பாகிஸ்தானில் வரலாற்று சிறப்பு மிக்க நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அத்துடன் கைபல் பாக்துங்வா, பஞ்சாப், சிந்து மற்றும் பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
342 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு 4670 வேட்பாளர்களும், மாகாண சபைகளுக்கு சுமார் 11 ஆயிரம் வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். தீவிரவாதிகளின் மிரட்டல் மற்றும் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் காலை முதல் மாலை வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்காளர்கள் வருகையை அதிகரிப்பதற்காக வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. அதன்படி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பம் முதலே நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான்
முஸ்லிம் லீக் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி தேர்தல் நடந்த 272 தொகுதிகளில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 120க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தது. இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சியின் வேட்பாளர்கள் 35 தொகுதிகளிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி வேட்பாளர்கள் 34 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற தகுதியை இம்ரான் கான் பெறுவாரா? என்பது ஒட்டுமொத்த முடிவுகளும் வெளியான பின்னரே தெரியவரும்.
எனவே, பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீப் மூன்றாவது முறை பதவி ஏற்பது உறுதியாகி விட்டது.
லாகூரில் உள்ள நவாஸ் ஷெரீப்பின் இல்லத்தின் முன் கூடிய தொண்டர்களிடையே பேசிய அவர், 'இறுதி முடிவுகளுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
கூட்டணி அரசு அமையாமல் தனி மெஜாரிட்டியுடன் நமது கட்சி ஆட்சியை அமைக்கும். தேர்தல் பிராசாரத்தின்போது உங்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். நமது நாட்டை சூழ்ந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகான அனைத்து கட்சிகளுடனும் கலந்து பேசி முடிவெடுக்க நான் தயாராக இருக்கிறேன்.
என்னையும் என் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் தாக்கி பேசிய எதிர்க்கட்சியினரை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறினார்.
1985ம் ஆண்டு பஞ்சாப் மாகாண முதல் அமைச்சராக பதவி வகித்த நவாஸ் ஷெரீப், பெனாசிர் பூட்டோ ஆட்சி காலத்தில் இரண்டு முறை பாராளுமன்ற எதிர்கட்சி தலைவராக பதவி வகித்தார். பாகிஸ்தானின் பிரதமராக 1990 முதல் 1993 வரையில் பதவி வகித்தார். ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
மீண்டும் 1997ம் ஆண்டு தேர்தலை சந்தித்து 2வது முறை பிரதமரான அவர், 1999ம் ஆண்டு முன்னாள் ராணுவ தளபதி முஷரப் நடத்திய ராணுவ புரட்சியால் ஆட்சியை விட்டு நீக்கப்பட்டார். அவர் மீது கொலை முயற்சி, ஊழல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ராணுவ கோர்ட்டில் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பூட்டோவுக்கு நேர்ந்தது போல், நவாஸ் ஷெரீப்புக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என வதந்தி பரவியது.
சவூதி மன்னர் ஃபஹத் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தலையீட்டின் பேரில் நவாஸ் ஷெரீப், தண்டனையில் இருந்து தப்பித்து 10 ஆண்டு காலம் சவூதி அரேபியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த விடுதலைக்காக பாகிஸ்தானில் உள்ள சுமார் 83 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துகளை இழக்க சம்மதித்த அவர், 5 லட்சம் அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்தவும் ஒப்புக்கொண்டார்.
அவர் மீது நடைபெற்ற விசாரணையில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், நவாஸ் ஷெரீப் நாடு திரும்பலாம் என்று கூறியது. இதனையடுத்து, 10-8-2007 அன்று அவர் இஸ்லாமாபாத் வந்தார். ஆனால், விமான நிலையத்திலேயே அவரை தடுத்து நிறுத்தி மீண்டு சவூதி அரேபியாவிற்கு திருப்பி அனுப்ப முஷரப் உத்தரவிட்டார்.
அதன் பின்னர், சவூதி மன்னர் தலையீட்டின் பேரில் 25-11-2007 அன்று பாகிஸ்தான் வந்த அவர், 2008-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தார்.
நேற்று நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி அபார வெற்றி பெற்றதையடுத்து பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் மூன்றாவது முறை பதவி ஏற்க உள்ளார்.
No comments:
Post a Comment