Aug 26, 2012




இந்திய சுதந்திர தினத்திற்கான அறிய தகவல்கள்

இன்று இந்தியா தனது 66வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருக்கிறது. இந்நாள் பொற்காலத்தின் ஒரு பகுதி.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?

என்று பாரதி பாடிய வரிகளின் மூலம் நம் முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை அறியலாம்.

400 ஆண்டுகாலம் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட, இல்லை...இல்லை.. நம்முடைய அறியாமையால் தான் அடிமைப்பட்டு கிடந்தோம் என்று கூறினால் தான் உண்மை. இவ்வாறு அடிமைப்பட்டு கிடந்த நமக்கு 1947ம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி இரவு சுதந்திரம் கிடைத்தது.

சுதந்திரம் பெற்ற இரவு நடந்தது என்ன?

தலைநகர் புதுடெல்லியில் நாடாளுமன்றம் கூடியது. தேசத் தந்தை காந்தி, நேரு, மவுண்ட் பேட்டன் உள்பட பல முக்கிய தலைவர்கள் கூடினர். சுதேசா கிருபளானி வந்தே மாதரம் பாடலை பாடினார். நாட்டின் முதல் குடியரசு தலைவரான ராஜேந்திர பிரசாத் கூட்டத்தின் தலைமை உரையை வாசித்தார். நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. முதல் பிரதமராக நேரு பதவியேற்றார்.

கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன், ஆட்சி அதிகாரத்தை நேருவிடம் ஒப்படைத்தார். ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட நேரு, "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் சிறப்பான உரை நிகழ்த்தினார்.

அதில், இன்று நாம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை முழுமையாக அடையவில்லை என்றாலும் கணிசமான அளவு அடைந்து விட்டோம். நீண்ட காலம் அடைபட்டுக் கிடந்த ஒரு நாட்டின் மறுமலர்ச்சி இன்று புத்துயிர் பெற்று வருகிறது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும், மக்களின் சேவைக்காகவும், மனிதநேயத்திற்காகவும் அர்ப்பணித்து அயராது உழைப்போம் என உறுதிமொழி கொள்வோம்.

தேசியக் கொடி பிறந்த கதை

இப்போது புது இந்தியா உருவாகி விட்டது. இந்தியாவிற்கென்று தனி சட்டங்கள் வேண்டும். இந்திய நாட்டை உலகில் அடையாளப்படுத்த முக்கியமாக கொடி ஒன்று அவசியம். இதனைத் தொடர்ந்து தேசிய கொடியை ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பிங்கிலி வெங்கையா என்பவர் வடிவமைத்தார். இவர் பிரிட்டிஷார் காலத்தில் இந்திய ராணுவம் மற்றும் ரயில்வே துறைகளிலும் பணியாற்றியவர்.

1921ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் பொது மாநாடு, ஆந்திராவின் காக்கி நாடாவில் நடைபெற்ற போது, காந்தியின் வேண்டுகோளை ஏற்று மூன்று வண்ணங்கள் மற்றும் நடுவே அசோக சக்கரத்துடன் கூடிய தேசியக் கொடியை வடிவமைத்தார். இது விஜயவாடாவில் நடந்த பொது மாநாட்டில் வெளியிடப்பட்டு, தேசிய கொடியாக முன்மொழியப்பட்டது. கொடியின் நடுவே உள்ள சக்கரம் சொல்லும் கருத்து என்ன?நமது தேசிய கொடியில் உள்ள சக்கரம், சாரநாத்தில் உள்ள அசோகர் ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்டது.

யூலை 22 ஆம் நாள், 1947 ம் ஆண்டு இந்திய அரசால் இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. சக்கரம், 24 ஆரங்களுடன் கூடிய நீல வண்ணமுடையது. இது சத்தியம், தர்மம், சட்டம் ஒழுங்கு, உண்மை போன்றவற்றை கடைப்பிடித்து, நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று உணர்த்துகிறது.

தாயுடன் சேர்ந்த சேய்கள்

பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவில் 565 சுதேசி சமஸ்தானங்கள் இருந்தன. பிரிட்டிஷாருக்கு வரி கட்டிக் கொண்டு இருந்த சமஸ்தான மன்னர்கள், நாடு சுதந்திரம் அடைந்த பின்னும் தனி நாடுகளாக இருக்க வேண்டும் என்று எண்ணினர்.

இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பதவியேற்ற பின், சுதேச சமஸ்தானங்கள் அனைத்தும் இந்தியாவுடன் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதன்படி பிகானிகர், பாட்டியாலா,குவாலியர், பரோடா முதலிய சமஸ்தானங்கள் இந்தியாவுடன் உடனடியாக இணைய முன்வந்தன. அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் 552 சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன.

ஆனால் காஷ்மீர், ஐதராபாத், திருவாங்கூர், ஜூனாகத் போன்ற சில சமஸ்தானங்கள், தனி நாடாக இருப்போம் என்று அடம் பிடித்தன. ஐதராபாத்தை நிஜாம் ஆண்டு வந்தார். 1948 செப்டம்பர் 13ம் திகதி இந்திய இராணுவம் ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்தது. பின்ஜூனாகத், காஷ்மீர், திருவாங்கூர் சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன. தமிழ்நாட்டில் இருந்த ஒரே சமஸ்தானம் புதுக்கோட்டை. இதை ஆண்டராஜகோபால் தொண்டமான், 1948 மார்ச் 3ம் திகதி இந்தியாவுடன் இணைத்தார்.

மக்கள் தொகை

சுதந்திரம் அடைந்த போது, நமது நாட்டின் மக்கள் தொகை 31 கோடியே 82 லட்சம். தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 1.22 பில்லியன் ஆகும்.

இது வரை நாம் பெற்ற வளர்ச்சிகள் என்ன?

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை ஏராளமான வளர்ச்சிகளை கண்டுள்ளது என கூற முடியாது. கல்வி, பொருளாதாரம், அறிவியல் மற்றும் ஆராய்ச்சிகளில் நாம் எட்டியுள்ள தூரம் மிதமானதே.. வாரத்திற்கு ஒரு முறை பிரம்மோஸ் மற்றும் அக்னி ரக ஏவுகணைகளை விண்ணுக்கு அனுப்பினாலும் வளர்ச்சி கண்ட நாடுகள் சந்திரனைத் தாண்டி செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு சென்று விட்டன. பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் உலகின் 4வது இடத்தில் இருக்கிறது என இணையதள தகவல் தெரிவிக்கிறது.

ஆனால் இன்றளவும் கூட சென்னை, மும்பை, கொல்கத்தா, புதுடெல்லி போன்ற நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் மக்கள் தினமும் 3 வேளை சாப்பிடுகிறார்களா? என்று கேள்வி எழுப்பினால் இதற்கான பதிலை சற்று யோசித்தே சொல்ல வேண்டும். இதற்கிடையே நாட்டின் முதுகெழும்புகள் என புகழப்படும் கிராமங்களில் வசிக்கும் மக்களில் 10 சதவீதம் பேர் நாளொன்றுக்கு 17 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு செய்யும் நிலையிலேயே உள்ளனர்.

NSSO( National Sample Survey Organisation) எனப்படும் தேசிய மாதிரி சர்வே அமைப்பு, 2011 – 12ம் ஆண்டுக்கான மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வொன்றை நடத்தியது. இந்தியாவில் 7 ஆயிரத்து 391 கிராமங்களில் உள்ள 59 ஆயிரத்து 70 குடும்பங்களிலும், 5 ஆயிரத்து 223 நகர்ப்புற பகுதிகளில் உள்ள 41 ஆயிரத்து 602 குடும்பங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் கிராமங்களில் வசிக்கும் மக்களில் 10 சதவீதம் பேர் நாளொன்றுக்கு 17 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு செய்யும் நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. இவர்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக 503 ரூபாய் 49 காசுக்கு குறைவாகவே செலவு செய்கின்றனர்.

