பெண்ணுக்கு இளமை எதுவரை? ( டாக்டர் கௌசல்யா நாதன் )
உடல் பருமனுக்கான காரணங்கள், அதைத் தவிர்ப்பதற்கான
விஷயங்கள் குறித்து இங்கே நமது கேள்விகளுக்கு நறுக்குத் தெறித்தாற்போல் பதில் கூறியிருப்பவர் டாக்டர் கௌசல்யா நாதன். சென்னையிலிருக்கும் அப்பல்லோ மற்றும் மலர் மருத்துவமனைகளில் வயது நிர்வாக மருத்துவ நிபுணரான டாக்டர் கௌசல்யா இனி உங்களுடன்…
*
பொதுவாகவே நம் பெண்கள் பக்தியை வெளிப்படுத்துவதற்காக நாளுக்கொரு கடவுளுக்கு விரதம் இருப்பார்கள். விரதம் இல்லாத நாட்களிலும் சராசரி குடும்பத்தில் இருக்கும் பெண்கள் உணவு உண்பதில் ஆர்வம் காட்டாமல்தானே இருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு உடல் பருமன் ஏன்?
விரதம் இருக்கும் நாட்களிலும் பழங்கள் சாப்பிடலாம். பாயசம், சூப்.. என ஏதாவது குடிக்கலாம். எதுவுமே சாப்பிடாமல் இருந்தால், நம் உடலில் ஹார்மோன்களின் சுழற்சி சமச்சீராக இருக்காது.
*
வயிற்றில் சுரக்கும் அமிலங்களால் பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. 18 முதல் 40 வயது நிலைகளில் இருக்கும் பெண்கள் பெரும்பாலோர்க்கு உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது.
***
“உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்று ஒüவையார் கூறியது தெரிந்தோ என்னமோ.. இன்றைய இளம் பெண்கள் குண்டாகி விடக்கூடாது என்பதில் ரொம்பக் கவனமாக இருந்து, அநியாயத்திற்கு மெலிதான உடல்வாகுடன் இருப்பது சரியா?
குண்டாகி விடக்கூடாது என்பதில் விழிப்புணர்வுடன் இருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். அதற்காகப் பிறர் பரிதாபப்படும் அளவுக்கு மெலிந்து போய்விட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஒவ்வொருவரின் உயரத்திற்கு ஏற்ற எடையை, அந்தந்த வயது நிலைகளுக்கு ஏற்ப கடைப்பிடிக்க வேண்டும்.
*
ஒருபக்கம் வீட்டில் தயாராகும் உணவுகளைக் குண்டாகிவிடுவோம் என்ற காரணத்துக்காகத் தவிர்க்கும் இன்றைய இளம் பெண்கள், துரித வகை உணவுகள், ஏற்கனவே தயார் செய்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், பர்கர், பீட்ஸô, பாஸ்தா, குளிர்பானங்கள்…,
*
என நமது உணவுப் பழக்கத்தில் இல்லாத உணவுகளை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணவுப் பழக்கங்களிலும் இன்றைய இளம் பெண்கள் தகுந்த விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும். இந்த மாதிரியான உணவுப் பழக்கங்கள் அவர்களை நிச்சயம் உடல் பருமன் பிரச்சினையில்தான் கொண்டு போய்விடும்.
***
உடல் பருமன் இந்தியாவில் மட்டுமே உள்ள பிரச்சினையா அல்லது உலகம் முழுவதும் உள்ள பிரச்சினையா?
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவில் 60 சதவீதத்தினருக்கு இந்த உடல் பருமன் பிரச்சினை இருக்கிறது. இந்தியாவில் 40 சதவிதத்தினருக்கு இருக்கிறது.
***
உடல் பருமனுக்கு தைராய்ட் பிரச்சினை முக்கியக் காரணமா?
அதுவும் ஒரு காரணம். தைராய்ட் பிரச்சினையைத் தவிர, பெண்களுக்கு வரும் பாலிசிஸ்டிக் ஓவரிஸ் நோய், மெனோபாஸ் காலங்களும் உடல் பருமன் நோய்க்கான இதர காரணங்கள்.
***
இது பரம்பரையாகத் தொடரும் நோயா?
பெரும்பாலும் உடல் பருமனுக்குப் பரம்பரை தொடர்பான காரணங்களும் இருக்கின்றன. இது தவிர, தூக்கமின்மை, ஒருவர் எந்தமாதிரியான பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் முக்கியம்.
*
ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி செய்யும் பணியிலிருப்பவர்களுக்கும், ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த நோய் அதிகம் இருக்கிறது. இதுதவிர, மன அழுத்தம், பதட்டத்தில் இருப்பதும்கூட உடல் பருமனுக்குக் காரணமாகிறது.
***
இது வயதினால் வரும் கோளாறா?
ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி பொதுவாக 40 வயதை நெருங்கும் போது கொஞ்சம் சதை போடும்தான். ஆண்களை விட பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் பருவம் முடியும்போது, சமச்சீரற்ற ஹார்மோன் பெருக்கத்தால் இடுப்பு, தொடை பகுதிகளில் சதை அதிகளவு போடும். வயதை ஒரு காரணமாகச் சொல்லலாமே தவிர அதுவே காரணமாகிவிடாது. சின்னச் சின்ன குழந்தைகளுக்குக்கூட உடல் பருமன் நோய் இருக்கிறது!
