சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள யான் எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று அதிகாலை அடுக்குமாடி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 39 பயணிகள் இருந்தனர். இந்த பஸ், முன்புறம் சென்ற மீத்தேன் காஸ் டேங்கர் லாரியுடன் பயங்கரமாக மோதியது.
இதில், இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில் 36 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 3 பேர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீத்தேன் காஸ் ஏற்றிவந்த லாரியின் ஓட்டுநரும், உதவியாளரும் விபத்துக்கு பின்னர் உடனடியாக லாரியில் இருந்து வெளியே குதித்ததால் அவர்கள் காயங்கள் இன்றி உயிர்தப்பினர். அவர்களை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு விபத்து: குவாங்கன் நகரில் ஹூரோங் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த வேன் ஒன்று எதிரே வந்த லாரியுடன் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 10 பேர் இறந்தனர். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரே நாளில் 2 விபத்தில் 46 பேர் இறந்தது, மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் மிகவும் அபாயகரமான வளைவுகளை கொண்டது. நகரங்களில் போக்குவரத்து விதிகள் முறையாக பின்பற்றப்பட்டாலும், நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவோர் விதிகளை பின்பற்றுவதில்லை. கடந்த ஆண்டில் மட்டும் நெடுஞ்சாலை விபத்துகளில் சுமார் 62,000 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment