May 11, 2013

இவா பெரோன்... அர்ஜென்டினாவின் எம்.ஜி.ஆர்!

இவா பெரோன்... முப்பது வயதுக்குள் இந்தப் பெண் தொட்ட உயரங்கள் சொல்லில் அடங்காதவை.

அர்ஜென்டாவின் சின்ன நகரத்தில் பிறந்த இவருக்கு, உடன் பிறந்தவர்கள் ஐவர். இவரின் தந்தைக்கு இரண்டாவது சட்டப்படியான மனைவி என்கிற அங்கீகாரம் பெறாதவராகவே இவரின் அம்மா இருந்தார். அப்பாவின் மரணத்தின்பொழுது வெளியே நிற்க வைக்கப்பட்டு அவமானத்தை சுவைக்க வேண்டிவந்தது. இவா கொஞ்சமாக அழுதார். வேலை தேடி நாட்டின் தலைநகருக்கு வந்தார்.

கையில் இருந்தது முப்பது பெசோக்கள். கொஞ்சம் நம்பிக்கை. ஏகத்துக்கும் அலைந்தார். நாடகங்கள், ரேடியோ ஷோக்கள் என என்னென்னமோ பண்ணிப் பார்த்தார். ஹிட் அடிக்க முடியாமலே இருந்தது. நடுவில் அழகைக்கூட்டி கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கொள்ள பணம் சேர்த்து வைத்திருந்தார். உறவுக்காரர் ஒருத்தருக்கு உடல்நலம் சரியில்லை என்று அந்த பல நாள் உழைப்பில் கிடைத்த பணத்தை முழுக்க கொடுத்துவிட்டு வந்தவருக்கு, வாழ்க்கை புன்னகையை பரிசளிக்க காத்துக்கொண்டு இருந்தது. 


பிரபலமான பெண்மணிகளின் வேடத்தில் வானொலியில் தோன்றி ஒரு தொடரில் நடிக்க, அது சக்கைப்போடு போட்டது. நாட்டில் ஸ்டார் ஆகிவிட்டார். அப்பொழுதுதான் அரசியல் ஆளுமையாக நாட்டில் வளர்ந்து கொண்டிருந்த பெரோனை சந்தித்தார். இருவருக்கும் வயது வித்தியாசம் பத்தொன்பது. சில சில சந்திப்பில் காதல் அரும்பி சீக்கிரம் திருமணம் செய்துகொண்டார்கள்.

நாட்டில் வேறொரு சர்வாதிகாரி ஆண்டு கொண்டிருந்தார். அவரின் ஆட்சியை பெரோன் கோஷ்டி தூக்கி எறிந்துவிட்டு ஆட்சிக்கு வந்தது. பெரோன் ஜனாதிபதி பதவி வேண்டாம் என்று சொல்லி தொழிலாளர் நலத்துறையை வாங்கிக்கொண்டார். அதற்குக் கீழ் தான் ராணுவ சங்கம் இருந்தது.

இந்தக் காலத்தில்தான் இவா நாடு முழுக்க பயணம் செய்தார். எளியவர்களின் வீட்டில் தங்கினார். அவர்களின் வலிகளை காதுகொடுத்து கேட்டார். அவர்களுக்காகப் பேசினார். கொஞ்சம் கண்ணீரும் விட்டார். இவா தோன்றினாலே மக்கள் ஆரவாரம் செய்தார்கள். அப்பொழுதுதான் அது நடந்தது. ஒரு நாள் பெரோனை ராணுவம் கைது செய்தது, சிறை அடைத்தார்கள். ஆட்சி நமதே என கொக்கரித்தார்கள்.

இவா நடுவில் நின்றார். மக்கள் கூட்டத்தை, தொழிலாளர் சங்கங்களை திரட்டினார். நான்கு லட்சம் பேர் அளவுக்குக் கூடி பொங்கினார்கள். ஞானத்தாய் என்கிற அளவுக்கு மக்கள் எவாவை கொண்டாட ஆரம்பித்தார்கள். மேல்சட்டையை தூக்கி எறிந்துவிட்டு தொழிலாளர்கள் பெரோனுக்கு குரல் கொடுக்க விடுதலையானார் அவர். நான்கு மாதத்தில் நடந்த தேர்தலில் ஜனாதிபதி ஆனார்.

இவாவுக்கு ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தது. சட்டப்படி மனைவியாக இல்லாதவர்களின் பிள்ளைகளுக்கு உரிமைகள் இல்லை என்பதை மாற்ற வைத்தார். பெண்களுக்கு வாக்குரிமை வாங்கித்தந்தார். அவரை மானே தேனே என புகழ்ந்து எனும் பத்திரிகைகளுக்கு மட்டும்தான் நாட்டில் இடம். மற்றது எல்லாம் கிளம்ப வேண்டியது தான். இதெல்லாம் நடந்தது முப்பது வயதுக்குள். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். துணை ஜனாதிபதி ஆகியிருக்க வேண்டியது; விதி முந்திக்கொண்டது. 

முப்பத்தி மூன்று வயதில் புற்றுநோயால் இறந்து போனார் இவா. நாடே ஸ்தம்பித்தது. இருபது லட்சம் பேர் வரிசையில் நின்று ஏழை வீட்டில் இருந்து வந்து எளியவர்களுக்காக கண்ணீர் சிந்திய தங்களின் மகளை பார்த்து அழுதார்கள். ஒருவருக்கு அரை நிமிஷத்துக்கும் குறைவான நேரமே பார்க்க கிடைத்தது. நாடு முழுக்க எல்லாமும் நின்று போனது. மலர்க்கடைகள் காலியாகி இருந்தன. ஒரு குவளை தண்ணீரே கிடைக்க பாடுபட வேண்டியிருந்தது. இவா நம்மூர் எம்ஜிஆர் போல அந்நாட்டில் அசைக்க முடியாத பிம்பம் அவர்.

இவாவை ஆராதித்தால் மக்கள் உங்களையும் கொண்டாடுவார்கள். அறுபது வருடங்கள் ஆகியும் மக்களின் நெஞ்சில் நிறைந்திருக்கிறார் அவர். இன்று - மே 7 : அவரின் பிறந்தநாள்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...