May 12, 2012

தலைக்கு ஷாம்பு போடுகிறீர்களா?

தலைக்கு ஷாம்பு போடுகிறீர்களா? ( ஆலோசனைகள் )

கூந்தலின் மணம் இயற்கையானதா இல்லையா என்று மன்னனுக்கே சந்தேகம் வந்ததாகச் சொல்கிறது புராணம். அத்தனை பெருமை வாய்ந்த கூந்தலைப் பராமரிக்க வேண்டாமா?



‘ஓ! பராமரிக்கிறேனே..’ என்று சிலர் தினம் தினம் ஷாம்பூ போட்டு தலைக்குக் குளிப்பார்கள். ‘‘கூந்தலுக்குத் துன்பம் விளைவிக்கக்கூடிய செயல் இதுபோல வேறெதுவுமில்லை..’’ என்று அதிர்ச்சித் தகவல் தருகிறார், சென்னையில் ரம்யாஸ் பியூட்டி பார்லர் நடத்துகிற சந்தியா செல்வி.

*

‘‘பல வருடங்களுக்கு முன்பு பிரபல கூந்தல் பராமரிப்பு நிறுவனம் ஒன்று அழகுக் கலைஞர்களுக்காக சென்னையில் ஒரு ‘வொர்க்ஷாப்’ நடத்தியது. நானும் கலந்து கொண்டேன். அங்கே வைக்கப்பட்டிருந்த நுண்ணோக்கியில் என் தலையைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். அன்றுதான் ஷாம்பூ போட்டுக் குளித்திருந்த என் மண்டையில் (முடியில் அல்ல) நன்றாக ஒட்டிக் கொண்டு, கூந்தலின் வேர்க்கால்களை அடைத்தபடி இருந்தது ஷாம்பூ.

*

இத்தனைக்கும், ஷாம்பூவை அலச குறைந்தது இரண்டு பக்கெட் தண்ணீராவது தலைக்கு மட்டும் ஊற்றுகிறவள் நான். அன்றும் அப்படித்தான் ஊற்றியிருந்தேன். ஆனாலும், ஷாம்பூ அதற்கெல்லாம் பெப்பே காட்டிவிட்டு மண்டையிலேயே சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துவிட்டது.

*

வொர்க்ஷாப்புக்கு வந்திருந்த கூந்தல் பராமரிப்பு நிபுணரிடம் இதுபற்றி நான் கவலையோடு விசாரித்தபோது,

1. ‘ஷாம்பூவை அப்படியே தலையில் தேய்த்துக் கொள்ளக் கூடாது. அப்படி செய்தால் மண்டையில் அது அப்பிக் கொள்ளத்தான் செய்யும்.

*

2. தினமும் இப்படி ஷாம்பூ போட்டு குளித்தீர்கள் என்றால், நாற்பது நாற்பத்தைந்து வயதிலேயே வழுக்கை விழுந்துவிடும்’ என்றார்.

*

3. சரி, ஷாம்பூவை எப்படித்தான் உபயோகிப்பது என்று நான் கேட்டதற்கு, ‘ஷாம்பூவில் தண்ணீரைக் கலந்து நன்றாக நுரை வரும்படி கலக்கிக்கொள்ள வேண்டும், பிறகே, தலையில் வைத்துத் தேய்க்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் நீங்கள் எதிர்பார்க்கும் நல்லவிளைவை அது தரும். இல்லையேல் கூந்தலுக்கு ஆபத்துதான்..’ என்றார் அந்த நிபுணர்.

*

அன்றைய தினத்திலிருந்து ஷாம்பூவை அவர் சொன்ன முறையில் தான் பயன்படுத்துகிறேன். முடி அதிகம் உதிரவில்லை என்பதையும் கண்கூடாகப் பார்க்கிறேன்..’’ என்கிற சந்தியா செல்வி,


***

கூந்தல் பராமரிப்புக்காக மேலும் சொன்ன சில டிப்ஸ்:

1. எப்போதும், என்ன அவசரமாக இருந்தாலும் ஈரத்துடன் தலையை வாரக் கூடாது. டவலால் நன்றாகத் துடைத்து, ஈரம் போய் உலர்ந்தவுடன், நல்ல தரமான பெரிய பற்களுடைய சீப்பினால் வாரி சிக்கெடுக்க வேண்டும். மரச்சீப்பு அல்லது நைலான் பிரஷ்ஷால் வாருவது மிகவும் நல்லது.

*

2. கண்டிப்பாக, வாரம் இருமுறையாவது தலையை அலச வேண்டும்.


*

3. மாதம் ஒருமுறை கூந்தலின் அடிப்பகுதியை ‘ட்ரிம்’ செய்துகொண்டால் வெடிப்பு விழாமல் தடுக்கலாம்.

*

4. இரவு படுக்கும்முன், கூந்தலை மென்மையான ப்ரஷ்ஷினால் வாரி, பின்னாமல் அப்படியே விட்டு விட்டுப் படுக்க வேண்டும். இது தலைமுடி நன்கு வளர உதவும்.

*

5. அடிக்கடி ட்ரையர் உபயோகிப்பது நல்லதல்ல. வேண்டுமானால், டவலால் நன்கு துடைத்து ஈரம் போன பிறகே, உபயோகிக்கலாம்.

*

6. கூந்தலை ப்ளீச் செய்வது, கலர் பண்ணுவது, சுருளாக்குவது, நீளமாக்குவது போன்றவற்றை ஏதாவது விழா, விசேஷத்துக்கென்று செய்யலாமே தவிர, அடிக்கடி செய்யக் கூடாது. ஹேேர் ஸ்ப்ரே உபயோகித்திருந்தால் இரவு படுக்கும் முன் தலையை அலசுவது நல்லது. அசதியாக இருந்தால் மறுநாளாவது அலசிவிட வேண்டும்.

***


நரைத்துப் போகிறது தவிர்க்க எளிய சிகிச்சை முறை:

இப்போதெல்லாம் பத்து, பதினோரு வயது குழந்தைகளுக்குக்கூட நரைத்துப் போகிறது. இதைத் தவிர்க்கவும் எளிய சிகிச்சை முறை ஒன்றைச் சொல்கிறார் சந்தியா செல்வி..


1. ‘‘மருதாணி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை எல்லாமும் தலா 4 கைப்பிடி, பெரிய நெல்லிக்காய் அரை கிலோ.. இவற்றை நன்றாக அரைத்துச் சாறெடுங்கள். இதனுடன் தண்ணீர் கலக்காத திக்கான தேங்காய்ப் பால் 4 லிட்டர் அல்லது தேங்காய் எண்ணெய் 1 கிலோ கலந்து நன்கு காய்ச்சினால் கரும்பச்சை நிறத்தில் எண்ணெய் கிடைக்கும்.

*

2. இந்த எண்ணெயைத் தொடர்ந்து தடவி வந்தால் சில வாரங்களிலேயே நரை கூந்தல் அத்தனையும் கருங்கூந்தலாக மாறிவிடும். சிறு வயது முதலே குழந்தைகளுக்குத் தடவி வந்தால் கூந்தல் அத்தனை சீக்கிரத்தில் நரைக்காது..’’

*

3. உங்கள் செல்ல மகளின் பெரிய பெரிய ஆசைகளில் பரு இல்லாத முகமும் ஒன்றுதானே.. நீங்களும்தான் மார்க்கெட்டில் அறிமுகமாகிற எல்லா க்ரீம்களையும் போட்டுப் பார்த்துவிட்டீர்கள். அப்படியும் பரு இன்னும் அதிகரித்திருப்பது மாதிரிதான் தோன்றுகிறதே தவிர, ஒருபலனும் இல்லை என்றா கவலைப்படுகிறீர்கள்?

*

4. ‘‘கவலைவேண்டாம்.. அதற்கும் எளிய சிகிச்சை ஒன்று இருக்கிறது. நான் சொல்கிற சிகிச்சையை அவளுக்குச் செய்துவிடுங்கள். பிறகு பாருங்கள்.. ‘என் வெல்லக் கட்டி அம்மாவே’ என்று உங்களைக் கொண்டாடப் போகிறாள்..’’ என்கிறார் சந்தியா செல்வி.

*

5. ‘‘துளசி, புதினா, வேப்பிலை மூன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஜூஸ் ஆக்குங்கள். பச்சை பயறு மாவுடன் கொஞ்சம் வேப்பிலையை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து முகத்தைத் துடையுங்கள். பிறகு, துளசி + புதினா + வேப்பிலை சாற்றினை எடுத்து முகத்தில் தடவி மிகமிக மென்மையாக பத்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். கவனம்.. அழுத்தித் தேய்த்துவிடக்கூடாது.

*

6. பிறகு, பச்சைப் பயறுடன் கலந்த வேப்பிலையை முகத்தில் போட்டு, காய்ந்ததும் முகம் கழுவுங்கள். இதை வாரம் ஒருமுறை செய்தால் முகப்பருவுக்கு வைக்கலாம் ஒரு பெரிய முற்றுப்புள்ளி.

*

7. ‘என்னால் இவ்வளவு நேரமெல்லாம் ஒதுக்க முடியாது’ என்கிறவர்களுக்கு.. தண்ணீரை நன்றாகக் கொதிக்க வையுங்கள். அதில் வேப்பிலை இலைகளைப் போட்டு ஆறியவுடன் அந்தத் தண்ணீரில் தினமும் முகம் கழுவுங்கள். அதோடு, மாதம் இருமுறை துளசி இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு, அந்த ஆவியில் முகத்தைக் காட்டுங்கள். இந்த இரண்டையும் தொடர்ந்து செய்தாலே நல்ல வித்தியாசம் தெரியும்.

*

8. ஜாதிக்காய், சந்தனம் சிறிது எடுத்து நன்கு அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து முகம் அலம்பினாலும் பரு ஓடிப் போகும். ஜாதிக்காய், முகப்பருவை குறைப்பதுடன் கருமையையும் நீக்கும். முகப்பரு உள்ள இடத்தில் மட்டும் கிராம்பு அரைத்துப் போடுங்கள். பரு இல்லாத பகுதியில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

*

9. சிலருக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள் இருக்கும். அதற்கு கரகரவென்று அரைத்த பச்சரிசி மாவுடன் பன்னீர் கலந்து மூக்கு மற்றும் தாடை ஓரம் மென்மையாகத் தேய்த்தால் கரும்புள்ளிகள் காணாமல் போகும்..’’

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...