Aug 12, 2012

ஈரானில் பயங்கரம் இரட்டை நிலநடுக்கத்தில் 250 பேர் பரிதாப சாவு



துபாய் : ஈரானில் நேற்றுமுன்தினம் இரவு அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் 6 கிராமங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 250 பேர் இறந்தனர். 1800 பேர் காயமடைந்தனர். ஈரானில் சனிக்கிழமை இரவு 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டில் உள்ள மலைப்பாங்கான கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அஹார், வர்ஸகான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

டெப்ரிஸ் நகருக்கு வடகிழக்கே 60 கி.மீ. தொலை வில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. அடுத்த 11 நிமிடங்களில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.3 ரிக்டராக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. மலைப்பகுதி என்பதால், நிலநடுக்கத்தில் 6 கிராமங்கள் முற்றிலும் தரைமட்டமாகின. 60 கிராமங்களில் 50 சதவீதத்துக்கும் மேலாக கட்டிடங்கள் இடிந்தன. மொத்தம் 110 கிராமங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அந்நாட்டின் உள்துறை துணை அமைச்சர் ஹசன் கடாமி தெரிவித்தார்.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். வீடுகளை விட்டுவிட்டு வெளியே ஓடிவந்த மக்கள் இரவு முழுவதும் அச்சத்துடன் சாலையிலேயே காத்திருந்தனர். இன்னும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர் களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்களில் பலர் இன்னும் அபாயக் கட்டத்திலேயே உள்ளனர். எனவே இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கட்டட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டனர். ஆனால், இரவில் வெளிச்சம் இன்மையால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. துரதிஷ்டவசமாக இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இருளில் அவர்களை கண்டுபிடிக்க மிகுந்த சிரமம் ஏற்பட்டது என்று தேசிய பேரிடர் பாதுகாப்பு தலைவர் கோலம் ரெஸா மசோமி கூறினார்.

இதற்கிடையே, உள்துறை அமைச்சர் முஸ்தபா முகமது நஜ்ஜார் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி அவசரகால மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
ஈரான் நிலநடுக்கத்தில் இறந்த குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோரின் சடலங்கள் அஹார் பகுதியில் கிடத்தப்பட்டுள்ளது, அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போன்ற புகைப்படங்கள் செய்தி நிறுவனங்களின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

வர்ஸகான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் 2 டாக்டர்களே உள்ளதாகவும், காயமடைந்த 500 பேருக்கு சிகிச்சையளிக்க அவர்கள் போராடி வருவதாகவும், மருந்து மற்றும் உணவுப்பொருட்கள் குறைவாக இருப்பதாகவும் மெஹர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் நாடு கடுமையான நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதியில் உள்ளது. இங்கு கடந்த 2003,ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வரலாற்று சிறப்புவாய்ந்த பாம் நகரம் அழிந்தது. இதில் 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...