கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 நவம்பர், 2012 - 11:48 ஜிஎம்டி
மத்தியகிழக்கின் காசாவில்
ஹமாஸையும் அதன் ஆயுததாரிகளையும் இலக்குவைத்து நான்கு நாட்களாக தொடர்ந்து
குண்டுத் தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேலிய படைகள் காசாவுக்குள் தாங்கள்
மேலும் நூற்றுக்கணக்கான இலக்குகளைத் தாக்கவேண்டியிருப்பதாகக்
கூறுகிறது.காசாவை ஆண்டு வரும் ஹமாஸ் அமைப்பு சம்பந்தமான எந்த ஒரு இடத்தையும் தாங்கள் இலக்குவைத்து தாக்குவது நியாயம்தான் என்று அது தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் நோக்கி வந்த ஒரு ஏவுகணையை நடுவானிலேயே தங்கள் சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேலிகள் கூறுகின்றனர்.
காசாவில் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் அலுவலகம் அமைந்துள்ள ஹமாஸ் தலைமையகம் உட்பட பல்வேறு முக்கிய கட்டிடங்களை இலக்குவைத்து இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியிருந்தது.
காசா நகருக்கு வடக்கே ஜபாலியா நகரில் ஹமாஸ் தலைவர் ஒருவரின் வீடும் தாக்கப்பட்டுள்ளது.
வெள்ளியன்று பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் அலுவலகத்துக்குத்தான் எகிப்திய பிரதமர் ஹிஷாம் கண்டில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவுத் தலைவரை இஸ்ரேலிகள் கடந்த புதன்கிழமை கொன்றதில் ஆரம்பித்த இந்த மோதல்களில் இதுவரை குறைந்தது 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலிகள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதிலே வெள்ளி இரவு நடந்த தாக்குதல்களில் மட்டும் குறைந்தது எட்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ் அல் தின் அல் கஸ்ஸாம் ப்ரிகேட்ஸ் எனப்படும் ஹமாஸின் இராணுவப் பிரிவின் உறுப்பினர்கள் மூன்று பேரும் இறந்தவர்களில் அடங்குவர்.
No comments:
Post a Comment