***
இந்த நோயிலிருந்து எப்படி ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்?
ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 8-லிருந்து 10 டம்ளர் தண்ணீரை அருந்துங்கள். சில பெண்கள் இரவுப் பொழுதில் எதுவும் சாப்பிடாமல் தூங்குவார்கள். சில பேர் சாப்பாடு பாழாகிவிடக்கூடாதே என்பதற்காக, இருப்பதை எல்லாம் சாப்பிட்டு முடிப்பார்கள். பட்டினியாகப் படுப்பதும் தவறு. அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டுப் படுப்பதும் தவறு.
*
ஒருசிலர் தலைவலி முதல் எந்தப் பிரச்சினை வந்தாலும் மருத்துவர்களை நாடாமல் அவர்களாகவே ஏதாவது மருந்து மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொண்டு சமாளித்து விடலாம் என்று நினைப்பார்கள். இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.
*
அடிக்கடி இனிப்பு வகைகளைச் சாப்பிடுவது உடல் பருமனை வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பது மாதிரி அமைந்துவிடும். மாதத்திற்கு ஓரிரு முறை தரமான இனிப்பு வகைகளை, ஐஸ் க்ரீமை ருசிக்கலாம்.
*
காபி, டீக்கு சர்க்கரைப் போட்டு குடிப்பதைவிட வெல்லம் போட்டுக் குடியுங்கள். மது, சிகரெட் போன்ற எந்த கெட்ட பழக்கம் இருந்தாலும் அதை விட்டொழிப்பது நல்லது.
*
சுத்திகரிக்கப்பட்ட கார்போ-ஹைட்ரேட் உணவுகளான மைதா, கோதுமை, பாசுமதி அரிசி போன்றவற்றையும், நொறுக்குத் தீனிகளான நூடுல்ஸ், பீட்ஸô, சிப்ஸ் போன்றவற்றையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
***
சில ஹெல்த்-சென்டர்களில் உடல் பருமனைக் குறைக்க மூன்று வேளை உணவுக்குப் பதில், ஐந்து வேளை உணவு உண்ணும் முறையைப் பரிந்துரைப்பது சரியா?
மூன்று வேளை உணவு; இரண்டு வேளை ஸ்நாக்ஸ் என்னும் அடிப்படையில் அப்படி சொல்லியிருப்பார்கள். பொதுவாக 90 கிலோவிலிருந்து 130 கிலோ எடை வரை இருப்பவர்களுக்கென்று பலவிதமான குணப்படுத்தும் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
*
அதில் இதுவும் ஒன்று. நீங்கள் சாப்பிடும் உணவு குறித்த நேரத்தில் சக்தியாக மாற்றப்பட வேண்டும். உணவின் மூலமாகக் கிடைக்கும் கலோரி எரிக்கப்பட வேண்டும். உடல் உழைப்பு இல்லாத நேரத்தில் நம் உடலில் தங்கும் அதீத கொழுப்பு உடல் பருமனுக்குக் காரணமாகிறது.
***
பரதநாட்டியம் கற்றுக் கொண்டு பாதியில் நிறுத்தி விடுவது, விளையாட்டில் ஈடுபட்டு பாதியில் நிறுத்திவிடுவது போன்ற காரணத்தால் கூட உடல் குண்டாகிவிடுமா?
எட்டு இட்லி சாப்பிட்டுவிட்டு பரதநாட்டியம் ஆடியிருப்பீர்கள் அல்லது ஒரு கேம் டென்னிஸ் ஆடியிருப்பீர்கள். நாளடைவில் விளையாட்டை, நடனத்தை உங்களால் தொடரமுடியாத சூழ்நிலை ஏற்படலாம்.
*
அப்போது என்ன ஆகும்? பரதநாட்டியம் ஆட மாட்டீர்கள். ஆனால் வழக்கம் போல் எட்டு இட்லியைச் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவே மாட்டீர்கள். நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற உணவைப் பழகிக் கொண்டீர்கள் என்றால், அதிலேயே உடல் பருமன் பிரச்சினைக்குப் பாதி விடை கிடைத்துவிடும்.
***
“பெண்ணுக்கு இளமை எதுவரை? பிள்ளைகள் இரண்டு பெறும் வரை..’ என்கிறது கண்ணதாசனின் ஒரு திரைப்பாடல். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இளமை மனதுக்கா, உடலுக்கா? என்பதை நாம் யோசிக்க வேண்டும். அகத்தின் அழகுதான் முகத்தில் தெரிகிறது. நம் மனதை எந்தளவுக்குப் பக்குவமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். வயதின் காரணமாகப் புற அழகில் எத்தனையோ மாறுதல்கள் நடக்கும்தான்.
*
30 வயதிலிருப்பவர்கள் 50 வயதானவர்களைப் போல் தளர்ந்து போய், சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது.
*
30 வயதிலிருப்பவர்கள் அந்த வயதுக்குரிய அழகுடனும், தெளிவுடனும் இருந்தாலே போதும்.
*
பெண்களுக்குத் தன்னம்பிக்கைதான் என்றைக்கும் அழகு.
***
No comments:
Post a Comment