பால்தாக்கரே மூச்சுவிட திணறியதால்
அவருக்கு லீலாவதி மருத்துவமனை டாக்டர்கள் செயற்கை சுவாசம் அளித்து
வருகிறார்கள். அவர் உடல்நிலை மோசமானதை அறிந்ததும், பல்வேறு கட்சி
தலைவர்கள், நடிகர்கள் மும்பை பந்த்ராவில் உள்ள அவர் வீட்டுக்கு சென்று உடல்
நலம் விசாரித்தனர்.
இதன் காரணமாக மராட்டிய மாநிலம்
முழுவதும் பதட்டம் நிலவியது. மும்பையில் பல இடங்களில் கடைகள்
அடைக்கப்பட்டன. தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க சுமார் 2
ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை
பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து அதிரடிப்படை வீரர்களும் வந்துள்ளனர்.
தாக்கரே விரைவில் குணமடைய வேண்டும் என்று பல இடங்களில் தொண்டர்கள்
பிரார்த்தனை நடத்தினர். நேற்று அவரது உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம்
ஏற்பட்டிருப்பதாக அவரது மகன் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
இந்நிலையில்
இன்று அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின்
பிரார்த்தனை காரணமாக தாக்கரே தேறி வருவதாகவும், அவரது நாடித் துடிப்பு,
இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு திரும்பி வருவதாகவும்
சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
தாக்கரே
உடல் நலம் முன்னேற்றம் கண்டிருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மனோகர்
ஜோஷியும் கூறியுள்ளார். இருப்பினும் தாக்கரேயின் வீட்டுக்கு வெளியே ஏராளமான
தொண்டர்கள் கூடியிருக்கிறார்கள். பத்திரிகையாளர்களும்
திரண்டிருக்கிறார்கள். இதனால் அங்கு தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment