Nov 18, 2012

பிரணாப்-மன்மோகன் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியுடன்..


சிவசேனை கட்சித் தலைவர் பால் தாக்கரேவின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, பிகார் முதல்வர் நிதீஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சாமானிய மனிதனுக்கு உதவுவதற்காகப் பாடுபட்ட ஒரு மூத்த தலைவரை நாடு
இழந்துவிட்டது. ஊடகத்துறைக்கு அவர் ஆற்றிய சேவையானது, அரசியல் விவாதகளத்துக்கு புதிய பரிமாணத்தை அளித்தது ' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், தாக்கரேவின் மகன் உத்தவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்தார். அவர் தனது இரங்கல் செய்தியில், "
மகாராஷ்டிரத்தின் நலன்கள் தாக்கரேவுக்கு மிகவும் முக்கியமானவை. சிவசேனையை உருவாக்கிய அவர் அதை மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாற்றினார். தாக்கரே மறைவால் அவரது குடும்பத்தாரும், ஆதரவாளர்களும் பெரும் துயரமடைந்துள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கூறுகையில், ""நாடு சுதந்திரம் பெற்ற பின் இந்த 65 ஆண்டுகளில் நாட்டின் நிகழ்வுகளில் இப்படி ஒரு ஆழமான முத்திரையைப் பதித்த அரசியல் தலைவர் நான் பார்த்த வரை தாக்கரேதான். இதுமிகவும் அரிதானது. தனது தேசபக்தியில் எப்போதும் சமரசம் செய்து கொள்ளாதவர் அவர். தாக்கரேவின் மறைவு, அரசியலில் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. மக்களவைத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், டுவிட்டர் இணையத்தில் கருத்து தெரிவிக்கையில், ""சிங்கம் (தாக்கரே) இறந்துவிட்டது என்ற செய்தியைக் கேட்டு வேதனை அடைந்தேன்' என்று குறிப்பிட்டார். சுஷ்மா பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ""எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாதவர் தாக்கரே. மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசியவர் தாக்கரே'' என்று தெரிவித்தார்.
பா.ஜ.க. மாநிலங்களவைத் தலைவர் அருண் ஜேட்லி கூறுகையில், ""தனது தலைமுறையைச் சேர்ந்த மிகவும் கவர்ச்சிகரமான தலைவர்களில் ஒருவர் தாக்கரே.
தனது கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாதவர்'' என்றார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, டுவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவிக்கையில், ""தாக்கரே வாழ்நாள் முழுவதும் வீரதீரம் நிறைந்து காணப்பட்டார். அவரரு மறைவு கேட்டு வேதனையடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறுகையில், ""எனது நெருங்கிய நண்பரை இழந்துவிட்டேன். தனது நிலைப்பாட்டுக்காக எந்த அரசியல் விலையையும் கொடுக்கக் கூடியவர் தாக்கரே'' என்றார்.
பிகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறுகையில், "" தாக்கரே மறைவோடு, மகாராஷ்டிர அரசியலில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர அரசியல் வரலாற்றில் அவருக்கு சிறப்பான இடம் உண்டு'' என்று தெரிவித்துள்ளார். ""தாக்கரே தனது அரசியல் வாழ்வில் மகாராஷ்டிர அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார்'' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தாக்கரே மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ.க. தலைவர் கட்கரி, சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்களும், கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணின் குடும்பத்தாரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி: ""மகாராஷ்டிர மாநில மக்களின் முன்னேற்றமே பெரிதெனக் கொண்டு அதற்காகவே தன் வாழ்க்கையைச் செலவிட்டவர் பால் தாக்கரே. பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தேன். அப்போது நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கே என்னை வந்து சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார் தாக்கரே. இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு என்றபோதிலும், அவர் என்னைச் சந்திக்க வந்தபோது காட்டிய அன்பும் எளிமையும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. தன் மாநில மக்களின் நலன்களுக்காக எதையும் விட்டுக் கொடுக்க முன் வராதவர் தாக்கரே. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சிவசேனை இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.''

ரஜினிகாந்த்: ""பால் தாக்கரே தலைசிறந்த தலைவர். எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மறைவு அனைவருக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கும், உலகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.''

பொன்.ராதாகிருஷ்ணன்:""பால் தாக்கரே மறைவு செய்தி வருத்தமளிக்கிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதுடன், தேசிய நீரோட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தேசத்தின் பண்பாடு, கலாசாரத்தைப் பேணி காக்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டு செயல்பட்டவர். அவர் மறைவு தேசத்துக்குப் பேரிழப்பாகும்.''

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...