விஸ்வநாதன் ஆனந்த் - ஒரு செஸ் சகாப்தம்
இதில், டெக்னிக்கலாக அதிகம் எழுதப் போவதில்லை. அவரது செஸ் வாழ்க்கையின் அருமை பெருமைகள் பற்றி கொஞ்சம் பேசுவோம். 12 பிரதம ஆட்டங்களில், புள்ளிகள் சமனாக இருந்த நிலையில் நேற்று நடந்து முடிந்த 4 ஆட்டங்கள் கொண்ட துரித ஆட்டத் தொடரை ஆனந்த் 2.5-1.5 என்ற புள்ளி எண்ணிக்கையில் வென்றார். திருமணத்திற்குப் பின் பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் மகன் பிறந்ததால் அடைந்த மகிழ்ச்சிக்கு இணையான ஒன்றை இந்த ஐந்தாவது செஸ் உலகப் பட்டம் ஆனந்துக்கு அளித்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
2வது ஆட்டத்தில் வென்று, மற்ற 3 ஆட்டங்களையும் சுலபமாக டிரா செய்தார் ஆனந்த். இந்த நான்கு 20 நிமிட ஆட்டங்களிலும், கெல்ஃபாண்ட் நேரக்குறைவினால் ரொம்ப சிரமப்பட்டார். துரித ஆட்டத்தில் முடிசூடா மன்னராக விளங்கும் ஆனந்துக்கு அந்தப் பிரச்சினையே இல்லை. 2வது ஆட்டத்தில், நேரக் குறைவு தந்த அழுத்தத்தினால், சில சந்தேகத்துக்குரிய தேர்வுகள் செய்யும் கட்டாயத்துக்கு கெல்ஃபாண்ட் ஆளானார். ஆனாலும், ஒரு மகாபாரதப் போராட்டத்துக்குப் பின் தான், தனது பிஷப்பை ஒரு ஃபோர்க்கில் குதிரைக்கு ஈடாக இழந்த பின், வேறு வழியின்றி 77வது நகர்த்தலில் கெல்ஃபாண்ட் ரிசைன் செய்தார்.
http://www.dnaindia.com/sport/commentary_as-it-happened-wcc-2012-anand-takes-lead-in-tie-break-2_1695793
அது போலவே, நேரக் குறைவு தந்த அழுத்தத்தினாலேயே, 3வது ஆட்டத்தில் முன்னணியில்இருந்தும், கெல்ஃபாண்டால் அதை வெற்றியாக மாற்ற இயலவில்லை அல்லது நமது ஸ்பீட் கிங் அதை அனுமதிக்கவில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். 3வது மற்றும் 4வது ஆட்டங்களில் ஆனந்தின் (நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளாத) சுறுசுறுப்பான தற்காப்பு நகர்த்தல்கள் அபாரம் என்று கூறுவேன்.
Speaking about the tie break, the champion said, "I wouldn’t say there is some kind of justice in it. After we played 12-games, I dont think the tiebreak is a reasonable situation that would separate us after a very tough match. Things really went my way in the tiebreaker, I can say I won because I won", Anand said matter-of-factly. ஆனந்த் இப்படிக் கூறியிருப்பது அவரது தன்னடகத்தையும், யதார்த்த அணுகுமுறையையும் காட்டுகிறது.
செஸ் வரலாற்றில், மூன்று வகையான ஆட்ட முறைகளில் (நாக் அவுட், மேட்ச், டோர்னமண்ட்) உலக சேம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஒருவர் விஷி ஆனந்த் மட்டுமே. நாக் அவுட் முறையில், டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போல, ஒவ்வொரு சுற்றிலும், தோற்றவர் வெளியேற்றப்படுவார். கால் இறுதி, அரை இறுதி, இறுதிச் சுற்றுகள் நடந்து வெற்றி பெற்றவர் சேம்பியன் என அறிவிக்கப்படுவார். 2000-ஆம் ஆண்டு, அலெக்ஸி ஷிராவை நாக் அவுட் முறையில், இறுதிச்சுற்றில் வென்று முதன் முதலாக உலக சேம்பியன் ஆனார்.
6 ஆட்டங்கள் இருந்தும், ஆனந்துக்கு நான்கே ஆட்டங்கள் தான் தேவைப்பட்டன. 3.5-0.5
2007-இல் கிராம்னிக் உலக சேம்பியனாக இருந்தபோது மெக்ஸிகோவில் நடந்த (உலகின் அப்போதைய 8 சிறந்த ஆட்டக்காரர்கள் பங்கு பெற்ற, 14 சுற்றுகள் கொண்ட) டோர்னமண்ட் முறை உலக செஸ் சேம்பியன்ஷிப்பில், 9 புள்ளிகள் எடுத்து முதலாவதாக வந்ததன் மூலம் ஆனந்த் 2வது முறை உலக சேம்பியன் ஆனார். இதில், ஒரு தோல்வியைக் கூட ஆனந்த் சந்திக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
http://en.wikipedia.org/wiki/World_Chess_Championship_2007
அடுத்த ஆண்டில், மேட்ச் ஆட்ட முறையில், கிராம்னிக்கை 6.5-4.5 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து (3வது) பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.
2010-இல், டோபோலோவ் என்ற சிங்கத்தை அதன் குகையிலேயே (சோஃபியா, பல்கேரியா) வீழ்த்தி பட்டத்தை 4வது முறை வென்றது, ஆனந்தின் செஸ் வாழ்க்கையின் ஒரு மிகப்பெரிய சாதனை. கிராம்னிக் போல் அல்லாமல், டோபோலோவ், ரிஸ்க் எடுத்து அக்ரெஸ்ஸிவ்வாக விளையாடுபவர். புள்ளிகள் சமனாக (5.5-5.5) இருந்த நிலையில், 12வது இறுதி ஆட்டத்தில் கறுப்புக் காய்களுடன் ஆடிய ஆனந்த், டோபோலோவுக்கு கொடுத்த சைக்காலாஜிகல் அடி காரணமாக, இப்போது உலகத் தர வரிசையில் 12வது இடத்தில் டோபோலோவ் இருக்கிறார். இந்த 12வது ஆட்டமும், ஆனந்தின் வெற்றியின் நேர்த்தியும் மிகவும் பேசப்பட்டவை.
இந்தியாவின் முதல் உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம், மொத்தப் புள்ளிகள் என்ற 3 வகைகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ் டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு, இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே. ஆனந்த் செஸ் ஆஸ்கார் பட்டத்தை 6 முறை வென்றுள்ளார்.
இந்தியாவின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில், ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த் ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.
No comments:
Post a Comment