நம் உடலின் மொத்த எடையையும் தாங்கும் பாதங்களுக்கு... பல முக்கிய நரம்புகள் ஓடும் பாதங் களுக்கு... நிச்சயமாகக் கொடுக்கப்பட வேண்டும் உரிய பராமரிப்புகள்! அழகு நிலையங்களில் செய்யப்படும் 'பெடிக்யூர்’ பராமரிப்புகளை நீங்களே செய்துகொள்ளலாம் எளிமையாக இப்படி...
வெந்நீரில் ஷாம்பு, கல் உப்பு, ஒரு ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு-20 (Hydrogen Peroxide -20 , இது ஆங்கில மருந்துக் கடைகளில் கிடைக்கும்) கலந்து, பாதங்களை 15 நிமிடங்கள் அதில் ஊற வையுங்கள். இதனால் அழுக்குகள் வெளியேறி, பாதங்கள் மிருதுவாகும். ஒருவேளை நக இடுக்கு களில் அழுக்குகள் வெளியேறாமல் தங்கி இருந்தால், சிறிதளவு பஞ்சில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு-20 கொஞ்சம் எடுத்து, அங்கு பிழிந்துவிடுங்கள். உள்ளிருக்கும் அழுக்குகளும் பொங்கி வெளிவந்துவிடும்.
பழைய நக பூச்சை நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு துடைத்துவிடுங்கள். கால் நகங்களை திருத்தி வெட்டுங்கள். ஓரங்களில் மிகவும் ஒட்டி வெட்டிவிட வேண்டாம்.
ஆரஞ்சு ஸ்டிக் (ஆரஞ்சு மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட இந்தக் குச்சி, மிக மென்மையாக இருக்கும்) கொண்டு நக ஓரங்களில் தேங்கியிருக்கும் அழுக்குகளை மிருதுவாகச் சுத்தம் செய்யுங்கள்.
மேற்புற தோல் பகுதியில் 'கியூட்டிகிள் ஆயில்' அப்ளை செய்யுங்கள்.
சொரசொரப்பான டெரகோட்டா வகை அல்லது பியூமிஸ் கல் கொண்டு பாதங்களைத் தேயுங்கள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பீர்க்கன் நார், வெட்டி வேர் கொண்டு கால்களைத் தேயுங்கள். வீட்டில் ஒருவர் பயன்படுத்திய இந்த நார் மற்றும் வேர்களை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
மாய்ச்சரைஸிங் க்ரீமை கால்கள் மற்றும் பாதங்களில் தடவி, மசாஜ் செய்யுங்கள். பாதுகாப்பான பெடிக்யூர் செய்யப்பட்ட உங்கள் பாதங்கள், இப்போது உலர்ந்த செல்கள் நீக்கப்பட்டு சுத்தமாகவும், அழகாகவும் இருக்கும். பத்து நாட்களுக்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், பாதங்கள் என்றும் புத்துணர்ச்சியோடு இருக்கும். அதைவிட முக்கியமான விஷயம், பாதங்களில் ரத்த ஓட்டமும் தூண்டப்படும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெடிக்யூர் செய்யும்போது, எந்த மெட்டல் பொருட்களையும் உபயோகிக்கக் கூடாது என்பதுடன், பெடிக்யூரில் நன்கு பயிற்சி பெற்றவர்களிடம் செய்துகொள்வது சிறந்தது. ஏனென்றால், இது அழகுக்கலை மட்டுமல்ல... இதுவும் ஒருவகை மருத்துவமே!
No comments:
Post a Comment