நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.
சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப்
பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.
சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
Tamil – Suraikai
English – Bottle gourd
Sanskrit – Tumbini
Telugu – Sorakaya
Malayalam – Titalauki
Botanical name – Lagenaria siceraria
வாதபித்தம் வாயருசி வன்பீரி கஞ்சீதம்
ஓதிருத்து நோயுமுண்டாம் உள்ளனல்போம்-ஓதத்
திருப்பாற் கடற்றிருவே தீக்குணத்தை மேவுஞ்
சுரக்காயைத் தின்பவர்க்குச் சொல்
-அகத்தியர் குணவாகடம்
பொருள் – உடல் சூடு தணியும், சிறுநீர் நன்கு வெளியேறும், குளிர்ச்சியுண்டாக்கும், உடலுக்கு உரத்தைக் கொடுத்து பித்தத்தைச் சமப்படுத்தும்.
உடல் சூடு நீங்க
இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.
சிறுநீர் பெருக
மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.
பித்தத்தைக் குறைக்க
உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.
சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.
· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
· உடலை வலுப்படுத்தும்.
· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.
· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
· குடல் புண்ணை ஆற்றும்.
· மலச்சிக்கலைப் போக்கும்
· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.
சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.
சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.
சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.
ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
வெந்தயம் லேசான கசப்புச்சுவை உடையது. இதனை உணவில் சேர்ப்பதால் உணவுக்கு நறுமணத்தைத் தருவதோடு நல்ல ஊட்டத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது.
எலும்பை உறுதியாக்கும் பாஸ்பரஸ் தாது உப்புக்களும், தசையைப் பாதுகாக்கும் லெசிதின் பொருளும் முட்டையில் உள்ள சத்துக்களைப் போல் நுக்லியோ அல்புமினும் நிறைந்துள்ளது.
வெந்தயத்தை மெந்தியம், மேதி, வெந்தை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
பித்தவுதி ரம்போகும் பேராக் கணங்களும்போம்
அத்திசுரத் தாகம் அகலுங்காண்-தத்துமதி
வேக இருமலோடு வீறுகயம் தணியும்
போகமுறும் வெந்தயத்தைப் போற்று
- அகத்தியர் குணவாகடம்
பொருள் – குருதியழல், எலும்பு சம்பந்தப்பட்ட சுரம், உடல் எரிச்சல், நீர்வேட்கை, இளைப்பு, இருமல் இவைகள் நீங்கும். ஆண்மைத் தன்மையை அதிகரிக்கும்.
இரவில் சிறிதளவு வெந்தயத்தை நீரில் போட்டு ஊறவைத்து காலையில் அந்த நீரை வெந்தயத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் வாய்ப்புண் ஆறும். வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும். செரிமான சக்தி அதிகரிக்கும். உதடு வெடிப்பு, நீங்கும். பல் ஈறுகள் பலப்படும்.
ஊறவைத்த வெந்தயத்தை பச்சரிசி சேர்த்து வேகவைத்து தேவையான அளவு தேங்காய்த்துருவல், பனைவெல்லம் சேர்த்து காலை உணவாக வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். நரம்புகள் புத்துணர்வு பெறும்.
இரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். இரத்தம் தேவையான பிராணனை உட்கிரகித்துக்கொள்ளும். இரத்தக்குழாய்களில் ஒட்டியுள்ள பசைபோன்ற கொழுப்புப்பொருள் வெளியேறும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற வேதிப்பொருட்கள் நீங்கும்.
· சிறுநீரகத்தை சீராக செயல்படவைக்கும்.
· வாயுத்தொந்தரவு நீங்கும்.
· இருமல், சளி, தொண்டைக்கட்டு குணமாகும். சருமம் புத்துணர்ச்சி பெறும்.
· எலும்புகள் பலப்படும். பல் கூச்சம் நீங்கும்.
வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி நீரில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் பாலுட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் நன்கு சுரக்கும். மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் பாதிப்புகள் நீங்கும். உடல் சூடு குறையும். கருப்பை பலப்படும்.
வெந்தயத்துடன் உளுந்து, அரிசி சேர்த்து அரைத்து தோசையாக செய்து சாப்பிடலாம். களியாகவும் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் அசதி நீங்கும். நரம்புகள் பலப்படும். செரிமான சக்தி அதிகரிக்கும்.
வெந்தயத் தோசையுடன் கருணைக் கிழங்கை அவித்து சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு குறைந்து, மூலநோயின் பாதிப்பு நீங்கும்.
வெந்தயத்தை பாசிப்பயறுடன் சேர்த்து அரைத்து தலை, உடல் எங்கும் பூசி குளித்து வந்தால் சருமப் பாதிப்புகள் நீங்கும்.
வெந்தயம், செம்பருத்திப் பூ, பாசிப்பயறு, சீயக்காய், கறிவேப்பிலை, இவற்றை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். தலைமுடி உதிர்தல், புழுவெட்டு, பொடுகு நீங்கும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல், சளித் தொல்லைக்கு வெந்தயக் கஞ்சி, வெந்தயத் தோசை மிகவும் நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு
மனித இனத்தை ஆட்டிப்படைக்கும் நோய்தான் நீரிழிவு. உணவு முறை மாறுபாடு, உடற்பயிற்சி யின்மை, மன அழுத்தம் இவைகளால் கணைய நீர் சுரப்பு குறைந்து போகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
கணையத்தை சீராக செயல்படவைக்கவும், சர்க்கரை நோயின் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும் வெந்தயம் சிறந்த மருந்தாகும்.
வெந்தயத்தை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு நீரில் கலந்தோ அல்லது பொடியாகவோ சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.
நீரிழிவு நோயாளிகள் வெந்தயக் கஞ்சியில் இனிப்பு சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. வெந்தய தோசை மிகச் சிறந்தது.
வெந்தயக் கஞ்சி
வெந்தயம், அரிசி, பாசிப்பயறு, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், இவற்றில் தேவையான அளவு சேர்த்து கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
வர்மத்தின் மர்மங்கள்
அகத்தியர் கூறும் நிதானம்… ஆசிரியர் : Dr V. தர்மங்கம்
அகத்தியர் கூறும் நிதானம்… ஆசிரியர் : Dr V. தர்மங்கம்
புறச் சூழ்நிலைகளாலும், அகச் சூழ்நிலைகளாலும் ஏற்படும் பாதிப்பை மருந்துகளால் குணப்படுத்த முடியும் என்பதை எடுத்துரைத்த அகத்தியர் பெருமான் இவற்றையும் தாண்டி உடல், உள்ளம், ஆன்மா மூன்றும் நிதானம் இழக்கும்போது உடல் சக்தியற்றுப் போகிறது என்று விளக்கம் கூறுகிறார். இந்த நிலையில் உள்ளம் அலைமோத ஆரம்பிக்கிறது. ஆன்மா அசைவற்று நிற்கிறது. இதனால் உடலில் ஒடுங்கியுள்ள உயிர் முடிச்சுக்களுக்குத் தேவையான பிராண வாயு கிடைக்காமல் போகிறது. இதுவே நரை, திரை, மூப்பு, சாக்காடு எனும் நோயின் பிடியில் தவிக்க நேரிடுகிறது என்றும் விளக்கியுள்ளார்.
முறையாக சரநிலை சுவாசத்தை ஒருவர் கடைப்பிடித்து வந்தால் பிராண வாயுவானது 18 அடங்கல்களில் உள்ள 108 வர்மப் புள்ளிகளுக்கும் சென்றடைந்து பிராண சக்தியாக மாறி முதலில் உடலை சீர்படுத்துகிறது. வாத, பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைக்கிறது. ஆதாரங்களை ஒரே நேர்கோட்டில் இணைத்து மூலத்திற்கு செல்லும் மூலக்காற்றை, மூலாதார சக்தியாக அதாவது குண்டலினி சக்தியாக மாற்றி மேல் எழுப்பி தனஞ் செயனைத் தொடு கிறது. (தனஞ் செயன் தான் மனித உள்ளத்தின் செயல் பாடுகளை சீராக்கும் வாயுவாகும். எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் ஏற்ப கிலேச நீரை உற்பத்தி செய்யும்) மூலாதார சக்தி தனஞ்செயனை அடைந்து அங்கு சுரக்கும் கிலேச நீரை அமிர்தகலை நீராக மாற்றி நெற்றி நடு புருவ மத்தி அதாவது திலர்த காலத்தில் ஒளிப்பிழம்பாக சுடர்விடுகிறது.
இந்நிலையே நிதானம் என்று அகத்தியர் கூறுகிறார்.
இதனால்தான் நம் முன்னோர்கள், விறு விறுப்பான சூழ்நிலைகளில் நிதானம் தவறாதே என்று எடுத்துரைத்துள்ளனர்.
நிதானம் என்பது அமைதியான நிலை. அந்நிலையே ஆன்ம நிலைக்கு எடுத்துச் செல்லும் நிலை.
நிதானம் சீரானால் 18 அடங்கலும் சீராக செயல் படும். இவ்வாறு நிதானமும் அடங்கலும் ஒருங்கிணையும் போதுதான் மனிதன் பிரபஞ்ச நிலையை அடைகிறான்.
மேலும், 18 அடங்கலின் உட்பிரிவுகளையும் நிதானத்தால் உண்டாகும் பிரதிபலன்களையும் வரும் இதழில் விரிவாகப் பார்ப்போம்
நோய் தடுக்கும் உணவுகள்…
நோயின்றி வாழ்வதே செல்வங்களில் எல்லாம் தலைசிறந்த செல்வம் என்கின்றனர் முன்னோர்கள்.இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் வாழத் தகுதியான தகவமைப்புகளை இயற்கை கொடுத்துள்ளது. ஆனால், இன்றுள்ள மாசுபட்ட சூழ்நிலையால் இயற்கை அழிந்துகொண்டு வருகிறது. இதில் மனித இனம் முதற்கொண்டு அனைத்து உயிரினமும் தன் தகவமைப்பை இழந்து வருகிறது.
இப்போதெல்லாம் நாம் சந்திக்கும் மக்கள் அனைவருமே ஏதோ ஒரு நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பர். நன்கு ஆரோக்கியமாக இருப்பவர் 100 ல் 2 பேராகத்தான் இருக்கும். மற்றவர்கள் இடுப்பு வலி, சர்க்கரை, இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, தோல் வியாதி, புற்றுநோய், மூட்டு வலி என ஏதாவது ஒரு நோயின் தாக்கத்தைக் கொண்டு இருக்கின்றனர்.
பெரும்பாலும் நோயானது வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாட்டு மக்களையே அதிகம் பாதிக்கிறது.
இதற்குக் காரணம் உணவு முறையும், சுற்றுப்புறச் சூழலும்தான்.
எனவே உணவு விஷயத்தில் கவனமாக இருந்தால் பல நோய்களைத் தவிர்க்கலாம் என்கின்றனர் சித்தர்கள்.
உணவை மருந்தாக உட்கொண்டு வந்தால் பிணியெனும் காலன் நம்மை நெருங்க மாட்டான் என்கின்றனர் சித்தர்கள்.
நோய் நம்மை அண்டாமலும், நோய் வந்தால் அதனைத் தடுக்கவும், சீரான உணவு முறையே சிறந்தது.
எந்த நோய்க்கு எந்த வகை உணவு முறையை மேற்கொள்ளலாம் என்பதை அறிந்து, நோயுற்ற காலங்களில் வேண்டாத உணவுகளைத் தவிர்த்து, நோயைக் கட்டுப்படுத்தும் விதமான உணவுகளை உட்கொண்டு வந்தால் நோயிலிருந்து விரைவில் விடுபட்டு ஆரோக்கியம் பெறலாம்.
பொதுவாகவே, உணவுகள் எளிதில் சீரணமாகக் கூடியதாக இருக்க வேண்டும். தினசரி உணவில் ஏதாவது ஒரு கீரை வகையை சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்கள், பழச்சாறுகள் போன்றவை நோயை எதிர்க்கும் தன்மை கொண்டவை.
தூக்கமின்மை
தூக்கமில்லாமல் சிலர் தவிப்பார்கள். இதற்காக சிலர் மது அருந்துவார்கள், சிலர் தூக்க மாத்திரைகளை சாப்பிடுவார்கள். இத்தகைய செயல்கள் மேலும் மேலும் தூக்கமின்மையை அதிகப்படுத்துமே ஒழிய குறைக்காது..
தூக்கமின்மையைச் சரிபடுத்த இரவு உணவு மென்மையானதாகவும், அளவோடும் இருக்க வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன் காபி, டீ அருந்துவதைத் தவிர்த்துவிடவேண்டும்.
நன்கு காய்ச்சிய பாலில் ஒரு கரண்டி தேன் கலந்து அருந்தினால் சுகமான நித்திரைக் கிடைக்கும்.
மலச்சிக்கல்
மலச்கிக்கல்தான் நோயின் ஆரம்பம் என்பது சித்தர்கள் முதல் தற்கால மருத்துவர்கள் வரை கூறும் கூற்று.
மலச்சிக்கலைப் போக்க அரைக்கீரை, சிறுகீரை, கரிசலாங்கண்ணி, மணத்தக்காளி, முருங்கைக்கீரை, தண்டுக்கீரை, வெந்தயக் கீரை, புதினா, கறிவேப்பிலை போன்ற கீரை வகைகளில் ஏதாவது ஒன்றை தினமும் நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பழங்களில் வாழைப்பழம், கொய்யா, பப்பாளி, திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற ஏதேனும் ஒரு பழத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.
காய்களில் சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், பூசணிக்காய், வெள்ளரிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை சாதத்தின் அளவை விட அதிகமான அளவு உட்கொண்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
காபி, டீ, கிழங்குகள், எண்ணெய் பண்டங்கள், மசாலாக்கள், மது, புகை போன்றவைகளைத் தவிர்த்தால் நலம் பயக்கும்.
மூளை பலமடைய
வல்லாரை, முருங்கை, அரைக்கீரை, பாதாம் பருப்பு, அத்திப்பழம், திராட்சை, பேரீச்சை, ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய் ஆகியவற்றை சாப்பிடுவதால் மூளை செல்கள் சரியான முறையில் செயல்படும். அதனால் நரம்பும் பலப்படும்.
இதய நோயாளிகளுக்கு
திராட்சை, அன்னாசி, ஆரஞ்சு, சீத்தாப்பழம், பேரிக்காய், ஆப்பிள் ஆகியவை இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவு வகைகள் ஆகும்.
டீ, காபி, புகையிலை, மது போன்றவற்றை இவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
நரம்புத் தளர்ச்சிக்கு
பசும்பால், திராட்சை, ஆரஞ்சு, மலைவாழைப் பழம், மணத்தக்காளிக் கீரை, வேர்கடலை, பட்டாணி, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்றவை நரம்புத் தளர்ச்சியை நீக்கி ஆரோக்கியத்தைக் கொடுக்கக்கூடிய உணவு வகைகள் ஆகும்.
தோல் நோய்க்கு
சாதாரண தோல் நோய் எதுவாயினும் அது நீங்குவதற்கு நீண்ட காலமாகும். அச்சமயம், காபி, தேயிலை, கோக்கோ முதலியவற்றை தவிர்த்து தயிர், பால், வெண்ணெய், பழங்கள் இவற்றை நாட்பட உட்கொண்டால் தோல்வியாதிகள் விரைவில் குணமாகும்.
நீரிழிவு நோயாளிக்கு
பால், மோர், தயிர், போன்றவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆப்பிள், பப்பாளி,கொய்யா கனிகளை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உளுந்து பயறு, கடலை, சம்பா கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களில் செய்த பண்டங்கள் அரிசி உணவைவிடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
பொன்னங்கண்ணி, முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, முள்ளங்கிக்கீரை, பசலைக்கீரை போன்ற கீரை வகைகளை உணவுடன் சேர்த்து உட்கொண்டால் நீரிழிவு நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
வெல்லம், சர்க்கரை, கற்கண்டு, இனிப்பு வகைகள், மைதா மாவு, கிழங்கு வகைகளைத் தவிர்த்து, மற்ற உணவு வகைகளை அளவோடு உண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
ஏலக்காயின் மகத்துவங்கள்!
« குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.
« ஜலதோசத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.
« மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ‘ஏலக்காய் தேனீர்’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். தேயிலை குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து தேனீர் தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த தேனீரைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
« நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவதும் நல்லதல்ல.
« வெயிலில் அதிகம் அலைந்தால் தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கசாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.
« வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரைக் கரண்டி எடுத்து, அரை ‘டம்ளர்’ தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும்.
உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.
ஜப்பானியரின் அழகின் இரகசியம்.
எங்கள் அழகின் இரகசியம் ‘அக்குபஞ்சர்` சிகிச்சை’தான் என்று ஜப்பான் நாட்டினர் தெரிவித்துள்ளனர். அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வதை மறந்துவிடுங்கள், பழங்கால வைத்தியமான அக்கு பஞ்சர் சிகிச்சை செய்து கொண்டு அழகாக மாறுங்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தற்போது ஜப்பானில் அக்குபஞ்சர் சிகிச்சை பிரபலம் அடைந்து வருகிறது.சீனாவில் இருந்து 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிகிச்சை முறை ஜப்பான் நாட்டுக்கு வந்தது என்று கூறுகின்றார்கள். ஆனால், இதன் ஆரம்பவடிவம் தமிழர்களிடமே இருந்துள்ளது. தோடு அணிவதில் இருந்து காவடி செதில் குத்துவதுவரை அக்குபஞ்சர்தான் என்பது பலருக்கும் புரிவதில்லை. தற்போது ஜப்பானில் 40 ஆயிரம் பதிவு பெற்ற அக்குபஞ்சர் மருத்துவர்களும், 150க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களும் உள்ளன.
அழகு சாதனப் பொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் உலகத்திலேயே 2ம் இடத்தில் உள்ள ஜப்பானியர்களே சமீப காலமாக அக்குபஞ்சர் பக்கம் திரும்பியுள்ளது, அழகை விரும்பும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
No comments:
Post a Comment