மசாஜ் சிகிச்சையின் நன்மைகள்
1. மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. அப்பகுதிக்கு அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது.
*
2. மென்மையான மசாஜ் நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து அவற்றுக்கு இதமளிக்கும். சற்று கடுமையான மசாஜ் தளர்ந்த நரம்புகளைத் தூண்டி அவற்றின் திறனை அதிகரிக்கும்.
*
3. கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு கழிவுகள் நன்கு வெளியேறும். கல்லீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.
*
4.முறையான மசாஜ் இருதய சுமையைக் குறைக்கும்.
*
5. தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளிலிருந்து அந்த லாக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன் மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.
*
6. மசாஜால் தோலிலுள்ள நுண்துளைகள் திறக்கப்பட்டு வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.
***
மசாஜ் செய்யும் முறை :
கை கால்களிலிருந்து மசாஜை துவங்கவேண்டும். அடுத்து நெஞ்சு, கீழ்வயிறு, பின்புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்யவேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்ய துணியைப் பயன்படுத்தலாம். மசாஜøக்குப் பின் குளிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் நனைந்த துணியால் உடம்பைத் துடைக்கலாம்.
உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்கவேண்டும்.
***
எப்போது மசாஜை தவிர்க்க வேண்டும்?
காய்ச்சலின் போது, கர்ப்பகாலத்தில் கூடாது. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சனை, கட்டிகள் இருந்தால் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது. தோல்வியாதிகள் உள்ளவருக்கு மசாஜ் ஏற்றதல்ல.
***
அரசு மருத்துவமனையில் மசாஜ்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா பிரிவில் நோயாளிகளுக்கு எளிய மற்றும் நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ராமநாதபுரம், கமுதி, பரமக்குடி, கீழக்கரை, முதுகுளத்தூர் மருத்துவமனைகளின் சித்தா பிரிவில் நடைபயிற்சி எந்திரம், நீராவி குளியல் எந்திரம், சைக்கிளிங் எந்திரம், ஆகியவையும் உடல் மசாஜ் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
*
இது குறித்து மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் Dr. அருணாசலம் கூறியிருப்பது :
1. மனித உடலிலுள்ள நாடி நரம்புகள் தூண்டப்பட்டு புத்துயிர் ஊட்டுவதற்காக நவீன முறையில் தற்போது மசாஜ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மசாஜ் செய்வதின் மூலம் உடம்பிலுள்ள கழிவுகள் வெளியேறும்.
*
2. வெளிநோயாளிகளுக்கு நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் பயிற்சியும் உள்நோயாளிகளுக்கு நீராவி குளியல் சிகிச்சையும் அளிக்கப்படும்.
*
3. நடை மற்றும் சைக்கிளிங் பயிற்சி குறிப்பிட்ட நாட்களுக்கு தொடர்ந்து செய்யவேண்டும். மேலும் கால், கை, மூட்டு தலை போன்ற வலிகளுக்கும் நவீனமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
***
மசாஜ் கிளப்புகள் நடத்தத் தடையில்லை
உயர்நீதி மன்றம் தீர்ப்பு
இன்புளூவன்ஸ் லைப் ஸ்டைல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நரேஷ்குமார் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் ஹோட்டலுக்கு அருகே இன்புளூயன்ஸ் ஸ்பா என்ற பெயரில் நாங்கள் மசாஜ் கிளப் நடத்தி வருகிறோம். இங்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் என்று இருபாலருக்கும் மசாஜ் செய்யப்படுகிறது. இது சட்டவிரோதமான செயலில்லை. உலகம் முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. முக்கியமான மருத்துவமனைகளிலும் இதுபோன்ற மசாஜ் செய்யப்படுகிறது. எனவே எங்கள் நிறுவனத்தைத் தொடர்ந்து அமைதியாக நடத்துவதில் காவல்துறையினர் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவுக்குப் பதிலளித்து காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவில், மசாஜ் நிலையங்களை நடத்துவதற்கு காவல்துறையினரிடம் சட்டப்படி உரிமம் பெறவேண்டும். பொதுநலனைக் கருத்தில் கொண்டும், சமூக ஒழுக்கத்திற்காகவும், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காகவும் மசாஜ் மையங்களுக்குச் சில கட்டுப்பாடுகள் அவசியம். மனுதாரர் தன் மசாஜ் கிளப்பில் டீன் ஏஜ் பெண்களை வைத்து மசாஜ் செய்தால் அங்கு வரும் நபர்கள் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடலாம். இதுபோன்ற மசாஜ் பார்லர்களை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிபதி கே. சந்துரு அளித்த தீர்ப்பில் ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மசாஜ் செய்யும் ஹெல்த் கிளப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டம் ஏதுமில்லை. சென்னை மாநகர காவல்துறை சட்டத்திலும் இதுபோன்ற மசாஜ் மையங்கள் செயல்படுவதைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதிலிருந்து மசாஜ் மையங்கள் செயல்படுவதை தடுக்கக் காவல்துறைக்கு சட்டப்பூர்வமான உரிமையில்லை என்பது தெளிவாகிறது. இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும் மசாஜ் பார்லர் நடத்தலாம். அதே நேரத்தில் அந்த மசாஜ் மையங்களை ஆய்வு செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தால் சம்பந்தப்பட்ட மசாஜ் மையங்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு எந்தத் தடையுமில்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment