May 11, 2013

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் வெற்றி

லாகூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார் நவாஸ் ஷெரீப். (வலது) கராச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் சனிக்கிழமை இரவு வாக்குகளை எண்ணும் பணியில் தேர்தல் ஊழியர்கள்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவருமான நவாஸ் ஷெரீப், முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், தெஹ்ரி-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த தாக்குதல்
சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்தனர்.
வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 203 இடங்களில் நிலவரங்கள் தெரியவந்துள்ளன. நவாஸின் கட்சி 110 தொகுதிகளிலும், இம்ரான் கானின் கட்சி 32 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி 31 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 20 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். ஜமியாத் உலாமா-இ-இஸ்லாம் கட்சி 10 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
பெனிவர் முதல் தொகுதியில் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் 66,464 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
சர்கோதா தொகுதியில் 19,125 வாக்குகள் பெற்று நவாஸ் வென்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இம்ரான் கான் கட்சி வேட்பாளருக்கு 6,605 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற 137 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 70 தொகுதிகள் பெண்கள், முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானில், முதல்முறையாக ஜனநாயக ரீதியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தக் கூடிய வகையில் சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. எனவே இந்தப் பொதுத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் 272 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்பட நான்கு மாகாணங்களுக்கும் சேர்த்து மொத்தம் 342 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்துக்கு 4,670 பேரும், மாகாணத் தேர்தலில் 11 ஆயிரம் பேரும் போட்டியிட்டனர். சுமார் 8.6 கோடி மக்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ தலைவராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் ஆகிய முக்கிய கட்சிகளுடன் அவாமி தேசிய கட்சி, முத்தாகிதா குவாமி இயக்கம், ஜமியாத் உலாமா-இ-இஸ்லாம் போன்ற கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு, தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தத் தேர்தலை அவரது கட்சி புறக்கணித்தது.
வாக்குப்பதிவு: பயங்கரவாத அமைப்புகளின் மிரட்டல் இருந்தபோதும் வாக்குகளைப் பதிவு செய்ய காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்குச் சாவடிகளில் கூடத் தொடங்கினர். சனிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் ராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கயானி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஜி.இப்ராஹிம் ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தபால் மூலம் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும் கராச்சி, குவெட்டா, பெஷாவர் ஆகிய இடங்களில் சனிக்கிழமை காலை தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அவாமி தேசிய கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் அந்தக் கட்சியின் வேட்பாளர் அமானுல்லா மெக்சூத்தைக் குறிவைத்து முதல் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
அதையடுத்து கட்சிகளின் தேர்தல் அலுவலகங்கள், வாக்குச் சாவடிகளைக் குறிவைத்து அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹகிமுல்லா விடுத்த மிரட்டலின்படி கைபர்-பக்துன்கவா மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. பெரும்பாலும் வாக்குச் சாவடிகளுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன.
ஊடகங்கள் கண்டனம்: இஸ்லாமாபாதில் இயங்கி வரும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் செய்தித்துறை தலைவர் டெக்லான் வால்ஷ் என்பவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...