Nov 17, 2012

ஸ்கிப்பிங்கை ஸ்கிப் பண்ணாதீங்க!

''ஸ்கிப்பிங்கா? அட அதெல்லாம் சின்னப் பசங்க சமாச்சாரம்''னு நெனைச்சுப் பக்கத்தைப் புரட்டாதீங்க... சும்மா ஜாலியா 10 நிமிஷம் ஸ்கிப்பிங் செய்தாலே 100 கலோரிகள் வரை எரிக்க முடியும். கயிறாட்டம் எனத் தமிழில் சொல்லப்படும், செலவே இல்லாத இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை முறையாக எப்படிச் செய்வது? விரிவாகச் சொல்கிறார் ஃபிட்னஸ் பயிற்சியாளர் மகேந்திரன்.
''நமக்கு ஏற்ற ஸ்கிப்பிங் கயிறை எப்படித் தேர்ந்தெடுப்பது?''

''ஒரு ஸ்கிப்பிங் கயிறை எடுத்து அதைத் தரையில் நீள வாக்கில் கிடத்தி, பாதி அளவு நீளம் இருக்கும் இடத்தில் கயிற்றின் மீது நின்றுகொண்டு, கயிற்றின் இருமுனைகளையும் இரு கரங்களாலும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும்.

கயிற்றின் இரு முனைகளும் உங்கள் அக்குள் பகுதிவரை இருந்தால் அந்தக் கயிறுதான் உங்களுக்கு ஏற்ற கயிறு.''
''எப்படி ஸ்கிப்பிங் செய்ய வேண்டும்?''

''முதலில் நேராக நிற்க வேண்டும். பின்பு உங்களது ஸ்கிப்பிங் கயிறை உங்களது குதிக்காலின் கீழ் வைத்துக்கொள்ளவும். பின்பு மெதுவாகக் கயிறைச் சுழலவிட்டு அதன் வேகத்திற்கு ஏற்பக் கயிறைத் தாண்டித் தாண்டிக் குதிக்கவும்.  முதலில் மெதுவாக ஆரம்பித்து, பிறகு வேகத்தை சீராகக் அதிகரிக்க வேண்டும்.''
''ஸ்கிப்பிங்கில் எத்தனை வகைகள் உள்ளன?''

''சாதாரணமாகத் தாண்டி விளையாடுதல் தவிர்த்து, முன்புறமாகத் தாண்டுதல், பின்புறமாகத் தாண்டுதல், ஓடிக்கொண்டே தாண்டுதல், குறுக்கு வாக்கில் தாண்டுதல் எனப் பல வகைகள் உண்டு. சாதாரணமாகக் குதித்தல் தவிர மற்ற முறைகளை உரிய பயிற்சியுடன்தான் செய்ய வேண்டும்.''
''ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளும்போது கருத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?''

''இதய நோயாளிகள், இடுப்பு மற்றும் மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் ஸ்கிப்பிங் செய்யவேண்டும். புல்தரை, மணல் போன்ற மிருதுவான தரைப்பரப்பில்தான் ஸ்கிப்பிங் செய்ய வேண்டும். கான்கீரிட் போன்ற கடினமான தளங்களில் ஸ்கிப்பிங் செய்யக்கூடாது. அப்படிச் செய்யும்போது மூட்டுகளில் பிரச்னைகள் ஏற்படும். கட்டாயமாக ஷூ அணிந்து இருக்க வேண்டும். அவை பொருத்தமான அளவிலும் தரமானதாகவும் இருக்கவேண்டும். நாள் ஒன்றுக்குக் குறைந்தது 100 முறை தாண்டலாம். ஸ்கிப்பிங் செய்யும் இடம் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும்.
பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன் குறைவான ஆகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாகச் செய்யும்போது மற்றவர்களைவிட அதிகமுறை செய்கிறேன் பேர்வழி என மல்லுக்கட்டி நிறைய முறை செய்ய வேண்டாம். இறுக்கமான ஆடைகளை அணிந்து ஸ்கிப்பிங் செய்யக்கூடாது.''
''ஸ்கிப்பிங் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?''

''10 நிமிட ஸ்கிப்பிங் பயிற்சி, எட்டு நிமிடங்களில் ஒரு மைல் தூரம் ஓடியதற்குச் சமம். ஒரு மணி நேரத்தில் 1300 கலோரிகள் வரை எரிக்கலாம். உடல் வலிமை அதிகரிக்கும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். கூன் விழாமல் தடுக்கலாம். உடலுக்கும் மனதுக்கும் ஒரு சேரப் பயிற்சி கிடைப்பதால் மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற பிரச்னைகள் நீங்கி மனம் ஒருமுகப்படும்.
அதனால், சின்ன வயசுக்காரங்க யாரும் ஸ்கிப்பிங்கை ஸ்கிப் பண்ணக்கூடாது.'

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...