நகர்ப்புற மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் தினமும் 23 ரூபாய் 40 காசு அதாவது மாதத்துக்கு 702 ரூபாய் 26 காசுக்கும் குறைவாகவே செலவு செய்து வாழ்க்கையை எதிர்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.

நகர்ப்புறங்களில் 70 சதவீதம் பேர் தினசரி 43 ரூபாய் 16 காசுக்கு கீழும், கிராமப்புறங்களில் பாதிப்பேர் 34 ரூபாய் 33 காசுக்கு கீழும் வாழ்க்கையை நடத்தி வரும் அவலமும் இந்த ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெழும்புகள் என தேசத்தந்தை காந்தி கூறியிருக்கின்ற நிலையில் கிராமப்புற மக்கள் வறுமைக்கு உள்ளாவது இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள நீக்க முடியாத களங்கம் ஆகும்.

வரலாறு காணாத வறட்சியை நோக்கி இந்தியா

இதற்கிடையே இந்தியாவை பருவநிலையும் சோதித்து பார்க்க முயற்சித்துள்ளது. நாட்டில் இவ்வருடத்திற்கான பருவ மழை பெய்யாத காரணத்தினால் கடந்த 3 வருடங்களில் இந்தியா முதல் தடவையாக வறட்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பசுபிக் சமுத்திரத்தின் ''எல்லினோ தாக்கம்'' காரணமாக செப்ரெம்பர் மாதத்தில் பெய்யும் மழை சராசரியை விட மிகவும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை துறைத் தலைவரான ஜெனரல் லக்ஷ்மன் சிங் ராத்தோர் கூறியுள்ளார். இந்த எல்லினோ தாக்கம் தான் உலகமெங்கிலும் காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த மழை வீழ்ச்சிக் குறைவு, ஆசியாவின் மூன்றாவது பெரிய இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று திட்டக்கொமிசன் ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள். இதுபோன்ற தடைக்கற்களையெல்லாம் தூள் தூளாக ஆக்கி விட்டு நம்முடைய வல்லரசு கனவை நோக்கி பயணிக்க வேண்டும்.

வல்லரசாக என்ன செய்யலாம்?

இந்தியா 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டுமெனில் சில துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். நமது அண்டை நாடான சீனாவுடன் ஒப்பிடுகையில், சுறுசுறுப்பு, கடின உழைப்பு, பயிற்சி, நேர்மை போன்ற விடயங்களில் நம்மவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள நதிகளை இணைத்தால் அனைத்து பகுதிகளும் வளம் பெறும் என்று முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறியிருக்கிறார்.

ஆனால் நமது அரசியல் தலைவர்கள் மத்தியில் இது பற்றி ஒருமித்த கருத்து இல்லை. ஆண்டுதோறும் நாட்டின் பட்ஜெட்டில் இராணுவத்துறைக்கு தான் அதிகளவில் செலவிடப்படுகின்றன. இருப்பினும் மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது இராணுவ தளவாடங்கள் நவீனமிக்கதாக இல்லை. இக்குறையை போக்க வேண்டும்.

சமீபத்தில் முன்னாள் இராணுவ அமைச்சர் ஒருவர், பாகிஸ்தான், சீனாவுடன் தற்போது போர் வந்தால் கூட நம்மிடம் சமாளிக்க தேவையாள போர்தளவாடங்கள் இல்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொறியியல், மருத்துவம், வக்கீல்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோர், பணிக்காலத்தில் சிறிது காலம் கட்டாயம் கிராமங்களில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு பணியாற்றுபவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கலாம். இதனால் கிராமப்புற வளர்ச்சி மேம்படும்.

கல்வித்துறையில் சீரான இடைவெளியில் மாற்றம் கொண்டு வரவேண்டும். தொழில் நுட்ப கல்விக்கு நாட்டில் முக்கியத்துவம் தர வேண்டும். குறிப்பாக படித்தவர்கள் சேவை துறையின் அடிப்படையில் வெளிநாடுகளில் வேலை செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களும் தங்களது பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். அப்போது தான் தகுதியானவர்கள் தெரிவு செய்ய முடியும்.

பல அரசு துறைகள் செயல்படாதவையாக உள்ளன. ஊழியர்கள், கடமையை செய்வதற்கு லஞ்சத்தை எதிர்பார்ப்பது கேவலமானது. மேலும் சட்டத்துக்கு புறம்பான வேலைகளுக்கு ஊழியர்களை மக்கள் அணுகும் போது அதை ஊழியர்கள் அனுமதிக்கக்கூடாது. அப்படி செய்தால் சட்டவிரோதமான குற்றங்களை தடுக்கலாம். இன்று நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அரசு ஊழியர்கள் தங்களது கடமையை செய்வதற்கே லஞ்சம் கேட்கின்றனர்.

எனவே ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். குற்றம் செய்பவர்களுக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அப்பொழுது தான் குற்றவாளிக்கு தவறு செய்யும் எண்ணம் இருக்காது. ஈரான், ஈராக், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகள் இதற்கு முன்னுதாரணமாக கருதப்படுகிறது. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ் போன்றோர்கள் ஊழலுக்கெதிராகவும் கறுப்புபணத்திற்கெதிராகவும் போராடி வருகின்றனர். இவர்களுடைய போராட்டத்திற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

"கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு" என்று மறைந்த மகாத்மா காந்தியடிகள் கூறினார். இவரது கூற்று நூறு சதவீதம் உண்மை. இந்த 21ம் நூற்றாண்டிலும் அதிகளவிலான கிராமங்களில் சாலை வசதி, போக்குவரத்து மின்சாரம், குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகள் இல்லை.

ஒவ்வொரு மாவட்ட தலைநகரும், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களின் சாலைகளுடன் இணைக்கப்பட வேண்டும். இதன்மூலம் அக்கிராமத்தில் உள்ள மக்கள் நகரங்களை மையமாக வைத்து தங்களுடைய வளர்ச்சிக்கு வித்திடுவர்.

தீர்க்க வேண்டிய பிரச்சினைகள்

நாடு சுதந்திரமடைந்து 66 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சில பிரச்சினைகள் நம்மை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. அதில் இன்றளவும் காஷ்மீர் பிரச்சினை பிரதான பிரச்சினையாக கருதப்படுகிறது. அவ்வப்போது பாகிஸ்தான் துருப்புகள் காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்துவதும் பதிலுக்கு இந்தியா நடத்துவதும் வழக்கமான ஒரு சம்பவமாக உள்ளது. தீவிரவாதிகளின் ஆதிக்கம் 1996 ஆண்டு முதல் படிப்படியாக இன்று வரை குறைந்து வருகிறது.

இது தவிர மாவோயிஸ்டுகள் பிரச்சினை, மாநிலங்களுக்கு மத்தியில் உள்ள நதி நீர் பிரச்சினை போன்றவை பிரதான பிரச்சினைகளாக கருதப்படுகின்றது.

இளமை இந்தியா

நாட்டுப்பற்று மிக்க நூறு இளைஞர்களைத் தாருங்கள், இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் கூறினார். இளைஞர்களால் ஒரு செயலை எளிதாகவும், சிறப்பாகவும் செய்து முடிக்க முடியும் என அவர் கருதினார்.

இதனாலேயே விவேகானந்தர் ஆணித்தரமாக இளைஞர் சக்தியை நம்பினார். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் இந்தியாவை அனைத்து துறையிலும் உயர்த்தி வருகின்றனர். இந்த எழுச்சியால், இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடுகளே பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டன. ஆனால் இந்தியா இதிலிருந்து தப்பித்து சீரான வளர்ச்சி அடைந்து வருவது, உலக நாடுகளை வியப்படையச் செய்தது. இந்தியர்களின் கடின உழைப்பு தான், வளர்ச்சிக்கு காரணம். இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீதம் பேர் இளைஞர்கள். இந்த இளமைத் துடிப்பு எந்த நாட்டுக்கும் இல்லை. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அடிக்கடி தனது உரையில் இரண்டு விடயங்களை குறிப்பிடுவார்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...