடுத்தாள். அதில் ஹார்ட் படம்! அப்பா உங்களை நான் நேசிக்கிறேன்என்ற வாசகம். அவள் பாங்கில் வேலைக்குச் சேர்ந்த முதல் மாதச் சம்பளத்தில் எனக்கு ஒர பாத் கவுன் வாங்கித் தந்ததும் நினைவுக்கு வருகிறது. கொடுப்பது என்றால் அவளுக்கு குஷி என்று நினைத்தேன். ஏன், அவளிடமே டாக்டர் பேஸ்மென் கேட்டிருந்தால், ‘‘தாராளமாக என் இருதயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று துளிக்கூட யோசிக்காமல் சொல்லியிருப்பாள்.

டாக்டர் பேஸ்மனைப் பார்த்தேன். ‘‘ஒரு உயிர் இறந்து கொண்டிருக்கிறது. அதை நாம் காப்பாற்ற முடியவில்லையே’’ என்ற வருத்தம் அவர் முகத்தில் தெரிந்தது. ‘‘அவளால் அதிக நேரம் உயிர்வாழ முடியாது. குறைந்தபட்சம் வேறொருவராவது பிழைக்கட்டுமே.’’

நான் மட்டும் அனுமதி கொடுக்காது இருந்தால் எனக்கு மன அமைதியே கிடைத்திராது. அவளே என் மனச்சாட்சியாக மாறி, ‘‘ஏன் அப்பா, ஏன் அனுமதி தரவில்லை? ஒரு ஆள் பிழைக்க உதவி செய்ய ஏன் மறுத்தீர்கள்?’’ என்று கேட்டிருப்பாள்.

டாக்டர் ஒரு காகிதத்தை என் முன் நீட்டினார். சிறிதும் சலனமின்றி ஒப்புதல் அளித்துக் கையெழுத்து இட்டேன்.

டெனிஸின் ஹார்ட்டை வெற்றிகரமாக வாஷ்கான்ஸ்கிக்குப் பொருத்தினோம்.’’

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...